Sri Kanchi Paramacharya Swami.
கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1096; தேதி 10 ஜூன் 2014.
ஆதி சங்கரர் நிறுவிய சங்கர மடங்களில் யார் ஒருவர் சந்யாசம் கொடுக்கிறாரோ அவர் குரு என்று அழைக்கப்படுவார். அவ்வாறு சந்யாசம் பெறுபவர் தன்னுடைய குருவை வணங்குவதோடு, குருவுக்கு குரு, அவருக்கு குரு என்று பல தலை முறைகளையும் வணங்குவார். ஆனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பட்டம் உண்டு.
1.குரு
2.குருவுக்கு குரு = பரம குரு
3.பரம குருவின் குரு = பரமேஷ்டி குரு
4.பரமேஷ்டி குருவின் குரு = பராபர குரு
காஞ்சி சங்கரமடத்தின் தலைவராக இருந்து 1994-ல் சமாதி அடைந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை (பரமாசார்ய சுவாமிகள்) ஆன்மீக உலகம் முழுதும் அறியும். அவர் காமகோடி பீடத்தின் 68-ஆவது பட்டம். எல்லோரும் அவரைப் போற்றி வழிபட்டனர். அவருடைய பராபர குருவைப் பற்றி ஓரிரு சுவையான சம்பவங்கள் உண்டு.
பராபர குருவின் பெயரும் ‘’சந்திரசேகரர்’’தான். சொல்லப் போனால் ’சந்திரசேகரர்’’-5. நமது காலத்தில் நமக்கு அருள் பாலித்த பரமாசார்யார் ’சந்திரசேகரர்’’-6. அவருடைய பராபர குரு 1814 முதல் 1857 வரை பட்டம் வகித்தார். அவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் வேங்கட சுப்ரமண்ய தீக்ஷிதர். தஞ்சாவூர் மஹாராஜாவுக்கு அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதரின் பரம்பரையில் வந்தவர். மந்திர சாஸ்திரத்தில் வல்லவர். ஜம்புகேஸ்வரத்திலும் காஞ்சீ புரத்திலும் மீண்டும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்தவர்.
முதல் கனவு
பராபர குரு அவர்கள் பல தலங்களுக்கு விஜயம் செய்துவிட்டு சென்னையை அடைந்தார். அவர் முகாமிட்ட இடம் சென்னை கோட்டை மதில் சுவருக்குள் இருந்தது. தம்புச்செட்டித் தெருவிலும் ஒரு மடம் இருந்தது. சென்னை சிஷ்ய கோடிகள் சிறப்பான பூஜைகளை குறைவின்றி நடத்தி வந்தனர். திடீரென்று ஒரு நாள் இரவில் பராபர குருவின் (சங்கராசார்யார்) கனவில் காமாட்சி அம்மன் தோன்றினாள். “ இதோ என் தலையைப் பார். என் தலை மயிர், எண்ணை இல்லாது சடையாய்ப் போய்விட்டதைப் பார். பாலாலயம் பண்ணியபின் எத்தனை நாட்களுக்கு தைலாபிஷேகம் இல்லாமல் இருப்பது? உனக்கு ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்துக்குப் பணம் தேவை என்றால் என்னைக் கேட்டால் கொடுக்க மாட்டேனா? எனக் கூறிவிட்டு மறைந்தனள்.
கனவில் வீசிய ஒளியினால் அப்போதே கண்விழித்த ஆசார்ய ஸ்வாமிகள், அப்போதே காஞ்சீபுரத்துக்குப் போகவேண்டும் என்று மடத்து அதிகாரிகளை எழுப்ப உத்தரவிட்டார்கள். அக்காலத்தில் சென்னைக் கோட்டையின் வாயில் கதவுகள் முன்னிரவில் பூட்டப்பட்டு, விடியற்காலையில்தான் திறப்பது வழக்கம். தன் உத்தேசத்தை செல்வாக்குடைய சில பக்தர்கள் மூலம் சொல்லி அனுப்பினார்கள். ஸ்ரீ ஸ்வாமிகளின் அபிப்ராயத்தை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கோட்டைக் கதவைத் திறக்க உத்தரவிட்டனர். பக்தர்களால் மாற்று போகிகளுக்கு (பல்லக்கு சுமப்பவர்களுக்கு) ஏற்பாடு செய்யப்பட்டது. பொழுது புலர்வதற்கு முன் ஸ்வாமிகள் சென்னையை விட்டுப் புறப்பட்டுவிட்டார்.
சென்னையிலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள காஞ்சீபுரத்தை அடைந்து அன்றே அம்பிகையைத் தரிசித்து தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தார்கள். சில தினங்கள் கழிந்தன. பணமும் பொருளும் முயற்சியின்றி குவிந்தன. மராமத்து வேலைகள் வெகு விரைவில் முடிந்தவுடன் காமாட்சி கோவில் கும்பாபிஷேகம் (ஜனவரி 22, 1840) சிறப்பாக நடந்தது.
தாடங்கப் பிரதிஷ்டை
பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஒன்றான ஜம்புகேச்வரமெனப்படும் திருவானைக்காவலில் கோயில் கொண்டு விளங்கும் ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் காதுகளில் ஸ்ரீ ஆதி சங்கரர் தாடங்கங்களை (காதணி) பிரதிஷ்டை செய்தது உலகப் ப்ரஸித்தம். தாடங்கங்கள் சிதிலமடைந்து இருந்ததால் பக்தர்களும் கோவில் ஸ்தானீகர்களும் அந்த தாடங்கங்களை ஜீர்ணோத்தாரணம் செய்து பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று விக்ஞாபனம் செய்தார்கள். ஸ்வாமிகள் இதை ஏற்று 1844ஆம் ஆண்டு திருவானைக்காவலை அடைந்தார்.
ஸ்ரீ சிருங்கேரி மடத்தார் தங்களுக்கே தாடங்கப் பிரதிஷ்டை செய்ய உரிமை உண்டு என்று வழக்கு தொடுத்தனர். திருச்சிராப்பள்ளி பிரின்ஸிபல் ஸதர் அமீன் கோர்ட் (ஜூலை 1844), திருச்சி ஸிவில் கோர்ட், ஸதர் அதலத் உயர்நீதி மன்றம் ஆகிய மூன்று கோர்ட்டு களிலும் வழக்கு, அப்பீல், மேல் அப்பீல் எல்லாம் தள்ளுபடி செய்ய ப்பட்டன. நான்கு ஆண்டுக் காலம் நடந்த இந்த வழக்குகளுக்கு ஏராளமாக பொருட்செலவு ஆயிற்று.
மூன்று நீதிமன்றங்களினாலும் பரம்பரையாகக் காமகோடிபீடத்திற்கு அகிலாண்ட நாயகியின் தாடங்க ஜீர்ணோத்தாரண பாத்யதை ஊர்ஜிதப் படுத்தப்பட்டபின் , பராபர குரு ஸ்வாமிகள், காஞ்சியில் ஸ்ரீ காமாக்ஷிக்கு செய்தபடி, திருவானைக்காவல் அம்பிகை தாடங்கங்க ளுக்கும் கலாகர்ஷணம் செய்வித்து, தாடங்கங்களைப் புதுப்பித்தார். ஒரு நன்னாளில் பரமானந்தத்துடன், ஸ்ரீ அகிலாண்டேச்வரீ அம்பிகையின் காதுகளில் அவைகளைச் சாற்றி, தமக்கும், உலக மக்களுக்கும் தேவியின் பரமானுக்ரஹத்தை ஸம்பாதித்துக் கொண்டார்கள்.
Sringeri Sankaracharyas Sri Abhinava Bharati and Sri Chandrasekara Bharati swamijis.
இரண்டாவது கனவு
ஸ்ரீ அகிலாண்டேச்வரீயின் தாடங்கங்கப் பிரதிஷ்டை ஸம்பந்தமாக நான்காண்டுக் காலம் நடந்த வழக்கினால் ஏற்பட்ட செலவுகளும்,, யாத்திரைக்கு வேண்டிய அதிகப்படியான பரிவாரங்களினால் ஏற்பட்ட செலவுகளும் சேர்ந்து மடத்திற்குப் பெரிய பளுவாகியது. இதை உணர்ந்த ஆசார்ய ஸ்வாமிகள் மடத்தின் நிர்வாகப் பொறுப்புள்ள அதிகாரிகளைக் கூப்பிட்டு, ‘அம்பிகையின் அனுக்ரஹத்தினால் நமது மடத்தின் பாரம்பர்யமான கைங்கர்யங்கள் ஸ்தாபிதமான மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இவ்வளவு பெரிய பணச் செலவையும், பாரத்தையும், மடத்திற்குப் பிற்காலத்தில் வரக்கூடிய நிர்வாஹி களுக்கு வைத்துவிட்டோமே என்பதை யோஜித்துப் பார்க்கும்போது, ச்ருங்கேரி ஸ்வாமிகள் ஆசைப்பட்டதை அவரே செய்துவிட்டுப் போகட்டுமே என்று இருந்திருக்கலாமே’’ என்று குறைப்பட்டு வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.
இதைச் செவியுற்ற — நான்கு வருடங்களாகத் தாடங்கங்கப் பிரதிஷ்டை வழக்கில் பிரதிவாதியாக இருந்து , இரவு பகலாகச் சலியாது உழைத்து வந்த மடத்தின் முக்ய அதிகாரி –, ஒருநாள் திடீரெனக் காணப்படவில்லை. எங்கு சென்றார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
ஒருவாரம் சென்றது. சோர்வடைந்த முகத்துடன் அவர் திருவானைக்காவல் மடத்திற்குத் திரும்ப வந்து சேர்ந்தார். அவர் வந்த விவரம் அறிந்த ஆசார்யாள், அவரை அழைப்பித்து, சில தினங்களாக எங்கு சென்றிருந்தார் என நிர்பந்தித்துக் கேட்டார்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவை பேட்டிகண்டு கும்பகோணம் போகும் வழியில் தஞ்சாவூரில் மஹாசந்நிதானம் முகாமிடலாமா என்று கேட்டதற்கு, அரண்மனையில் தற்போது நிதி வசதி இல்லை என்றும் பின்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். ஆகையால் மனக் கலக்கத்துடன் திரும்பி விட்டேன் என்றார்.
சில தினங்கள் கழித்து ஸ்ரீ ஆசார்யாள் திருவானைக்காவலை விட்டு கும்பகோணம் நோக்கி யாத்திரையை மேற்கொண்டார்கள். திருவையாறு வழியாக யாத்திரை திட்டமிடப்பட்டது. வண்டிகள், மாடுகள், குதிரைகள், யானை, ஒட்டகை சகிதம், திருவையாறு சாலையில் திரும்பிக் கொண்டிருந்த போது அரண்மனை சிப்பாய்கள் எதிர்பாராத வண்ணம் வண்டிகளையும், யானை, குதிரைகள் முதலிய யாவற்றையும் கட்டாயப்படுத்தி, தஞ்சாவூர் செல்லும் சாலையில் திரும்பச் செய்தனர். எதிர்த்தவர்களிடம் வேறு காரணம் ஏதும், சொல்லாது இது ராஜாவின் உத்திரவு என்று சொல்லி மிரட்டி அவர்களையும் தஞ்சை நோக்கித் திருப்பிவிட்டார்கள், அரண்மனை வீரர்கள்.
ஆசார்யாளின் பல்லக்கும் அங்கு வந்து அடைந்தது. அரண்மனை அதிகாரிகள் பூர்ணகும்பம் முதலிய மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். சில தினங்களுக்கு முன் ஆசார்யாள் தஞ்சையில் முகாமிடுவதற்கான வஸதி இல்லை எனக் கூறின அரசரின் நிலையில் திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? மஹா ராஜாவிற்குக் கனவில் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரர் தோன்றி உடனே ஆசார்ய சுவாமிகளை அழைத்து வந்து, எல்லாவித மரியாதை களுடன், ஸ்வாமி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென உத்திரவாகியதே காரணமெனத் தெரியவந்தது. கனவை நினை வாக்கினார் மஹாராஜா. பல நாட்கள் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன. பெரிய அம்பாரியில் நகரப் ப்ரதக்ஷிணம் நடத்தி வைக்கப்பட்டது. சுவாமிகளுடன் தஞ்சை நகர வீதிகள் வழியாக ராஜாவும் பவனி வந்தார். ஸ்வாமிகளுக்கு கனகாபிஷேகமும் செய்துவைத்தார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்த வெள்ளி அம்பாரியை மடத்திற்கே ராஜா அளித்தார்.
Source: காஞ்சி ஸ்ரீ பெரியவர்களின் ஸ்ரீ பராபகுரு ஸ்வாமிகளின் வ்ருத்தாந்தம், Book published by Brindavanam Trust,Kumbakonam, 1981.
Right Off Center
/ June 10, 2014பரமாச்சாரியாரின் பராபர குரு பற்றிய தங்களது வ்யாஸம் அருமை. இது போன்று பல அரிய தகவல்கள் எழுதிடப் பிரார்த்திக்கிறேன். – ஆமருவி