ஆன்ம ஞானம் பெற அதிசுலபமான அதிசய வழி!

yv1
Post No. 1035; Dated 11th May 2014.

By ச.நாகராஜன்

விளங்காத மர்மம் விளக்கும் அரிய நூல்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது, விதியா,முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம், மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது,பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும் இத்யாதி கேள்விகள் ஏராளம். விடை தான் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் ‘’யோக வாசிஷ்டம்’’. ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம்.

அதனால் தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர்.ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பெர்க்ஸன், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான்,சர் ஜேம்ஸ் ஜீன்ஸ்,வில்லியம் ஜேம்ஸ், சி.இ.எம்.ஜோட், ஆலிவர் லாட்ஜ், ஷோப்பன்ஹோவர், டபிள்யூ.ஆர்.இஞ்ஜே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

விதி என்பது இல்லவே இல்லை!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை- 2-5-18)
தைவம் ந வித்யதே (விதி என்பது இல்லவே இல்லை- 2-8-13)
மூடை: ப்ரகல்பிதம் தைவம் (மூடர்களால் உருவாக்கப்பட்ட தே விதி – 2-8-16) என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

yv2

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படிஅது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது!
மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப் படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது
யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி!

பிறப்பு,இறப்பு,கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு

இதற்கான அதிசய வழிகள் நான்கு!

சந்தோஷ: சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா I
ஏத ஏவ பவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம II (2-16-18)

சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்),விசாரம், அமைதி –இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ‘ஸ’காரங்களாக ஸந்தோஷம், ஸத் சங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொ:ள்ளலாம்.

சந்தோஷம்
விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன் ) இருக்கும் ஒருவனுக்கு பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்
மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர்.சூரிய ஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும்,புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும் போது!

விசாரம்
நான் யார்? (கோஹம்)உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது?( கதமயம் தோஷ: சம்ஸாராக்ய உபகத: 2-14-50) இப்படி தர்க்கரீதியாக விசாரம் செய்வதே விசாரம்!

சமஸ்தம்
அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத்தானே சுத்தப்படுத்துகிறது (ஸ்வயம் ஏவ ப்ரஸீததி)
ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
yv3

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது.இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32000 தான்!

அதி சுலப வழி விசாரமே

மேலே கூறிய நான்கு வழிகளில் மிக சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது, ‘நான் யார் என்று இடைவிடாது உன்னேக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும்’ என்பதே!
எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண், பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு,இனம்,மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே!

அதனால் தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி, அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்

“ஐயே!அதி சுலபம் – ஆன்மவித்தை
ஐயே! அதி சுலபம் “ என்று கூறி விளக்குகிறார்.
பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளைப் இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்!
na's BD

சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்:-
பொய் உருவான அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால்,

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே” என்றும்,

மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால்,
“இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே” என்றும்

உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? “தன்னைத் தன்னில்” உணர்ந்து விட்டல்,
“தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே; அருள் விலாசமே,அக விநாசமே; இன்பவிகாசமே” என்றும் ,

கர்மங்களின் கட்டு அவிழ,
“இம்மார்க்கம் மிக்கு எளிது! .. .. சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே: இராது பீதியே; இன்ப அம்போதியே” (இன்ப அம்போதி –ஆனந்தக் கடல்) என்றும்,

அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும்,
“உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே; அருளும் வேணுமே: அன்பு பூணுமே: இன்பு தோணுமே”
என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார்.

யோக வாசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான ‘நான் யார்’ என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன், “ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை” என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும், அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணி நம் மெய் சிலிர்க்கும்!
அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது … ..

“சுயமான்மா விளங்குமே;இருள் அடங்குமே;இடர் ஒடுங்குமே; இன்பம் பொங்குமே”
yv5

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயம் ஜூலை 2013 இதழில் வெளியான கட்டுரை

(This article was written by my brother S Nagarajan: swami)

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: