ரிஷிகள் யார்? ரிஷிகள் எத்தனை வகை?

rishi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1340; தேதி அக்டோபர் 11, 2014.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது. ஆதி சங்கரர் ஒரு துதியைப் (கனக தாரா ஸ்தோத்திரம்) பாடும்போது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது. முத்து சுவாமி தீட்சிதர் ஒரு ராகத்தைப் (அமிர்தவர்ஷனி) பாடும்போது மழை கொட்டியது. நாம் அதையே துதிக்கும் பொழுதும், பாடும்பொழுதும் ஏன் அப்படி நடப்பதில்லை?

rishi shishya

1.அவர்களைப் போல சொல், செயல், சிந்தனை மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும்.
2.அவர்களைப் போல தீவிரம் (Intensity ஈடுபாடு) மற்றும் நேரம், காலம், சூழ்நிலை அணுசரனையாக இருக்க வேண்டும். நேரம், காலம், சூழ்நிலை பற்றி அவர்கள் ஞானக் கண்ணால் அறிய முடியும்.
“ரிஷிர் தர்சனாத் ஸ்டோமன் ததர்ச இதி ஔவமன்யவ:” — என்பதை யாஸ்கர் மேற்கோள் காட்டுவார்.

அவர்கள் “சூத்ர த்ருஷ்டா” என்றும் “சூத்ர கர்தா” இல்லை என்றும் சொல்லுவர்.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிக்களும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.

shankarasiva

இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

agastya in nepal,bharatkalyan97.blogspot

பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
– சுபம் —

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: