கட்டுரையாளர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை:- 1183; தேதி:–20 July 2014.
கம்பன் பாடிய ராமாயணப் பாடலில் பால காண்டத்தில் மிகவும் பணிவோடு சொல்கிறான்:
ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)
பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.
பின்னர் ஒரு பாடலில் மூவர் பாடிய ராமாயணத்தில் முதல்வர் (வால்மீகி) பாடியதை வைத்துப் பாடியதாகக் கூறுகிறான். அந்த முதல்வர் வால்மீகி என்பதை அதற்குப் பின் வரும் பாடலில் பெயரைச் சொல்லியே உறுதிப் படுத்துகிறான். ஆனால் அந்த மூவர் யார் என்பதற்கு உரைகாரர்கள் வசிஷ்டர், போதாயனர், வால்மீகி ஆகியோர் எழுதியவை என்கின்றனர். நமக்குக் கிடைத்திருப்பதோ வால்மீகி ராமாயணம் ஒன்றுதான். காளிதாசன் ரகுவம்சத்தில் எழுதியதைக் கம்பன் திரும்பச் சொன்னானோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இதோ கீழ்வரும் பாடலைப் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள்.
முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ –(பால. 8)
பொருள்:– முத்தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பு:– பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அரைவேக்காடுகள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமோ!!
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ! (10)
பொருள்:– தேவ பாஷையான — (கடவுளரைப் போற்றும் வேதம் உள்ள மொழி) —-சம்ஸ்கிருதத்தில் மூவர் —-(வால்மீகி, வசிட்டர், போதாயனர்) — இராமன் கதையைப் பாடினர். அவர்களுள் முதன்மையான நாவல்லமை மிக்கோனைப் — (வால்மீகி) – பின்பற்றி தமிழில் நான் பாடுகிறேன்.
காளிதாசன் ரகுவம்சம்
க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயோ மதி:
திதீர்ஷு:துஷ்தரம் மோஹாத் உடுபேனாஸ்மி சாகரம்
பொருள்:– சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அந்த வம்சத்தின் பெருமையோ சிறந்தது. நானோ மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத சமுத்திரத்தை ஒரு சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவது போல என் சிறு மதியால் கடல் போன்ற இந்த சரித்திரத்தைக் கூறப் போகிறேன்.
மந்த: கவியச: ப்ரார்த்தி கமிஷ்யாம் உபஹாஸ்யதாம்
ப்ராம்சு லப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:
பொருள்:– குறைந்த அறிவுடைய நான் கவியின் புகழை அடைய விரும்புகிறேன். உயரமான மனிதன் மட்டுமே அடையக்கூடிய பழத்தை குள்ளமான நான் கைகளை நீட்டிப் பறிக்க முயலும்போது பரிகசிக்கப்படும் நிலையை அடைவேன்.
அதவா க்ருதவாக் தூரே வம்சேஸ்மின் பூர்வசூரிபி:
மணௌ வஜ்ர சாமுத்கீர்ணே சூத்ரயேவாஸ்தி மே கதி:
நான் காவியம் இயற்றும் திறமை இல்லாவிடினும் முன்னோர் சென்ற வழியில் சென்று என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன். எப்படி வஜ்ர ஊசியினால் துளைக்கப்பட்ட துவாரத்தில் நூல் எளிதில் செல்லுமோ அப்படி முன்னோர் —- (வால்மீகி) — போட்ட துளை வழியாகச் செல்வேன்.
—ரகுவம்சம் முதல் சர்கம் பாடல் 2, 3, 4
மேலும் இரண்டு ஸ்லோகங்களில் ரகுவம்ச மன்னர்களின் குணங்கள் தன் காதில் விழுந்துவிட்டதால், ஏற்பட்ட உந்துதலால் துணிச்சலாக இந்தக் காவிய முயற்சியில் இறங்கியதாகவும் தனக்கு சொற்செல்வம் குறைவே என்றும் பணிவுடன் கூறுகிறார். தங்கம் சுத்தமானதா இல்லையா என்பதை அக்னியில் (தீயில்) போட்டு பரிசோதிப்பது போல பெரியோர்கள் என் காவியத்தைப் பரிசோதிக்கட்டும் என்கிறார்.
கம்பனையும் காளிதாசனையும் படிக்கும்போது கம்பன் காளிதாசனைப் பின்பற்றினானோ ( அறிமுகப் பாடல்களில் மட்டும்) என்று எண்ண வேண்டி இருக்கிறது. ஆனால் இரு புலவர்களும் எவ்வளவு பணிவோடு துவங்கினர் ! அவை இரண்டும் எப்படி உலகப் பிரசித்தம் அடைந்து விட்டன!!
‘வித்யா விநயன்ன சம்பதே’= பணிவால் கிடைப்பதே கல்வி; கல்விக்கு இலக்கணம் பணிவு!
இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் மேலும் ஒரு பாடல் ஆதிசங்கரரின் அபூர்வ சௌந்தர்ய லஹரி (அழகின் அலைகள்) துதியில் வரும் ஒரு பாடலாகும்.
சௌந்தர்ய லஹரி
ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய – க்ரமண – மசனாத்யாஹுதி – விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில – மாத்மார்ப்பண – த்ருசா
ஸபர்யா – பர்யாயஸ் – தவ பவது யன்மே விலசிதம்
–சௌந்தர்ய லஹரி பாடல் 27
ஆதிசங்கரர் கூறுகிறார்:
தாயே! நான் ஆத்மாவை உனக்கு அர்ப்பணித்துவிட்டேன். நான் என்ன பேசினாலும் அதையெல்லாம் உனது ஜபமாகக் கொள்ளவேண்டும். நான் என் கைகளால் செய்யும் அத்தனையையும் உனது முத்திரைகளின் விளக்கமாகக் கொள்ள வேண்டும். நான் நடப்பதையெல்லாம் உன்னை வலம் வருவதாகக் கொள்ள வேண்டும். நான் சாப்பிடுவதை எல்லாம் உனக்கு வேள்வித் தீயில் ஆகுதி செய்ததாகக் கொள்ள வேண்டும், நான் படுத்துக் கொண்டால் அதைக் கீழே விழுந்து வணங்கியதாகக் கொள்ள வேண்டும். எனது செயல்கள் அனைத்தும் உனது பூஜையாகக் கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டால் — எதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் நிலை வந்துவிட்டால் — எல்லோரும் சங்கரர் ஆகிவிடுவர்.
வாழ்க கம்பன், காளிதாசன், ஆதி சங்கரன்!!!
You must be logged in to post a comment.