கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!

RNG
Sri Ramnath Goenka

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1276; தேதி: 9 செப்டம்பர் 2014

((கட்டுரையாளர் மதுரை தினமணி நாளேட்டில் 16 ஆண்டுக்காலம் சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியவர். லண்டன் பி.பி.சி. தமிழோசையில் (BBC WORLD SERVICE, BUSH HOUSE, LONDON) ஐந்து ஆண்டுக் காலம் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் (ப்ரொட்யூசர்-PRODUCER) பணியாற்றியவர். அவருடைய தந்தை வெ. சந்தானம், மதுரை தினமணிப் பொறுப்பாசிரியராக News Editor நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்)).

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று “என் அப்பாவிடம் கற்றது” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் (INDIAN EXPRESS) பத்திரிக்கை சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த திரு ராம்நாத் கோயங்காவின் (RNG= Ramnath Goenka) வரலாறு மிக அற்புதமான வரலாறு. இந்தியாவில் அவரைக் கண்டால் இரண்டு பேருக்கு சிம்ம சொப்பனம். திருமதி இந்திரா காந்திக்கும், கம்யூனிஸ்டு களுக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது. கீரியும் பாம்பும்– எலியும் பூனையும்— வட துருவமும் தென் துருவமும் — என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். மதுரையில் எங்கள் வடக்கு மாசிவீதி வழியாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் போகும். “டாட்டா, பிர்லா, கோயங்கா! டவுன், டவுன், டவுன்! Tata, Birla, Goenka! Down, Down, Down! (ஒழிக)! “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி வாழ்க) என்று வானம் அதிரக் கோஷமிட்டவாறு செல்வர். அந்த அளவுக்கு கம்யூனிஸ்டுகள் மனதில் “நீங்கா இடம் பெற்றவர்” கோயங்கா.

நாங்களும் கம்யூனிஸ்ட்களை லேஸில் விடமாட்டோம். ஒரு முறை மதுரையில் அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. அன்று மீனாட்சி கோவில் முழுதும் ஒரே சிவப்புத் துண்டு! சிவப்பு வர்ணம்!! மறு நாளைக்கு தினமணியிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிலும் கொட்டை எழுத்துக்களில் பெட்டிச் செய்தி போட்டு கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்தோம்.. மதமும் கம்யூனிஸ்டும் இரு துருவங்கள் என்பது கம்யூனிஸ்ட் கொள்கை. “சமயம் என்பது அபினி” (Religion is Opium) என்று கூறியவர் கார்ல் மார்க்ஸ்! நிற்க.

கோயங்கா பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம் கூறியது:
வட நாட்டு மார்வாரியான கோயங்கா, தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மவுண்ட் ரோடில் ஒருகாலத்தில் துணி விற்றவர். அவர் காயத்ரி மந்திரம் ஜபித்து வாழ்க்கையில் முன்னேறியவர். அதி பயங்கர அளவில் ஜபம் செய்வாராம். யாராவது குறுக்கிட்டால் மிகவும் கோபம் வருமாம். இதை என் தந்தை நேரில் பார்த்து இருக்கிறார். கடற்கரையில் காயத்ரீ ஜபம் செய்வார் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.

எமர்ஜென்ஸி (Emergency) நேரத்தில் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டல் செய்யப்பட்ட “த ஹிந்து” The Hindu நாளேடு தன் மார்க்சிஸ்ட் கொள்கையைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு பிராவ்டா (ரஷ்ய கம்யூனிஸ்ட் நாளேடு PRAVDA) பத்திகையாக மாறியது. அந்தக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் மொழி நாளேடுகளான தினமணி, ஆந்திரப் ப்ரபா, கன்னடப் ப்ரபா, லோக சத்தா, ஜனசத்தா முதலிய நாளேடுகள் மட்டும் இந்திரா அரசையும் எமர்ஜென்ஸியையும் எதிர்த்து எழுதின. தினமலர் நாளேடோ சஞ்சய் காந்தியை கிருஷ்ணாவதாரம் என்று எழுதி அசிங்கமான பெயர் எடுத்தது! ஆர்.எஸ்.எஸ்.காரகளுக்கு செமை கோபம்!

பெரிய பணக்காரகளுக்கு பொருளாதார கைச் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆயினும் தேச பக்தியில் கோயங்கா அப்பழுக்கற்றவர். அந்த ‘ஸ்பிரிட்”Spirit தான் அவரை அவசரகால பிரகடனத்திலும் அஞ்சா நெஞ்சனாக்கியது. எமர்ஜென்ஸி இருந்த 20 மாத காலமும் எங்களுக்கு தினமும் தொல்லைதான். சென்சார் அதிகாரிகள், எனது தந்தையை நள்ளிரவுக்குப் பின் இரண்டு மணிக்கு டெலிபோனில் கூப்பிட்டு “இந்தச் செய்தியைப் போடாதீர்கள், அந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இருந்து நீக்குங்கள்” — என்றெல்லாம் இன்ட்ஸ்ரக்ஷன் Instruction கொடுப்பார்கள். அதாவது எங்கள் பத்திரிக்கை, மறு நாள் காலையில் கொள்ளிடம் கடற்கரை வரை போக காலை பத்து மணி ஆகிவிடும். இதனால் மிகவும் சர்குலேஷன் டவுன் (Circulation was down) ஆயிற்று. இதே தொல்லை சென்னையில் தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமனுக்கும் இருந்தது.

ஏ.என். சிவராமன், தினமணி (எடிட்டோரியல்) தலையங்கத்தை எவ்வளவுதான் அடக்கி வாசித்தாலும் தினமும் அதைக் காரணம் காட்டி தினமணியைப் பழித்து வந்தனர் சென்சார் (Press Censor Officer) அதிகாரிகள். உடனே ஏ.என். சிவராமன், கோயங்காவைக் கூப்பிட்டு என்னால்தானே உனக்கு இந்தத் தொல்லை. நான் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

அதற்கு கோயங்கா “இf அட் ஆல் வீ ஹேவ் டு சிங்க், லெட் அஸ் சிங்க் டுகெதெர்” IF AT ALL WE HAVE TO SINK, LET US SINK TOGETHER என்று சொல்லிவிட்டார். நமது கப்பல் மூழ்கத்தான் வேண்டும் என்றால் மூழ்கட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ஜல சமாதி அடைவோம் என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்குக் கொள்கைப் பற்றுடையவர்!!

நாட்டில் உள்ள புகழ்பெற்ற பத்திரிக்கை எல்லாம் எமர்ஜென்சிக்கு ஜால்ரா அடித்த காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் மட்டும் எதிர்த்து நின்றது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டும். அவ்வப்போது என் தந்தை, ஏ.என்.சிவராமன், கோயங்கா ஆகியோர் ரகசிய விஷயங்களைப் பரிமாறிக்கொள்வர். அவைகள் வீட்டுக்கும் கொண்டு வரப்படுவதால் நானும் படிப்பேன். அவசர நிலைப் பிரகடன காலத்தில் கோயங்கா நிறுவனங்கள் மீது இந்திரா அரசு போட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரு நூறு 200 !!!

ராம்நாத் கோயங்கா மதுரைக்கு வரும்போதெல்லாம், மீனாட்சி கோவிலுக்குப் போகையில் “சந்தானம் வா” என்று சொல்லி என் தந்தையை மட்டும் அழைத்துச் சென்றுவிடுவார். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பக்கத்தில் வரக்கூடாது என்பது என் தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். புது கரன்ஸி நோட்டுகளுடன் அவருடன் ஒரு சில செயலாளர்களும் வருவர். அதை என் தந்தையின் கையில் கொடுத்து விடுவார்கள். அவர், கோவில் பட்டர் முதல் சேவகர் வரை எல்லோருக்கும் வாரி வழங்கி விடுவார்.

book on RNG

கன்னத்தில் விழுந்த அறை!
ஒரு முறை கோயங்காவை காக்கா பிடிக்க (கால் கை = காக்கா) விரும்பிய ஒரு அதிகாரி, “சார், நாளக்கு Boss பாஸ்-ஐ நான் கோவிலுக்குப் கூட்டிப் போகிறேன் என்றார். என் தந்தைக்கும் ஒரு வேலை மிச்சம் என்று மகிழ்ச்சி! அவரும் சொன்னபடியே போனார். ஆனால் கோயங்கா சாமி கும்பிடும்போது யாரும் குறுக்கிடக் கூடாது, பேசக்கூடாது என்று அவருக்குத் தெரியாது. அவரிடம் நல்ல பெயர் வாங்கும் ஆசையுடன் Boss பாஸ் – இடம் ஏதோ சொல்லப் போயிருக்கிறார். கோயங்கா அவர்கள், அந்த பெரிய அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.

மறு நாளைக்கு என் தந்தையைக் காரில் அழைத்துச் செல்ல அந்த அதிகாரி வந்தபோது கொஞ்சமும் வெட்கப்பாடாமல் நடந்த விஷயத்தை என் தந்தையிடம் சொன்னார். அவருக்கு அவ்வளவு மனக் குமுறல். யாரிடமும் சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. என் தந்தை வழக்கம் போல புன் சிரிப்புடன், “அடடே, உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன். அவர் சாமி கும்பிடும் போது யாரும் பேசக்கூடாது” என்றார். Too Late Advice!! டூ லேட் உபதேசம்!!

எங்கள் மதுரை தினமணி அலுவலத்தில் ஒரு நீண்ட ஹால் உண்டு. அதை மூன்றாகப் பிரித்து இடையில் டெலிபிரின் டர் Teleprinter அறையும் ஒரு புறம் இந்தியன் எக்ஸ்பிரஸ், மறு புறம் தினமணிக்கு என்று ஒதுக்கி இருந்தனர். டெலிபிரிண்டரில் Reuters ராய்ட்டர், பி.டி.ஐ (Press Trust of India), யு.என்.ஐ (United News of India) , யுபி.ஐ (United Press International), மற்றும் எங்கள் கரஸ்பண்டன் ட்களிடமிருந்து (FOC= From Our Own Correspondent) 24 மணி நேரமும் செய்தி வந்த வண்ணம் இருக்கும்.

thirupparangkunRam_a
Thirupparankundram Temple with a powerful Durga

மூன்று சக்திவாய்ந்த தெய்வங்கள் !!

திடீரென கோயங்காவிடம் இருந்து என் தந்தைக்கு கான்பிடென்சியல் மெசேஜ் Confidential Messageகள் வரும் . சந்தானம் 40 நாட்களுக்கு திருநள்ளாறு, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி கோவில்களில் அர்ச்சனை துவங்குங்கள் என்று. கோயங்கா வேறு எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்வாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் திருப்பறங் குன்றம் துர்க்கை, திருநள்ளாறு சனீஸ்வரன் (சனைச் சரன்= மந்த கதியில் செல்லும் கிரகம்), மதுரை மீனாட்சி ஆகிய மூன்று மிக மிக சக்தி வாய்ந்த தெய்வங்களை அவர் வாழ்நாள் முழுதும் பிடித்துக் கொண்டார். உடனே எனது தந்தை மாயவரம், தஞ்சாவூர் நிருபர் மூலம், திருநள்ளாறு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்வார். திருப்பறங்குன்றம் துர்க்கை, மதுரை மீனாட்சி கோவில் அர்ச்சனைகளை மட்டும் எங்கள் மேற்பார்வையில் செய்வோம் 40-ஆவது நாள் அர்ச்சனை முடியும்போது அவரது குடும்பத்தினர் யாரவது ஒருவரை கோயங்கா அனுப்பிவைப்பார். அவர் பெரிய தங்கச் சங்கிலி அல்லது தூக்க முடியாத கனம் உடைய வெள்ளி வாளியுடன் வந்து என் தந்தையிடம் கொடுப்பார். அதை அர்ச்சனை செய்த தலைமை பட்டரிடம் அவரைக்கொண்டே கொடுக்கச் செய்வார் என் தந்தை.

சில நேரங்களில் இவற்றை மதுரை மீனாட்சி கோவில் தலைமை ஸ்தானீகர் ம.க.சுந்தரேச பட்டர், எங்களிடம் பெருமையாகக் காட்டுவார். நானும் என் சகோதரர்களும் அந்த வெள்ளி வாளி, தேர்வடம் போன்ற தங்கச் சங்கிலிகளைத் தூக்கியும், தொட்டும் மகிழ்வோம்.

அந்தக் காலத்தில் மீனாட்சி கோவில் நகைகளைப் பார்க்க, 500 ரூபாய் கட்டினால் போதும் கோயங்கா குடும்பத்தினர் யார் வந்தாலும் கோடிக்கணகான ரூபாய் விலை மதிப்புடைய நகைகளையும் தரிசனம் செய்ய என் தந்தை ஏற்பாடு செய்வார்.

(இதற்குப் பின், திராவிடக் கட்சிகளின் சில மஹா பாவிகள் கையில் கோவில் நகைகள் சிக்கவே, பின்னால் வந்த ஜெயலலிதா அரசு —ஒத்தக்கூட்டன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்— என்ற கதையாக மூன்று பூட்டுப் போட்டு, கோவில் நகைகளைப் பூட்டிவைத்துவிட்டார். இப்போது அவைகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது!

கோயங்கா தனது காலம் முடியும் வரை அஜாதசத்ருவாக (வெல்ல முடியாதவன்) விளங்கினார். அவர் இறந்த (1991) போது லண்டனில் பி,பி.சி.யில் வேலை பார்த்துவந்தேன் — எனது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள் —- சில நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் லண்டன் டைம்ஸ் The Times, London பத்திரிகையில் கோயங்கா பற்றி அப்பத்திரிக்கை எழுதிய பெரிய இரங்கல் (Obituary) கட்டுரையைக் காட்டினேன். கோயங்கா இறந்த அன்று நீ ஏன் பி பி. சியில் அதை அறிவிக்கவில்லை என்று கோபித்துக் கொண்டார். அவருக்கு பி.பி.சி.அளவுக்குப் புகழ் உண்டு என்று தெரியாமல் போனது. அந்தச் செய்தியை பி.பி.சி..யில் சொல்லாமல் விட்டதில் எனக்கும் வருத்தம்தான்.

எனக்கு கோயங்கா மீது கொஞ்சம் கோபம் (He is the Himalayas, I am a mosquitoe!) உண்டு. அவரோ இமய மலை, நானோ கொசு! இருந்தபோதிலும் கொசுவுக்கும் காதுக்கு அருகில் ரீங்கரம் செய்யும் உரிமை உண்டல்லவோ! பி.பி.சி.காரர்கள் சென்னைக்கு வந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாலைந்து பரீட்சை நடத்தியதில் நான் முதலாவதாக நின்றதால் பி.பி.சி. என்னை லண்டனுக்கு அழைத்தது. அவர்கள் முதலில், ஆறு மாதத்துக்கே என்னை அழைத்து இருந்ததால் நான் தினமணியில் அன்பெய்டு லீவு Unpaid Leave தான் கேட்டிருந்தேன். இரண்டு முறை கோரிக்கை அனுப்பியும் அதை அவரோ அவரது பரிவார தேவதைகளோ கண்டுகொள்ளவே இல்லை.

லண்டன் பி.பி.சியில் இருந்து இந்தி-தமிழ் துறைகளுக்குத் தலைவரான கைலாஷ் புத்வார் Kailash Budhwar எனக்கு அடிக்கடி போன் செய்து ஏன் தாமதமாகிறது? எப்போது லண்டனுக்கு வருவீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னவுடன் அவரே டில்லியில் உள்ள பி.பி.சி. நிருபர் மார்க் டல்லி, சுபாஷ் சக்ரவர்த்தி (Mark Tully and Subash Chakravarthy) ஆகியோருக்குப் போன் செய்தவுடன் கோயங்கா அலுவலகம், “சுவாமிநாதன் இடமிருந்து எங்களுக்கு எந்த கோரிக்கை மனுவுமே வரவில்லை” — என்று தடலடியாக அடித்து (பொய்) விட்டனர். உடனே நான் ஒரு கடிதம் டெலிப்ரின் டர் மூலம் அனுப்பவே மறுநாளைக்கே எனக்கு விடை கொடுத்து அனுப்பினர்! இதுதான் எனது பொருளற்ற கோபத்துக்குக் காரணம்!

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா முழுதும் ஒரு பயம் நிலவியது. எமர்ஜென்ஸி நீங்கிய மறு நாளைக்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவன நாளேடுகள் இந்திராவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தின. அதுவரை தொடை நடுங்கிகளாக இருந்த பத்திரிக்கைகளின் சர்குலேஷன் மறு நாளே இமய மலை போலச் சரிந்தது. அதற்குப் பின்னர் அவை எல்லாம் எமர்ஜென்ஸி கால அக்கிரமங்களை எதிர்த்து எழுதின. தேர்தலில் இந்திரா காந்தியும் படுதோல்வி அடைந்தார்.

கோயங்காவைப் பார்க்க எனக்கும் ஆசை. ஒருமுறை மதுரை தினமணி அலுவலத்துக்கு வந்தவுடன் ஒரே பரபரப்பு! எங்கள் பகுதிக்கும் வருவார் என்று எண்ணி வேலையில் மும்முரமாக இருப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தோம்!!! டெலிப்ரிண்டர் பகுதிக்கு அந்தப் புறம் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுதிக்கு மட்டும் வந்துவிட்டு ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்கள் எல்லோரும் டெலிபிரின் டர் பகுதி கண்ணாடி வழியாக அரைகுறையாக (திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பது போல) தரிசித்தோம். 16 ஆண்டுகள் தினமணியில் வேலை பார்த்தும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

கருத்து சுதந்திரத்தின், பத்திரிக்கைச் சுதந்திரத்தின் பாதுகாவலராக விளங்கியவர் ராம்நாத் கோயங்கா (ஆர்.என்.ஜி) அவர்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!

வாழ்க ஆர்.என்.ஜி! வாழ்க பத்திரிக்கை சுதந்திரம்!!
Long Live Press Freedom! Long Live R.N.G!!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: