பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

Sunrise_Varanasi
Sun Rise at Varanasi

By ச.நாகராஜன்
Post No.1287; Posted on 14th September 2014.

“ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ( நதிகளுக்குள் கங்கா நதி நான்! )
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் (10ஆம் அத்தியாயம், 31ஆம் ஸ்லோகம்)

விஸ்வ பாவினி மாதா
பிரபஞ்சத்தையே தூய்மையாக்கும் ‘விஸ்வ பாவினி’ என்றும், அனைவரின் பயங்களைப் போக்கும் ‘பய ஹாரிணி’ என்றும், அற்புதமான அங்கங்களைக் கொண்டிருக்கும் ‘சுப அங்கிணி; என்றும்,உலக மக்கள் அனைவரின் நதியாக ‘லோக நதி’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஆயிரக்கணக்கான நாமங்களால் பூஜிக்கப்படுபவள் கங்கா மாதா!

பகீரதனின் தவத்தால் பூமியில் கங்கை இறங்கிய அரிய செயலை நினைத்து மனம் மகிழ்ந்த நரசிம்மவர்ம பல்லவன் அந்த அழியாக் காவியத்தை சிற்பமாக மாமல்லபுரத்தில் வடித்து பாரத ஒற்றுமையையும், நல்லோரின் அரிய செயல் உலகத்திற்கே நன்மை பயப்பதையும் சுட்டிக் காட்டினான் ராமேஸ்வரத்தில் மணல் எடுத்து கங்கோத்ரியில் கரைப்பதை தொன்று தொட்டு செய்து வரும் பண்பாட்டுப் பழக்கமும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சான்று!

GANGA SUNSET

நான்கு ‘க’காரங்கள்
ஹிந்துக்கள் போற்றும் நான்கு ‘க’காரங்கள் கங்கா, கீதா, காயத்ரி, கோ (பசு) ஆகும். மரணமடைந்த ஜீவனைப் பற்றி யமன் சர்ச்சை செய்யாமலிருக்க வேண்டுமா? ஆதி சங்கரர் அதற்கான எளிய உபாயத்தைக் கூறி இருக்கிறார்:

பகவத் கீதா கிஞ்சிததீதா கங்கா ஜல லவ கணிகா பீதா சக்ருதபி யேன முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
-பஜ கோவிந்தம் பாடல் 20

“பகவத் கீதையைச் சிறிது படித்தாலோ கங்கை ஜலத்தில் துளியை உட்கொண்டாலோ கிருஷ்ண நாமத்தை ஒரு முறையேனும் உச்சரித்தாலோ அப்படிப்பட்டவரைப் பற்றி யமன் விவாதிக்கவே மாட்டான்” என்று ஆணித்தரமாக ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளும் உரையைப் படிக்கும் போது கங்கா, கீதா, கிருஷ்ணா பற்றிய மஹிமையை உணர்கிறோம்; மலர்கிறோம்.
கங்கா ஜலத்தின் ஒரு சிறு துளி யமனையும் சற்று விலகி இருக்கச் செய்யும்!

அலெக்ஸாண்டர் விரும்பிய இறுதி இடம்
கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பது ஒரு அரிய ரகசியம். அந்த ரகசியத்தைப அறிய ஏராளமானோர் முயன்றதை சரித்திரம் விளக்குகிறது, அக்பர் (கி.பி,1336-1605) ஒரு பெரிய குழுவையை அனுப்பி கங்கை தோன்றும் இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பினார். அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அப்துல் ஃபஜல், அவர் எப்போதும் கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார் என்று குறிப்பிடுகிறார். வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் போது கூட ஹரித்வாரிலிருந்து எடுக்கப்பட்ட கங்கை ஜலத்தையும் கூடவே அக்பர் கொண்டு சென்று பயன்படுத்தினார் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து வந்து அக்பர் அரசவையில் இருந்த கிறிஸ்தவ மிஷனரியான பாதர் மான்சரேட் தான் முதன் முதலாக இமயமலையின் வரைபடத்தைத் தயாரித்தார். 1807இல் பிரிட்டிஷார் கங்கையின் தோற்றம் காணத் துடித்து முயற்சியை ஆரம்பித்தனர். 1857இல் தான் அது சாத்தியமானது.

மாமன்னன் அலெக்ஸாண்டர் தனது இறுதி இருப்பிடமாக இருக்க விரும்பித் தேர்ந்தெடுத்த இடம் கங்கை பிரதேசம்!ஆனால் அவன் அல்பாயுளில் மறைந்து போனதால் அவன் விருப்பம் நிறைவேறவில்லை.

2500 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்ற புனித நதி கங்கை. அதன் அகலமோ மூன்று கிலோமீட்டர்கள். மழை காலத்தில் சில இடங்களில் பத்து கிலோமீட்டராகப் பரந்து ஓடும்! கோமுகியில் தோன்றி 250 கிலோமீட்டர் தூரம் பாகீரதியாகப் பரிணமிக்கும் பிரவாகம் தேவ ப்ரயாக்கில் அலக்நந்தாவுடன் இணைந்து கங்கையாக உருவெடுக்கிறது.

GANGA LAMP

அமேஸான் நதி 90 கிலோமீட்டர் அகலமும் 6992 கிலோமீட்டர் நீளமும் கொண்டு பெரிய நதியாக விளங்கினாலும் புனிதத்திலும் அரிய குணங்களிலும் சற்றும் கங்கைக்கு அருகில் கூட வர முடியவில்லை.

கங்கை நீரின் புனிதமும் அதிசயத் தன்மையும்
டி.எஸ்.பார்கவா என்பவர் மூன்று வருட கால ஆராய்ச்சியை கங்கையில் மேற்கொண்டு ஆக்ஸிஜனைப் பெற விரும்பும் அளவானது மற்ற நதிகளை விட கங்கை நீரில் மிகவும் குறைவு என்று கண்டு பிடித்துள்ளார். கங்கை நீரின் தூய்மையாக்கும் தன்மை உலகின் இதர எல்லா நதிகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிகம் என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் நிபுணரான் சி. இ.நெல்ஸன் ஹூக்ளி நதிப் பகுதியிலிருந்து எடுத்த நீர் லண்டனைச் சேரும் வரையில் கெடாமல் இருந்தது என்று அதிசயிக்கிறார் ஹூக்ளி கங்கையின் அசுத்தமான பகுதி. அதுவே இப்படி நீண்ட காலம் தூய்மையோடு இருந்தது என்றால் கங்கோத்ரியில் எடுக்கப்படும் நீர் எவ்வளவு காலம் புனிதத் தன்மை கெடாமல் இருக்கும்! பிரமித்து வியக்க வேண்டியது தான்!

1896ஆம் ஆண்டு, எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின் என்ற பிரிட்டிஷ் உயிரியல் நிபுணர் கங்கை நீரை நன்கு ஆராய்ந்து தன் முடிவுகளை பிரான்ஸை சேர்ந்த அறிவியல் இதழில் எழுதி அறிவித்தார். அதில் காலரா கிருமிகளை கங்கை நீரில் விடும் போது அவை துடிதுடித்து மூன்றே மணி நேரத்தில் இறந்து விடுகிறது என்ற அதிசயச் செய்தியை அறிவித்தார்.இதே கிருமிகள் தூய்மையாக்கப்பட்ட நீரில் 48 மணி நேரமானாலும் அப்படியே இருப்பதை அவர் விவரித்த பொது உலகமே அதிசயித்தது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் கங்கை நீர் கொசுக்களை உற்பத்தி செய்ய விடுவதில்லை என்ற அரிய ரகசியத்தைக் கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட இயற்பியல் உண்மைகளாலும் தெய்வீக ரகசியத் தன்மைகளாலும் தான் போலும், ஆயுர் வேத ஆசார்யர் சரகர் பல வித வியாதிகளுக்கு கங்கை ஜலத்தை அருமருந்தாக உட்கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறார்.

yoga-meditation-rishikesh
Meditation in Rishikesh

கங்கோத்ரி ஆலயம்
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி நோக்கிச் செல்லும் பாதை நெடுகிலும் அதிசயங்கள், ஆன்மீக வரலாறுகள், அவற்றுள் பொதிந்திருக்கும் ரகசியங்கள் தாம் உள்ளன.
சிவனின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்காவதரண் தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த சுக்ல தசமியை கங்கா தசரா எனக் கொண்டாடுகின்றனர் அனைவரும்! கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்!

உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில் ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. அதைத் தாண்டிச் சென்று சுகி எனும் அழகிய இடத்தில் பாகீரதி நதிக்கரை சரிவில் திரௌபதி கா தண்டா என்னும் இடம் உள்ளது. சுவர்க்கத்திற்கு செல்லும் வழியில் திரௌபதி உடலை உகுத்த பிரதேசம் இது. இந்தப் பகுதியின் அருகில் உள்ள ஹிமாச்சல் பகுதியில் திரௌபதி உடலை உகுத்த இடம் உள்ளது.

சுகியைத் தாண்டிச் சென்றால் ஹரிசில் என்று அழைக்கப்படும் ஹரி சிலா உள்ளது.கங்கை பூமியில் இறங்கியவுடன் விஷ்ணு தவம் செய்த இடம் ஹரிசில்! சில்லென்று அதி வேகமாக இங்கு வீசும் காற்றைப் பற்றி பக்தர்கள் கூறும் போது வாயு பகவான் விஷ்ணுவை வழக்கமாக வணங்கும் இடம் இது என்பதால் அவர் பிரத்யக்ஷமாக இங்கு இருக்கிறார் என்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் பிரபலமான கூர்க்கா வீர்ர் அமர்சிங் தாபா கட்டிய கங்கா மாதா கோவிலை அடையலாம்.

சுமார் 21 அடி சதுரபீடத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள கங்கா மாதா சிலை அற்புதமாக அமைந்திருக்க சற்று கீழே லக்ஷ்மி, சரஸ்வதி,அன்னபூரணி பாகீரதி, ஜாஹ்னவி,யமுனை ஆகியோரின் தெய்வீகச் சிலைகள் அமைந்துள்ளன.

3200 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைந்துள்ள கங்கோத்ரியிலிருந்து கங்கா மாதா பொங்கி வரும் புனிதமாக, அமிர்த பிரவாகமாகப் பாய்ந்து அனைவரின் உடல் அழுக்கையும் உள்ள அழுக்கையும் போக்கி முக்தி என்னும் பேரின்ப நிலையையும் காலம் காலமாக அளித்து வருகிறாள்.

modi-aarti-1_051814120309

பொங்கி வரும் புனிதம்
அவளை மாசு படுத்தும் நவீன கால முயற்சிகளைத் தகர்த்து புகழோங்கிய பழைய காலப் பெருமையையும் புனிதத்தையும் திருப்பிக் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கங்கையின் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. தூய்மைப் பிரவாகமாகப் பெருகி வரும் அலையில் ஊழல் எல்லாம் அடிபட்டு, அகற்றப்பட்டு மகோன்னதமான, பாரதம் உருவாக இருக்கிறது; உத்வேகம் ஊட்டப்பட்ட கங்கையின் செல்வர்களான நாம் உலகின் தலைமை பீடத்தைப் பெறப் போகிறோம்!

ganga ARTI2

கங்கா மாதா கீ ஜெய்!
(This article was written by my brother S.Nagarajan for a Tamil magazine: London Swaminathan)
ஞான ஆலயம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மெஜாரிடி பெற்றவுடன் நரேந்திர மோடி கங்கா ஆரத்தியை நிகழ்த்தி கங்கையை வழிபட அதைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்தவர்களின் மெய் சிலிர்த்தது. காலம் காலமாக நாம் வழிபட்டு வரும் கங்கா மாதா தூய்மைக்குத் தூய்மை தருபவள் அவளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகி விட்டதை ஒட்டி மலரும் கட்டுரை இது!
CONTACT swami_48@yahoo.com

The Holy Ganga River

(Pictures are taken from various websites;thanks)
***************
.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: