சதுரங்க பந்தம் -2

chaturan

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் -2
ச.நாகராஜன்
Post No.1227; Dated 11th August 2014

சதுரங்க பந்தம் அமைப்பதே ஒரு கடினமான விஷயம். அதில் இன்னும் பல அற்புதங்களைச் செய்து காண்பித்து ஒரு செய்யுளை அமைப்பது என்றால் பிரமிப்பின் உச்சிக்குத் தான் செல்ல முடியும்.

1911ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான நூல் நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து.

“நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து. விளக்கக் குறிப்புரை சித்திர கோட்டங்களுடன் – நகுலேச ஸ்தோத்திரம்” என்ற தலைப்புடன் வெளிவந்துள்ள இதை இயற்றியவர் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதிப் பிரசித்த நோத்தாரி மயிலிட்டி க.மயில்வாகனப் பிள்ளை ஆவார். (இதை மறுபதிப்பாக தேன் பதிப்பகம், மூன்றாவது தெரு, சௌமியா நகர், மேடவாக்கம், சென்னை – 601302, 2004ஆம் ஆண்டு வெளியிட்டு ஒரு போற்றத்தகும் செயலைச் செய்துள்ளது). இந்நூலின் நகலை முனைவர் கி.முப்பால் அணி வழங்க ந;கருணாநிதி பேருதவி புரிய நூலைக் கொண்டு வருவதாக இதன் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்).

செய்யுள் இது தான்:-

நீதா சதாபயனே நீபலர்க்குஞ் சாலாமயற்

றீதார் மனமகற்றச் சீர்நகுலை – யேகலாற்கொன்

னீடார் மிடற்றகலா நீலா கமலபதா

நீதா பலமகலா நீ

இந்த சதுரங்க பந்தத்தை விளக்கும் விதமாக நூல் ஆசிரியர் தரும் விளக்கம் இது:-

“நிரைக்கு எவ்வெட்டாக எட்டு நிரை கொண்ட அறுபத்துநான்கு அறைகளிலே நான்கு பக்கத்து ஈற்று நிரைகளிலு நான்காம் அடி தோன்ற எழுத்துக்கள் பொதுவின்றி அமையப் பாடுவது.”

செய்யுளில் நான்கு பக்கங்களிலும் நீதா பலமகலா நீ என்ற நான்காம் அடி அமையப் பெற்றுள்ளது. (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது)

bandham 2

பாடலை எப்படி சதுரங்க பந்தத்தில் படிப்பது? 1, 2, 10, 9, 17, 18, 19, 11, 3, 4, 12, 20, 28, 27, 26, 25, 33, 34, 35, 36, 37, 29, 21, 13, 5, 6, 14, 22, 30, 38, 46, 45, 44, 43, 42, 41, 49. 50. 51, 52, 53, 54, 55, 47, 39, 31, 23, 15, 7, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 63, 62, 61, 60, 59, 58, 57 என்ற கட்டங்கள் (சதுரங்க அறைகள்) வழியே சென்றால் பாடலைப் படிக்கலாம்.

பாடலின் பொருளை நூலாசிரியர் இப்படி விளக்குகிறார்:-

கொன் நீடு ஆர் மிடற்று அகலா நீலா – பெருமை நீடுதல் பொருந்திய கண்டத்தினிடத்தே நீங்காத நஞ்சக் கறையை உடையவரே!
கமலபதா – தாமரை மலர் போன்ற பாதங்களை உடையவரே!
நீதா – நீதியை உடையவரே!

நீ பலர்க்கும் சால மயல் தீது ஆர் மனம் அகற்றச் சீர் நகுலை ஏகலால் – தேவரீர் பலர்க்கு (அவர்களுடைய) மனத்திற் பொருந்திய மயக்கமாகிய தீமையை மிகவும் நீக்கும் பொருட்டுச் சிறப்பாகிய நகுலேச்சரத்தின் கண் எழுந்தருளலால்

பலம் அகலா நீ – பேறு நீங்காத தேவரீரே!

நீ சதா பயனே தா – தேவரீர் எப்பொழுதும் பேற்றினைத் தந்தருள்க

இந்த சதுரங்க பந்தத்தில் அமைந்துள்ள பல்வேறு சிறப்புக்களை படித்தும் பார்த்தும் மகிழலாம். தமிழ் எத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி என்பதை அறிந்து பெருமிதப் படலாம்.

*******

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: