தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு!!

purnakumba

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1189; தேதி 23 ஜூலை, 2014.

இந்து சமயத்தைப் பின்பற்றுவோருக்கு அந்தக் காலத்தில் எல்லாக் கலைகளும் தெரிந்திருந்தன. வானத்தில் உள்ள எல்லா கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் தெரியும். சாப்பாட்டு அறைக்கு வரும் 10, 15 கீரை வகைகள் தெரியும். துவையலுக்குப் பயன்படும் பல மூலிகைகள் தெரியும். இதெல்லாம் மருத்துவம் உணவு சம்பந்தப்பட்ட தாவரங்கள். ஆனால் இந்து மதம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு உலக அதிசயம் காத்திருக்கிறது!

இந்து மதத்தில் பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன! விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. உலகில் இந்த அளவுக்கு இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழ் இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்தக் கட்டுரை, சமயத்தில் பயன்படும் தாவரங்களைப் பற்றியது. சித்த, ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தும் தாவரங்களைச் சேர்த்தால் ஆயிரக் கணக்கில் வந்து விடும்!!!

homa dravyas

கபிலர் அறிவுரை
குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலை 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிராமணப் புலவன் கபிலன் 99 பூக்களின் பெயரை ஒரே மூச்சில் பாட்டில் எழுதி சாதனைப் புத்தகத்தில் — தமிழரின் சாதனைப் புத்தகத்தில் — இடம்பெற்றான். அதே புலவன் புற நானூற்றில் ஒரு பகவத் கீதை ஸ்லோகத்தை மொழி பெயர்த்து புதுமையும் செய்தான்:

எனக்கு பக்தியுடன் கொடுக்கும் பச்சிலை, பூ, தண்ணீர், பழம் எதுவானாலும் — (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) —- அதை நான் உண்கிறேன் (பகவத் கீதை 9-26) என்று கண்ண பிரான் கூறுவான். இதையே கபிலர் பாடுகிறார் (புறம்—106):–

“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”

பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்.
ஆக தமிழன் 2000 ஆண்டுகளாக எருக்கம் பூ, இலையைப் போட்டு பூஜை செய்வதைக் கபிலர் சொல்லிவிட்டார்.

homadravyas5

துளசி, வில்வம்
துளசி இலை இல்லாத பெருமாள் கோவில் இல்லை; வில்வம் இல்லாத சிவன் கோவில் இல்லை.

கோவிலைச் சுற்றி விற்கப்படும் பூக்கள் — பிரதேசத்துக்கு பிரதேசம், பருவத்துக்கு பருவம் — மாறு படும். இவ்வகையில் தாமரை முதல் அரளி வரை நூற்றுக் கணக்கான பூக்கள் வந்து விடும்.
கழுத்தில் போடும் ருத்ராக்ஷம், துளசிமணி, தாமரை மணி மாலை வரை எல்லாம் தாவர வகைகளே!

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

pavitra
pavita made up of Dharba grass

21 இலைகள் (பத்ரம்):
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:–
இதோ 21 இலைகள் (பத்ரம்):
மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம்.

spoons
yaga utensils made up of palasa wood

பூஜைக்கு உதவும் 27 இலைகள்
வில்வம், துளசி, மருக்கொழுந்து, நாயுருவி, பூளை, நொச்சி, கரந்தை, செங்கீரை, மாசிப்பச்சை, மலைப் பச்சை, திருநீற்றுப் பச்சை, எலுமிச்சம் பச்சை, சமுத்திரப் பச்சை, கதிர்ப் பச்சை, கொண்டை, குடத்தன் குதம்பை, வன்னி, கிளுவை, மாவிலங்கை, விளா, மா, எலுமிச்சை, நாரத்தை, நாவல், மருது, நெல்லி, இலந்தை.

பழங்கள்
மா, பலா, வாழை என்னும் முக்கனிகளை தென்னிந்தியர்கள் கடவுளுக்குப் படைக்கிறார்கள். மஞ்சள் அட்சதை, வாழை இலை, மாவிலை, தேங்காய் வெற்றிலை, பாக்கு இல்லாத பூஜைகள் கிடையாது. தென்னை, வாழை ஆகிய மரங்களின் எல்லா பகுதிகளையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறோம். வாழை இலையில் தொன்னை செய்தும், தென்னை ஓலையில் விசிறி செய்தும் கோவில்கள், பூகைகளில் பயன்படுத்துவர்.

Arani Mantha
Arani wood made up of Peepal and Sami tree to kindle fire.

பூர்ண கும்ப தாவரங்கள்
பூர்ண கும்ப கலசங்களுக்குள் கிராம்பு, ஏலக்காய், குங்குமப் பூ முதலியனவும் மேலே மாவிலை, தேங்காய் எனவும் உபயோகிக்கிறோம். நைவேத்யத்துக்கு பல வகையான பழங்களையும், காலத்திற்கேற்ப பயன் படுத்துவர். பிள்ளையார் சதுர்த்தி என்றால் விளாம்பழம், நாவல் பழம் என்பது போல.

உலகிலேயே தாவரத்தின் பெயரில் உள்ள ஒரு நாடு இந்தியாதான். ஜம்புத்வீபம், நாவலந்தீவு என்பது இந்தியாவின் பெயர். கோவில்களிலும், பிராமணர் இல்லங்களிலும் அன்றாடம் ‘’சங்கல்ப’’த்தின் போது ஜம்புத்வீபம் என்பது ஒலிக்கும். ஏழு த்வீபங்களுக்கும் ஏழு தாவரப் பெயர்கள் வைக்கப்பாட்டாலும் இந்தியாவின் பெயர் மட்டுமே அன்றாடப் புழக்கத்தில் இருக்கிறது. இதைப் பார்த்து தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்து தாவரங்களைக் கொண்டு நிலப் பெயர் அமைத்தனர்.

நவதானிய படம்1
ஸ்தல மரங்கள்

பூஜையில் வாசனைக்காகப் பயன்படுத்தும் அகில், சந்தனம், சாம்பிராணி, சூடம், ஊதுவத்திக் குச்சி முதலியனவும் தாவரங்களே.

நீண்ட பட்டியலைத் தருவதற்குப் பதிலாக ஒரு மாதிரி சர்வே மட்டுமே கொடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தலமரங்களின் பட்டியலைத் தனியே தருவேன்!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: