தமிழ் நாட்டில் கேட்ட ஒலிகள்! இளங்கோ ‘’சர்வே’’!!

veena
Mr Abdul Kalam on Veena, Former President of India

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1240; தேதி:-18 August 2014

தமிழ் கூறு நல்லுலகை நன்கு சுற்றிப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் இளங்கோ அடிகளும் கவிச் சக்கரவர்த்தி கம்பனும் அங்கே கண்ட காட்சிகளை அற்புதமாக வருணித்துப் பாடியுள்ளனர். அவர்கள் கண்களை ஈர்த்த கவின்மிகு காட்சிகளை விட, காதுகளை ஈர்த்த இசைமிகு ஒலிகள் சிறப்புடைத்தாம். ஒன்று, இரண்டு கவிதைகளோடு நில்லாமல் பத்துப் பதினைந்து என்று பாட்டியற்றி மகிழ்ந்தனர் இருவரும் —- கம்பரைப் பொறுத்த மட்டில் கோசல நாடு பற்றி அவர் பாடியது, தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். இளங்கோ அடிகள் தமிழ் நாடு பற்றியே இதைக் கூறியுள்ளார்.

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” — என்பர் ஆன்றோர். இதோ அவ்வழியில் சில கவிதைகளை மட்டும் கேட்டு ரசிப்போம்! சுவைப்போம்!!

இளங்கோவின் சிலப்பதிக்காரக் காட்சிகள்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக் குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
பலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்
பயம்பிழ் வீழ் யானைப் பாகர் ஓதையும்
இயங்குபடை அரவமொடு, யாங்கணும் ஒலிப்ப
— காட்சிக் காதை, சிலப்பதிகாரம்

sikkil mala chandrasekar
Sikkil Mala Chandrasekar on Flute

பொருள்:
குன்றுகளில் குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள் பாடிய குரவைப் பாட்டு
கொடிச்சியர் பாட்டு
வேலன் வெறியாடும் பாட்டு
உரலில் தினை மாவு இடிப்போர் பாடும் வள்ளைப் பாட்டு
வயல்களில் சாப்பிட வரும் பறவைகளை விரட்டும் பாட்டு
தேன் கூட்டினை உடைத்தவுடன் குறவர் எழுப்பும் ஆராவார ஒலியும்
பறை முழக்குவதுபோல அருவிகள் எழுப்பும் ஓசையும்
புலியுடன் பொருதும் ஆண் யானையின் பிளிற்று ஒலியும்
பரண் உச்சியில் இருப்போர் விலங்குகளை விரட்டும் ஒலியும்
குழியில் விழுந்த யானைகளை பிடிப்போர் ஆரவாரமும்
சேர மன்னனின் படைகள் எழுப்பும் ஓசையும்
எனப் பல்வேறு ஒலிகள் ஒலித்தன என்பார் இளங்கோ.

வேறு ஒரு இடத்தில் பாண்டிய மன்னன் காதில் பார்ப்பனர் ஓதும் வேதமுழக்கமே கேட்கும், புகார் செய்வதற்கான ஆராய்ச்சி மணி ஒலி கேட்டதே இலை என்கிறார் இளங்கோ:

மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே
–கட்டுரைக் காதை

யானை பிடிக்கும் போது வேடுவர் எழுப்பும் ஆரவாரத்தை கம்பரும் இளங்கோவும் குறிப்பிடத் தவறவில்லை.

பாட்டு என்பதற்கு ஓதை (ஓசை), பாணி, பாடல் என்பனவற்றையும், சப்தம் என்பதற்கு ஒலி, விளி என்பனவற்றையும் இளங்கோ பயன்படுத்துகிறார்.

chenda mela,thrissur
Chenda Mela in Thrissur

கம்ப ராமாயணக் கவிதைகள்

வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல் இயம் துவைக்கும் கம்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே (பால காண்டம் 154)

பொருள்:– கடல் ஒலியைத் தோற்கடிக்கும் அளவுக்கு அயோத்தியில் கேட்ட ஒலிகள்: சங்கு, ஊது கொம்பு, மகர வீணை, மத்தளம் கின்னரம் என்னும் இசைக் கருவி, புல்லாங்குழல் ஆகியவற்றின் ஒலிகளாம்.

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, – கண்ணுளர் ஆடல்தோறும் –
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே.

(வரைக் காட்சிப் படலம் 44)

dusserah festival in Gulbarga
Dusserah Festival in Gulbarga

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை.

(வரைக் காட்சிப் படலம் 46)

((ஓதை= பாட்டு, ஒலி, முழவு= தோல்கருவி, நரம்பு= யாழ், வீணை, வேய்= புல்லாங்குழல், வேழம்=யானை, மது=கள், மேகலை=ஒட்டியாணம்))

இது தவிர பல இடங்களில் உழவர்கள் மாடுகளை அதட்டி ஓட்டும் ஒலி, வீரர் கால்களில் இருந்து ஒலிக்கும் கழல் ஒலி, மகளிர் கால்களில் இருந்து ஒலிக்கும் சிலம்பு ஒலி, குயில் ஒலி, கிளி மொழி என்று ஏராளமான இடங்களில் ஒலிகளை வருணிக்கிறான் கம்பன்.
gopalakrishna bagavathar
Sri Gopalakrishna Bagavathar on tambura

contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment