Picture of Chinese Zodiac Sign
by ச.நாகராஜன்
Post No. 1086 ; Dated 5th June 2014.
((First part of this article is published yesterday. Post No.1084: ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!))
சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!
சங்க இலக்கியக் கடலில் அற்புதமான ஜோதிட முத்துக்கள் ஏராளம் உள்ளன.மாதிரிக்குச் சில உண்மைகளைப் பார்ப்போம்.
சனி கிரகத்தை மைம்மீன் என சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அது புகையின் மழை பெய்யாதாம். ஆனால் அப்படிப்பட்ட மழை பெய்யாச் சூழ்நிலையிலும் கூட மன்னன் தனது செங்கோல் தப்பாது அரசாள்வதால் அவன் செங்கோல் சிறப்பாலேயே மழை பெய்கிறதாம்! இதைப் புறநானூறு (பாடல் 171) கூறுகிறது.பாடல் வரிகள் இதோ:-
மைம்மீன் புகையினும்.. .. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!
தூமகேதுவும் மழையும்
தூமகேதுவைப் பற்றித் தொன்று தொட்டு வழி வழியாக ஏராளமான நம்பிக்கைகள் உலகெங்கும் உண்டு. தமிழ் இலக்கியம் தூமகேது தோன்றின் மழை பெய்யாது;ஆனால் மன்னனின் செங்கோல் சிறப்பினால் மழை பெய்யும் என்று ‘செங்கோல் அறத்தின்’ சிறப்பினை எடுத்துக் கூறுகிறது. இந்தச் செய்தியை அதே பாட்டில் காணலாம். “தூமந் தோன்றினும்.. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!”
வைகை நதி அஷ்டமி போலச் சுருங்கும் அமாவாசை போல வறளாது!
வைகை நதியைப் பற்றிய சுவையான செய்தியைப் பரிபாடல் (பாடல்11;37-36)கூறுகிறது.
“எண்மதி நிறை யுவா இருண்மதி போல நாள்குறை படுதல் காணுநர் யாரே”
இதன் பொருள்: வைகை நதியின் நீர் அஷ்டமி போலச் சுருங்கும்;ஆனால் அமாவாசை போலச் சுருங்காது!
Picture of Burmese Zodiac Sign
வாஸ்து ஜோதிடம்
மன்னன் அரண்மனை கட்டக் கால் கோள் நாள் பார்த்தல்
மன்னனின் அரண்மனையைக் கட்ட வாஸ்து பார்த்து ஜோதிடம் மூலம் நாள் பார்த்துக் கட்டக் கால்கோள் நாளைப் பற்றி நெடுநல்வாடை (73-78 வரிகள்) அழகுறச் சொல்லுகிறது.
“விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோள் குறிநிலை வழுக்காது குடக்கோ
பொருதிறஞ் சாரா அரை நாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து”
பெரும்பெயர் அரசனுக்கு நூலறி புலவர் கயிறிட்டு, தெய்வம் நோக்கி அரண்மனை கட்டுவதை எப்படி அழகுறச் சொல்கிறார் புலவர்!
பூரி ஜகந்நாதர் ஆலயமும் கில்லாரி நீலகண்டர் ஆலயமும்
ஜோதிடம் மூலம் நாள் கணித்து வாஸ்து சாஸ்திரப் படி அரண்மனைகளையும் கோவில்களையும் இதர கட்டிடங்களையும் பாரத தேசம் முழுவதும் அனைவரும் கட்டி வந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எப்படி வலிமை வாய்ந்தவையாக இருந்தன என்பதற்கும் சமுதாய மக்களுக்கு எப்படி உதவின என்பதற்கும் உதாரணமாக (இடத்தைக் கருதி) இரு சம்பவங்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டலாம்.
பழைய வானியலானது ககோளம் என நமது சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்படுகிறது.இதையும் கருத்தில் கொண்டே கட்டிடங்கள் அமைக்கப்பட்டன!ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டிட வேலைகளை தெய்வீகப் பணியாகக் கருதி ஸ்தபதிகளும் பணியாளர்களும் அதில் ஈடுபடுவது வழக்கம். இப்படிக் கட்டப்பட்ட ஒன்று தான் பூரி ஜகன்னாதர் கோவில்.
30-10-99 தேதியிட்ட டெலகிராப் பத்திரிகை தரும் அதிசயச் செய்தி அறிக்கையில்.”மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் புயல் (இந்த வேகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம்) ஒரிஸாவைச் சேர்ந்த ஜகத்சிங்பூர், பூரி, பலோசோர், பட்ரக், கஞ்சம், குர்தா,, கட்டாக், கேந்த்ரபாரா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களைத் தாக்கியதாகவும், வேகமான காற்று பூரி ஜகந்நாதர் ஆலயத்தை நோக்கி வீசத் தொடங்கிய போது ஒரு நீல ஒளி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து கிளம்பி புயல் காற்றை வெட்டித் தடுத்து ஆலயத்தைக் காத்ததாகவும் கூறுகிறது. ஒவ்வொரு புயலின் போதும் ஆலயங்களையே புகலிடமாக மக்கள் சென்று அடையும் ஒரு உண்மையே அந்த ஆலயங்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவையாக அமைக்கப்பட்டன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.
1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி லட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்தை பிரிட்டிஷ் நிபுணர்கள் ஒரு ஹைட்ரஜன் குண்டு போடப்பட்டதற்கு சமமாக ஒப்பிடுகின்றனர். இந்த பூகம்பத்தில் பூகம்பம் ஏற்பட்ட மையத்தின் அருகில் இருந்த கில்லாரி என்ற சிற்றூரில் இருந்த நீலகண்டர் ஆலயம் மட்டும் சேதம் அடையாமல் இருந்தது எப்படி என்பதை எண்ணி விஞ்ஞானிகள் மற்றும் பூகம்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் வியக்கின்றனர்.
ஆக சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வலிமை வாய்ந்த அரண்மணைகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் விரும்பி அமைத்தது சரிதான்! அதையே நெடுநல்வாடை சுட்டிக் காட்டுகிறது!
நிமித்தமும் சகுனங்களும்
இன்னும் ஜோதிடத்துடன் தொடர்பு கொண்ட சாமுத்திரிகா லட்சணம்,நிமித்தம்,திருமணச் சடங்குகள் போன்ற பல ஹிந்து வாழ்க்கை முறை சம்பந்தமான பொருள்களை எடுத்துக் கொண்டால் மேலும் பல நூற்றுக் கணக்கான குறிப்புகளைச் சங்க இலக்கியம் தருகிறது.
நிமித்தங்களில் தான் எத்தனை வகை! பொழுது நிமித்தம் (புறநானூறு-204), நாள் நிமித்தம் (தொல்காப்பியம் 1037) பறவை நிமித்தம் (தொல்காப்பியம் 1037) இவை போன்றவற்றை ஏராளமான பாடல்களில் காணலாம். அசரீரி என சொல்லப்படும்‘யாரிடமிருந்தோ வரும் நல்ல சொல்லை’ நன்மொழி என முல்லைப்பாட்டு (16-17)சுட்டிக் காட்டுகிறது.
காக்கை கரைந்தால் விருந்து வரும் (குறுந்தொகை 210), ஆண் ஓந்தி வலம் வந்தால் வழிப்பயணம் நலம் பயக்கும் (குறுந்தொகை 140),கனவில் படைக்கலம் கட்டிலுடன் கவிழுதல்,எட்டுத்திக்கிலும் எரிகொள்ளி விழுதல்,மரக்கிளை வற்றுதல் (புறம் 41),கனவில் தலையில் எண்ணெய் தேய்த்தல்(புறம் 41) போன்றவை தீமை பயக்குமாம்! பெண்களின் இடதுகண் துடித்தால் நல்ல நிமித்தமாம்.
(ஐங்குறுநூறு 218); பெண்களின் வளை இறுகினால் நல்ல நிமித்தமாம் (ஐங்குறுநூறு 218) இப்படி நூற்றுக்கணக்கான குறிப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்து கிரகணத்தைப் பற்றிய தமிழரின் அறிவு உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளே வியக்கும் ஒன்று. இதைக் கணிக்கும் பஞ்சாங்கம் பற்றிப் பகுத்தறிவாளர்களுக்கு எப்போதுமே ஒரு இளப்பம் தான்!
இதற்கு அடுத்த கட்டுரை தமிழனின் பஞ்சாங்கம் பற்றியது. அது ஏற்கனவே இங்கே வெளியிடப்பது.
You must be logged in to post a comment.