பட்சிகள் அருள் பெற்ற அபூர்வ ஸ்தலங்கள்

cock_sidenew
Cock at Trafalgar Square, London (Photo by london swaminathan)

எழுதியவர்: ச.நாகராஜன்
கட்டுரை எண் 1307; தேதி செப்.24, 2014

(This article is written by my brother S Nagarajan and published in the Tamil magazine Jnana Alayam: London swaminathan)
If you want to read similar subject in English please see my posts: 1 Gods and Birds posted on Feb..3,2013 (2). Hindu Eagle Mystery Deepens, posted on Feb.16, 2013 (3). Who rides What Vahana (Animals or Birds)? posted on Oct.26, 2012; Interesting Facts about Vahanas, posted on oct. 2012; (4) Four Birds in One Sloka (5) Kapinjala Bird Mystery (6) Mysterious Vedic Homa Bird: Does it exist) (7) என்ன கடவுளுக்கு என்ன வாகனம்? (8) கா….கா…….கா……கா……

cock1
படைப்பில் அனைவரும் சமம்

“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பாடினார் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். பறவைகளை மனிதருடன் சேர்த்த அத்வைத பாவனையை அவர் ஒரு சிறந்த ஹிந்துவாக இருந்ததனாலேயே பெற முடிந்தது.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில் குயில் ஆச்சுதடி என

சிதாகாச நடனத்தை வள்ளலார் அற்புதமாக்ச் சித்தரித்தார்.

அருணகிரிநாதரோ “ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில்” என்று பிரணவமே மயில்ரூபம் கொண்டு அற்புதமாக ஆடுகிறது என்று (வாதினை அடர்ந்த என்று தொடங்கும் பாடலில்) விளக்குகிறார். இப்படிப்பட்ட அற்புதமான பரவசமூட்டும் ஆன்மீக விளக்கங்களை அறிந்து கொள்ள பரந்த பாரத தேசமெங்கும் பரவிக் கிடக்கும் தலங்களில் தான் எத்தனை பட்சிகள் பற்றிய ஸ்தலங்கள்.

Peacock cry

அன்னை மயிலாக வழிபட்ட மயிலை
அன்னை உமாதேவி, மயிலாக உருக்கொண்டு சிவபிரானை வழிபட்டதால் திரு மயிலை என்ற பெயர் பெற்ற மயிலையின் பெருமையை மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று அருளாளர்கள் கூறுவதால் அறிய முடிகிறது.

ஈக்களும் வண்டுகளும் பூஜிக்கும் தலம்
ஈவேங்கை மலை என்னும் ஈங்கோய்மலை ஈக்களால் பூஜிக்கப் பெற்ற தலம். நக்கீரர் திரு ஈங்கோய்மலை எழுபது என்னும் நூலை இயற்றியதால் மகிழ்ந்த அரசன் ஒருவன் அவரது உருவத்தை இங்கு பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தும் படி நிபந்தம் அமைத்ததை இந்தக் கோவிலின் சிலாஸாசனம் தெரிவிக்கிறது. இதன் இன்னொரு பெயர் மதுகிரி.

பட்டீச்சுரத்தில் இறைவனை வழிபட்ட மதுவல்லி என்ற தாசியும் அவள் வளர்த்த கிளியும் முத்தி பெற்றதாக பட்டீச்சுரப் புராணம் தெரிவிக்கிறது.

பட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று இருக்கிறது. அதற்கு நந்தன் மேடு என்று பெயர். இங்கு ஏழரை லட்சம் பொன் இருப்பதாக அறிவிக்கும், “எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்த தாக” அறிவிக்கும் ஒரு கல்வெட்டைக் கண்டார் சரபோஜி மஹாராஜா. (எழுவான் என்றால் சப்த கன்னிகள் (மேற்கே) இருக்கும் இடம் என்றும் தொழுவான் என்றால் முகமதியர் தொழும் இடம் என்றும் அறிந்து கொண்ட அவர், சோழன் மாளிகையில் புதையல் இருக்கும் இடத்தில் வெட்ட முயல்கையில் கதண்டுகள் (கருவண்டுகள்) வெளிப்படவே தன் முயற்சியைக் கைவிட்டதாக சுவையான செய்தி ஒன்றை வரலாறு தெரிவிக்கிறது. கருவண்டுகள் புதையலைக் காக்கின்ற அபூர்வ தலம் இது..
பட்டீச்சுரமும், திருச்சத்திமுற்றமும் கருடன் பூஜித்த தலங்களாகும்!

Funny animal picturesSource: Fimca Grey fgrey@lancashire.newsquest.co.uk

கழுகு வழிபடும் கழுக்குன்றம்
வேதமே மலையாய் விளங்கியமையால் வேதகிரி என்ற பெயருடன் திகழும் திருக்கழுக்குன்றத்தில் 500 அடி உயரமுள்ள மலையில் தினமும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்வதை அனைவரும் அறிவோம். இதனால் பட்சி தீர்த்தம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இந்த தலத்தில் மார்க்கேண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இல்லாமல் தவிக்க இறைவன் சங்கு ஒன்றைச் செய்து அருளியதையும் இங்குள்ள குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தி ஆவதையும் கோவில் வரலாறு தெரிவிக்கிறது!

ராவணனை எதிர்த்த ஜடாயுவின் இறக்கைகளை அவன் அறுக்க, கீழே விழுந்து இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு ராமரிடம் தன்னை வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூரில் தகனம் செய்யுமாறு வேண்டியதை வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள ஜடாயு குண்டத்தை பக்தர்கள் தரிசிப்பது மரபு.

கல் கருடனின் ஸ்தலம்
கருடனுடன் தொடர்பு கொண்ட தலங்களோ ஏராளம். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் அதிசய வரலாற்றைக் கொண்டவர். சிற்பி ஒருவர் கருடனைச் செதுக்கி பிராணபிரதிஷ்டை செய்த போது அது பறக்க ஆரம்பிக்கவே அதன் மீது ஒரு கல்லை எறிய அது அலகில் பட்டு கருடன் விழுந்த தலம் இது! திருநறையூர் எனச் சிறப்பிக்கப்படும் இந்த தலத்தில் கருடனை மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு வரும் போது நால்வரும் பிரகார வலத்தின் பொது எட்டுப் பேரும் கீழே கொண்டு வரும் போது முறையே 16,32,64, 128 என்ற கணக்கில் தூக்கும் படி கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவது இன்றும் காண முடியும் ஒரு அதிசயம்.

bird then chittu

பட்சிகளின் ஸ்தல பட்டியல்
இப்படி நூற்றுக்கணக்கான தலங்களில் பட்சிகளின் தொடர்பு உள்ளதை அந்தந்த தலத்தின் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதை இன்னும் அதிகமாக நன்கு அறிய விரும்பலாம். அவர்களுக்கு உதவும் ஒரு பட்டியல் (உ.வே.சுவாமிநாதையர் ஓலைச் சுவடிகளிலிருந்து குறிப்படுத்துத் தொகுத்த்து) இதோ:-

பூஜித்த பட்சி தலம்

பெட்டைப் பருந்து வேளூர் தேதியூர்
அன்னம் அம்பர்
மயில் மாயூரம், மயிலை, திருமயிலாடி
சாதகப் புள் திருவஞ்சிக் களம்
எண்காற்புள் திருபுவனம், தாராசுரம்
சக்கரவாகம், திருப்பள்ளியின் முக்கூடல்

12_YT_SPARROW_1391748f

குருவிகள் சேர்ந்து பூஜித்த தலம் குருவி, ராமேஸ்வரம்,முக்கூடல்
வலியான், மதுரை
கூகை கொடுங்குன்றம்
கோழி ஐந்தூர் (திருச்செந்தூருக்கு அருகில் உள்ள இடம்)
காக்கை சிதம்பரம்,அம்பர்மாகாளம்,திருப்பனந்தாள்,
இடைமருதூர்,குரங்கணில் முட்டம்
வண்டு திருவண்டுதுறை
வாவல் புகலூர், ராம நந்தீஸ்வரம்
தேனீ ஈங்கோய்மலை,நன்னிலம், கந்தங்குடி

13TH_ARREST_Swan,Vijayawada
குளவி கோளிலி
சாதகப்புள் திருவஞ்சிக்களம்
நாரை திருநாரையூர்
மாடப்புறா வல்லம்
கிளி கீரனூர், கிளியனூர்

பறவைகளும் முக்தி பெறலாம்

இந்தப் பட்சி ஸ்தலங்கள் உணர்த்தும் உண்மை என்ன? பெறுதற்கு அரியது மனிதப் பிறவி என்றாலும் அதில் பிறந்தால் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது கிடையாது. இறைவன் அருளுக்கு முன் சகல ஜீவராசிகளும் சமம். பட்சிகளாக இருந்து இறைவன் அருள் வேண்டி பூஜித்து முக்தி பெற்ற பட்சிகளும் உண்டு. பட்சிகளைச் சுற்றிப் படரும் திவ்யமான சரிதங்களைக் கேட்கும் போதும் அவற்றுடன் தொடர்புள்ள தலங்களைத் தரிசிக்கும் போதும் சிந்திக்கும் பகுத்தறிவு ஆற்றல் இல்லாமல் இருந்தும் கூட அவை இறைவனின் அருள் பெற்ற அதிசயங்களை உணர்ந்து நம்மை இறையருளுக்குப் பாத்திரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பெற முடிகிறதே, அதற்காகவே இந்தத் தலங்களுக்கு நாம் விஜயம் செய்யலாம். இறைவனை வணங்கி இக பர சௌபாக்கியம் பெறலாம்!

ஞான ஆலயம் செப்டம்பர் 2014 இதழில் பிரசுரமாகி உள்ள கட்டுரை

contact swami_48@yahoo.com
**********************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: