என் அப்பாவிடம் கற்றது!

Santanam Rajalakshmi 2

Srimati Rajalakshmi Santanam and Sri Venkataraman Santanam

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1274; தேதி: 8 செப்டம்பர் 2014

மதுரையில் பிரம்ம ஞான சபை என்ற கட்டிடம் சந்தைப் பேட்டைத் தெருவில் உள்ளது. அங்கே அரிய புத்தகங்களைக் கொண்ட லைப்ரரி (Theosophical Society Library) உண்டு. அதைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தார் கல்யாணம் என்பவர். எவ்வளவு கண்ணும் கருத்தும் என்றால் —- யாரையும் புத்தகத்தைத் தொடவே அனுமதிக்க மாட்டார்!!! ஆனல் என் அப்பா வேங்கடராமன் சந்தானம் மட்டும் விதிவிலக்கு!!

நாங்கள் போய் மாமா, இந்தப் புத்தகம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது ஆனால் வெளியே கொண்டு போகக் கூடாது என்பார். அத்தோடு நில்லாமல் பார், உங்கள் அப்பா படிக்காத புத்தகம் இந்த லைப்ரரியில் எதுவுமே இல்லை என்று என் அப்பா அந்தப் புத்தகங்களில் போட்ட Pink colour proof reading pencil பிங்க் கலர் பென்சில் மார்க்குகளைக் காண்பிப்பார். இது பத்திரிகையாளர்கள் ‘’ப்ரூப்’’ திருத்த பயன்படுத்தும் பென்சில்! மற்றவர்களைப் புத்தகத்தையே தொடவிட மாட்டாதவர் என் தந்தை கலர் பென்சில் கோடு போட்டாலும் பொறுத்துக் கொண்டது எனக்கும் என் சகோதரர்களுக்கும் வியப்பை உண்டாக்கும் . எங்கள் தந்தையிடம் சொல்லிச் சொல்லி சிரிப்போம். அவரோ தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் ஒன்றுமே சொன்னதில்லை. வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டு ஒரு புன் சிரிப்பு சிரிப்பார்.

பிரம்ம ஞான சபையில் அவருக்கு அவ்வளவு உரிமை கொடுத்த காரணம் எங்களுக்குப் புரியும். என் தந்தை சம்பந்தப்படாத ஆன்மீக விஷயம் மதுரையில் எதுவுமே இல்லை! தமிழ் நாட்டின் ஆன்மீகத் தலைநகரம் மதுரை என்பதால் எல்லா மதத் தலைவர்களும் மதுரைக்கு வந்துதான் ஆக வேண்டும். அவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்தி வெளியிட்டு ஆதரவு கொடுத்தவர் என் தந்தை ஒருவரே என்றால் அது மிகை இல்லை.

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘’இந்து’’ நாளேடு மட்டும் கடைசி பக்கத்தில் 4 அங்குலத்துக்கு ஆன்மீகச் செய்தி வெளியிட்ட காலம் அது. மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஆன்மிகச் செய்திகளைக் கிண்டல் செய்த காலம் அது. மதுரை தினமணி கொள்ளிடம் ஆற்றின் கரை வரை எட்டு ஜில்லாக்களை “கவர்” செய்ததால் தமிழ் நாட்டின் முக்கால் வாசி பகுதிக்கு எட்டிவிடும். அந்தக் காலத்தில் சென்னை தினமணி ஆர்க்காடு செங்கல்பட்டு, சென்னை, புதுவை மட்டும்மே சென்றது.

என் தந்தை புத்தகப் பிரியர். இசைப் பிரியர். மதுரை எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியையும் சத்குரு சங்கீத சமாஜம் (பிற்காலத்தில் இசைக் கல்லூரியாக மாறியது), ராகப்ரியா போன்ற பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

வீட்டில் மூன்று நான்கு காத்ரேஜ் (ஸ்டீல்) பீரோக்களை வாங்கிவைத்து அதில் 6000 புத்தகங்களைச் சேர்த்துவைத்தார். அதுதான் அவர்கள், எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. பணமோ, வீடோ, வாசலோ, நிலபுலன்களோ வாங்கவில்லை.

வீட்டிற்கு வருபவர்கள் முதல் அறையிலேயே காட்ரேஜ் பீரோக்கள் இருப்பதைக் கண்டு வியப்பர். அதை என் தந்தை திறக்கும் போது கொல் என்று சிரித்துவிடுவர்.

“என்ன சார் இது! புத்தகங்களை வைக்கவா இப்படி மூன்று நான்கு காத்ரேஜ் பீரோக்கள்?” என்பார்கள். வழக்கம்போல் அவர் பேசமாட்டார், வெறும் புன்சிரிப்புதான் பதில்.

தினமணிப் பத்திரிக்கையில் புத்தக மதிப்புரை (Book Review) எழுதுவதற்காக பலர் எழுதிய புத்தகங்களைக் கொண்டுவருவர். எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு விதி உண்டு—அதாவது இரண்டு புத்தகங்களை ( Two Copies ) மதிப்புரைக்கு அனுப்ப வேண்டும். ஒன்று அந்த புத்தக மதிப்புரை எழுதுபவர் வைத்துக் கொள்வார். மற்றொன்று அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதை அறிந்தவர்கள் முதலில் இரண்டு பிரதிகளைக் கொடுத்துவிட்டு “சார், இது உங்களுக்கு என்று வேறு ஒரு பிரதி கொடுப்பர். உடனே என் தந்தை அதற்குப் பணம் கொடுப்பார். அவர்கள் பதறிப்போய் “சார், உங்களிடம் விற்க வரவில்லை” என்பார். என் தந்தையோ நான் எழுத்தாளர் சங்கத் தலைவன். ஆகையால் ஒரு எழுத்தாளரை ஆதரிக்கும் ஒரு வழி அவருடைய புத்தகத்தை விலைக்கு வாங்குவதுதான் என்று சொன்னவுடன் அவர் மசிழ்ச்சியுடன் ஏற்பார்.

ஆனால் சுவாமி சித்பவானந்தர், அனந்த ராம தீட்சிதர், கிருபானந்த வாரியார் போன்ற பெரியோர்கள் கொடுக்கும்போது அவர்களிடம் பணம் கொடுப்பது அவமரியாதை என்பதால் அவர்கள் ஏற்று நடத்தும் அறப் பணிகளுக்கு நன்கொடை என்று புத்தக விலை போன்று பன்மடங்கு பணத்தைக் கொடுத்து விடுவார். நானும் எங்கும் இதுவரை விலை கொடுக்காமல் புத்தகம் வாங்குவதில்லை. சின்மயா மிஷன் சொற்பொழிவுகளுக்குப் போனால்கூட அங்கே வெளியே போகும்போது இலவச பிரதிகள் விநியோகிப்பர். அதற்கெல்லாம் சேர்த்து டொனேஷன் கொடுத்து விடுவேன்.

baba

சத்ய சாய் பாபாவின் அழைப்பு
ஒரு முறை புட்டபர்த்தியில் இருந்து ஒரு “போன் கால்” அழைப்பு வந்தது. பாபா, முன்னாள் ஆந்திர கவர்னர் தலைமையில் சென்னையில் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதில் நீங்கள் சிறப்புப் பேச்சாளராக வரவேண்டும் என்பது பாபாவின் விருப்பம் என்றனர். என் தந்தைக்கு ஒரே குழப்பம். அதற்கு முன் நாங்கள் எல்லோரும் 1963 ஆம் ஆண்டில் ஒரே முறைதான் சத்ய சாய்பாபாவத் தரிசித்து இருக்கிறோம். அதற்குப் பின் அவர் மதுரை வந்த போதெல்லாம் தனியாக அவரைச் சந்தித்தது இல்லை. லட்சத்தோடு ஒன்று, லட்சத்திஒன்று என்ற கணக்கில் நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக பஜனைக்குப் போவோம்.

என் தந்தையை முன்னாள் கவர்னர் கே. சந்தானத்துடன் பலரும் குழப்பிக்கொள்வர். என் தந்தைக்கு இது தெரியும். உடனே புட்டபர்த்திக்குப் போன் செய்து நீங்கள் தவறாக போன் செய்து விட்டீர்கள் போல இருக்கிறது. நான் முன்னாள் கவர்னர் கே சந்தானம் அல்ல என்றார். உடனே புட்டபர்த்தி அலுவலகம் எங்களுக்கு அது தெரியும். பாபா உங்களைத்தான் – மதுரை தினமணிப் பத்திரிக்கை ஆசிரியர் சந்தானத்தைக் கூப்பிடு – என்று குறிப்பாகச் சொன்னதால்தான அழைத்தோம் என்றனர்.

எனது தந்தை வெ. சந்தானம், ஆந்திர முன்னாள் கவர்னருடனும் பாபாவுடனும் பேசிய கூட்ட புகைப்படம் இன்றும் இந்தியாவில் எங்கள் வீட்டுச் சுவரை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் இருந்தனர் என்பதை சொல்லத் தேவை இல்லை.

புட்டபர்த்திக்குப் போனபோது என் கவலை எல்லாம் அடுத்த ஆண்டுவரும் எஸ் எஸ் எல் சி –யை நல்ல முறையில் பாஸ் செய்ய வேண்டும் என்பதுதான். பாபா என் கன்னத்தில் ஒரு அன்பான அடி கொடுத்து பாஸ் என்றார். அப்போது பாபா வரவழைத்துக் கொடுத்த புகைப்படத்தை என் தந்தை இறக்கும் வரை மணிபர்ஸில் வைத்திருந்தார்.

எழுபது வயதுக்குப் பின் என் தந்தை இறந்தார். அதுவரை எழுதிக் கொண்டே இருந்தார். தேவாரம், திருப்புகழ், திவ்வியப் பிரபந்தம், திருமந்திரம் முதலியவற்றை நோட்டு நோட்டாக எழுதுவார். எனக்கு வியப்பாக இருக்கும் புத்தகத்தில் இருப்பதை ஏன் இப்படித் திருப்பி அழகாக எழுதுகிறார்? அதற்கு பிரவுன் கலர் அட்டை போட்டு கலர் கலர் மைகளில் தலைப்பு எழுதுகிறார் என்று வியப்பேன். இப்போது காரணம் புரிகிறது. 65 வயதைத் தாண்டிவிட்ட எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் முதல் எதைப் படிக்கவும் புத்தகம் தேவைப்படுகிறது படித்த விஷயங்கள்—குறிப்பாக கவிதைகள், தோத்திரங்கள் நினைவில் நிற்பதில்லை. நானும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி உருப்போடும் காலம் நெருங்கிவருகிறது. கடை வரை அவர் எழுதிவந்த மற்றொன்று ஸ்ரீ ராமஜெயம்.

அடுத்த முறை இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள், காமராஜ் எழுதிக் கொடுத்த ஒரு சீட்டு, “டேய் சந்தானம் என்னை தினமணி ஆசிரியர் இல்லை என்கிறாண்டா! – என்று என் அப்பாவிடம் ஏ. என். சிவராமன் அடித்த ‘ஜோக்’, என் வீட்டிற்கு புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானத சுவாமிகள் வருகை, ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசம், மவுனகுரு சாமி வருகை, எங்கள் வீட்டில் கோபால கிருஷ்ண பாகவதரின் அஷ்டபதி பஜனை, ஏ.என். சிவராமனின் நால் வேத டேப்ரிகார்டிங், வார பஜனை பஜனை, சேதுராம் பஜனை மண்டலி பஜனை, திருப்புகழ் பஜனை, மீனாட்சி கோவில் பள்ளி அறை தீபாரதனை, ஆடி வீதி தெய்வ நெறிக் கழக பஜனை, காலையில் ஞானப் பால், கோயங்கா குடும்ப கோவில் விஜயம், மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்,உலகத் தமிழ் மாநாட்டு கலாட்டா, இந்தி மொழி எதிர்ப்புக் கிளர்ச்சி, கீமாயண கலாட்டா, ஆர். எஸ் எஸ் அடிதடி, அனந்தராம தீட்சிதர் உபந்யாசம், ஸ்ரீகாஞ்சி சுவாமிகள் மதுரை நாராயணபுரம் சதஸ், ஸ்ரீ சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தது, பிசிராந்தையார் போல சுவாமி சிவானந்தாவை தரிசிக்காமலேயே நட்பு ஆகியன பற்றியும் சுருக்க மாக வரைகிறேன்.

contact swami_48@yahoo.com

Leave a comment

2 Comments

  1. மிகவும் பெருமையாக இருக்கிறது சார்… உங்களைப் போன்ற உய்ர்ந்த ஆன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்வதினையே பெருமையாக நினைக்கிறேன்.

  2. Visweswaran Subramanyam Family

     /  September 8, 2014

    கண்கள் பனிக்கிறது, அண்ணா! வாழ்க வளமுடனே தொடர்ந்து… (Wishing, with sincere prayers, a continued Blessed life..)

    “The only wish that is fit to be entertained in the mind of a devotee is the desire to realize the Lord in this very birth.” Life is too short to waste time hating any one. With sincere prayers and unconditional growing love… Visweswaran A. Subramanyam & family +001 (780) 640-1745 P.S: a) Any TRUE Thamizh lover WILL NOT miss to visit and get excited at the website http://www.azhagi.com ! b) Any TRUE searcher of The Great Indian Scientific Heritage WILL not miss to visit and be with http://www.iish.org !

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: