Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.
N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com
மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.
காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.
கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.
ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:
வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!
ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.
ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.
புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.
கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.
எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.
கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்).
மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.
முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.
ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!
உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!
–சுபம்–
Tejaswini Vemburia (@vemburia)
/ June 23, 2014You should have added one more comment. Wearing of sacred knot–Thirumangalyam is prevalent even more n Sangam times and not an intrusion which is a part of Saivam -i. e., creating Bondage -PASHAM and also Vaishnavism of representing it as Mahalakshmi