தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
தொகுப்பு எண்: 1175; தேதி: 16 ஜூலை 2014.
இதற்கு முந்தைய 24 கேள்வி பதில் வெளியீடுகளும் இந்த ‘பிளாக்’-கில் கிடைக்கும். தமிழ் இலக்கியம், இந்து மதம் தொடர்பாக இதுவரை 400 கேள்விகள் வெளியிடப்பட்டன. அவைகளையும் படித்து உங்கள் அறிவைச் சோதியுங்கள்.
1.இந்திரன் வசிக்கும் இடம் (நாடு) எது?
2.அதனுடைய தலைநகர் எது?
3.இந்திரன் சவாரி செய்யும் குதிரையின் பெயர் என்ன?
4.ஐராவதம் என்பது என்ன?
5.இந்திரனின் தாய் தந்தையர் யாவர்?
6.இந்திரன் மனைவி யார்?
7.இந்திரனின் மகன் பெயர் என்ன?
8.வஜ்ர என்பது என்ன?
9.இந்திரனின் வாள் பெயர் தெரியுமா?
10.இந்திரனுக்கு பிடித்த ஜூஸ் எது?
Indra’s Weapon on Mongolia Stamp
11.எத்தனை அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும்?
12.இந்திரனுக்கு ஒரு பறவையின் பெயரும் உண்டு? அது எந்தப் பறவை?
13.மஹாபாரதத்தில் குந்திக்கு இந்திரன் அம்சத்துடன் பிறந்த குழந்தை யார்?
14.இந்திரனின் தேரோட்டி யார்?
15.இந்திரனின் வில் எது?
16.இந்திரனின் தோட்டத்துக்கு என்ன பெயர்?
17.வைஜயந்த என்பது என்ன?
கேள்விக்கு பதில்கள்:— 1.வசிப்பிடம்:சுவர்க்கம் 2.தலைநகர்:அமராவதி 3. குதிரை:உச்சைஸ்ரவஸ் 4.ஐராவதம்:இந்திரனின் வெள்ளை யானை 5. இந்திரனின் தந்தை-காஸ்யபர், தாய்-அதிதி 6.இந்திரனின் மனைவி-சசி அல்லது இந்திராணி 7. இந்திரன் மகந்ஜெயந்தன் 8.இந்திரனின் ஆயுதம்:வஜ்ராயுதம் 9.பரம்ஜா என்பது இந்திரனின் வாள் 10. இந்திரனுக்குப் பிடித்த ஜூஸ் சோமரசம் 11.நூறு யாகம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும் 12.உலூக/ஆந்தை என்பது இந்திரனின் பெயர் 13. இந்திரனின் அம்சத்துடன் பிறந்தவன் அர்ஜுனன் 14. தேரோட்டியின் பெயர் மாதலி 15.வானவில் அல்லது இந்திரதனுஷ் அல்லது சக்ரதனுஷ் 16.நந்தனம்/கண்டசாரம்/பாருஷ்ய என்பது இந்திரனின் தோட்டம் 17.வைஜயந்த என்பது இந்திரனின் அரண்மனை.
இந்திரன் பற்றிய அதிசய விஷயங்கள்:–
உலகிலேயே அதிகமாகப் பாடப்பட்ட பழங்காலக் கடவுள் அல்லது வீரன் இந்திரன் தான். ஜில்காமேஷ், ஹெர்குலீஸ் போன்றவர்களை விட மிக அதிகமாகப் போற்றப்பட்டவன். அவர்களைவிட அதிகமான சாதனைகளைப் புரிந்தவன். உலகில் மிகப் பழமையான சமய நூல் ரிக் வேதம். அதில் 250 பாடல்கள் இந்திரனைப் பற்றியவை. மேலும் 50 பாடல்களில் அவன் மற்ற கடவுள்களுடன் பாடப்படுகிறான். அதாவது ரிக் வேதத்தில் நான்கில் ஒரு பகுதி!!!
இந்திரன் என்பது ஒரு வரலாற்று நாயகனின் பெயர். இந்திரன் என்பது ஒரு பதவியின் பெயரும் ஆகும்: அதாவது பிரதமர், ஜனாதிபதி, தலாய் லாமா, போப்பாண்டவர், சங்கராச்சார்யார் என்பது போல. இது தெரியாமல் வெள்ளைக்கார “அறிஞர்கள்” உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள். வெளிநாட்டுக் காரர் எழுதியவற்றைப் படிக்காமல் இந்திய சாது சந்யாசிகள் எழுதியதை முதலில் படித்தால் இந்தக் குழப்பங்கள் வராது. உலகில் மிகப் பழமையான கடவுள் இந்திரந்தான். துருக்கி நாட்டில் பொகஸ்கோய் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் கல்வெட்டுகளில் இந்திரன் பெயர் (கி.மு.1400) இருக்கிறது!! இதற்கு முன்னமேயே அவன் இந்தியாவில் வழிபடப்பட்டான். பாரசீக ஜொராஸ்டர் எழுதிய ஜெண்டு அவஸ்தாவில் சில இடங்களில் இந்திரன் பெயர் உண்டு.
இதைவிட மிக அதிசயமான விஷயம் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய தெய்வங்கள் எல்லாம் செத்துப்போய் மியூசியங்களில் முடங்கிவிட்டன. ஆனால் இந்திரனோ வேத முழக்கம் கேட்கும் இடங்களில் எல்லாம் இன்றும்—குறிப்பாக கோவில்களிலும், பிராமணர் வீடுகளிலும்—தினமும் வழிபடப்படுகிறான். பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனம் என்னும் அந்திப்பொழுது பிரார்த்தனையில் இந்திரன் வழிபாடு தினமும் வருகிறது.
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே”– (சுப்ரமண்ய பாரதி)!!!!
Contact :swami_48@yahoo.com