தமிழ் என்னும் விந்தை! சதுரங்க பந்தம் – 6
பாம்பன் சுவாமிகள் சதுரங்க பந்தம்
By ச.நாகராஜன்
Post No 1271; Dated 7th September 2014.
பாம்பன் சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.
வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே
இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்
சென்ற இரு அத்தியாயங்களில் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய பாடல்களுக்காகக் கொடுக்கப்பட்ட துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
துருவக் குறிப்பு
{ 1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.
இந்த இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.
பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி
துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.
இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.
இன்னொரு விந்தை! மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் சதுரங்கப் பாடல்களையும் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில எழுத்துக்கள் அதே கட்டங்களில் அமையும் விந்தையையும் பார்க்கலாம்.
சுவாமிகள் பாடி அருளிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 6666. இந்தப் பாடல்கள் அனைத்து நலன்களும் அருளும் மந்திரங்கள். குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியம் சித்தியாகும் என்பது பக்தர்களின் அனுபவம். வடமொழியும் தமிழையும் நன்கு கற்றவர் சுவாமிகள். வடமொழி காழ்ப்புணர்ச்சி இன்றி வடமொழியையும் தேன் தமிழையும் கற்று வல்லவராக வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அருளியதை சுவாமிகளும் அப்படியே ஆமோதிக்கிறார். இரு மொழிகளிலும் வல்லவராக வேண்டும் என்பதையே சுவாமிகளின் வாழ்க்கை நமக்கு எடுத்து இயம்புகிறது.
சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.
சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.
சுவாமிகள் அவதரித்த ஆண்டாகக் கருதப்படுவது 1853. 1929ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி சுவாமிகள் சமாதி அடைந்தார். அவரது சமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது.
******************
contact swami_48@yahoo.com
Karuppan Narayanan
/ September 7, 2014தமிழ்- ஆரியம் ஆகிய இரு மொழி இணைப்பின் வழியாக இரு பண்பாட்டு இணைப்புக்கு அவற்றிடையே காணப்படும் சில ஒற்றுமைகளை முயன்றெடுத்து பரப்புகிறது. மாபெரும் முரண்பாடுகளை என்செய்வது? இத்துணை ஆண்டுகளாக இம்முயற்சியை மேற்கொள்ளாமல் இப்போது முயல்வதன் காரணம் என்ன? என்னைப் பொருத்த வரையில் மாந்த இனம் ஒன்று தான். அவரவர் மொழி அவரவர்க்கு உயர்ந்தது. எந்த பொருளும் உயர்ந்ததுமில்லை தாழ்ந்ததுமில்லை. எவரும் எவர்க்கும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவருமில்லை. அதனதன் இடத்தில் அந்தந்த பொருள் சிறந்தது. அதேபோல அவரவர் இடத்தில் அவரவர் முதன்மையானவர். பொது இடங்களில் இதனைப் பின்பற்றினால் பிரச்சினைகள் எழா. தானே உயர்ந்தவன் மர்றவன் தாழ்ந்தவன் எனத் தருக்கிக்கொள்வதால் சிக்கல்கள் எழுகின்றன.