Written by London Swaminathan (As told by Sri M N Kalyana Sundaram, London)
Post No. 1092 ; 8th June 2014
விஸ்வாமித்ரர் புகழ் பற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால் தவத்தினால் பிரம்ம ரிஷி (பிராமண குல)யாக உயர்ந்தவர். அதுவும் “வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” பட்டம் பெற்றவர். ஆனால் இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வசிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். காம சுகம், அஹங்காரம், கோபம் ஆகிய மூன்று எதிரிகளால் மூன்று முறை தோல்வி அடைந்து இறுதியில் மீண்டும் தவம் இயற்றி பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார்.
.
வசிட்ட மகரிஷியிடம் இருந்து காமதேனு பசுவைப் பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான கதை.
ஒருமுறை வீட்டூக்குச் சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வசிஷ்டர் அழைத்தார். அது ஒரு திதி (திவசம்/ சிரார்த்தம்) அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சாப்பாடு. அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை கறி செய்து படைக்க வேண்டும் என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?
விசுவாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியும். இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , “ ஓ, 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு இந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டும். வசிட்டரும் அருந்ததியும் இணபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று பிராமண புரோகிதர்களும் வாழ்த்துவர். அருந்ததி கீழ்ஜாதிப் பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் எல்லோருக்கும் அவளே தெய்வம்.
சங்கத் தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப் படுகிறாள். தமிழ்ப் புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவள் புகழ் பாடுகின்றனர்.
விருந்துச் சாப்பாடு நாளும் வந்தது. விசுவாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல்—- ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான்—- இலையில் இருந்தன. 1008 கறிகள் இல்லை. விசுவாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார். அவரோ நான் தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே. அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி தானே முன்வந்து ஒரு பாட்டைக் கூறினாள். இதுதானே திவச கால விதி, உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள். வசிட்டர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார். அருந்ததி கூறிய அந்தப் பாட்டு என்ன?
காரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்
பனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே
कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते
ஒரு திதியன்று சமைக்கப்படும் சமையலில் பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம், பிரண்டைத் துவையல் அல்லது கறி 300 கறிகளுக்குச் சமம், பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் கறிகள் ஆயீற்று. மீதி,— இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! என்றாள்
சட்டப் படி தொட்டுப் பேசு என்று சொல்லிய அருந்ததியின் பேச்சை மீற எவரால் முடியும்?
கற்புக்கரசி — சொல்லுக்கும் அரசி!
ஆண்களை மிஞ்சும் அறிவு — பெண்களுக்கு உண்டு!
You must be logged in to post a comment.