கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1350; தேதி அக்டோபர் 16, 2014.
காட்டுத் தீ பற்றிய ஒரு அற்புதமான உவமையை ரிக் வேதம் முதல் திருக்குறள், கம்பன் வரை பலரும் பயன் படுத்தும் அழகை, வேதத்திலும் புறநானூற்றிலும் திருக்குறளிலும், கம்பனிலும் காண முடியும். முதலில் வள்ளுவர் காட்டுத் தீ பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்:-
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புனையைச் சுடும் – திருக்குறள் -306
சினமென்னும் தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு அவனை அழிப்பதுடன் அவனுக்குத் துணையாக நின்ற பாதுகாவலரையும் அழிக்கும்.
இதில் தீ என்பதற்கு அவர் பயன்படுத்தும் சொல் ‘’சேர்ந்தாரைக் கொல்லி’’. இது ஆஸ்ரயாச: என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். வடமொழி நூல்களில் பல்வேறு இடங்களில் காணப்படும் சொல் இது.
ரிக்வேதம்:–10-79-4
இது ரிக்வேதத்தில்தான் முதல் முதலில் வருகிறது. குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முந்தையது ரிக்வேதம். பாலகங்காதர திலகர், வானவியல் ஆராய்ச்சி மூலம், 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபி 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் காட்டியுள்ளனர்.
அக்னி பற்றிய பாடலில் வரும் வரிகள் (ரிக்வேதம்:10—79—4)
“இந்தப் புனித விதியை உனக்குச் சொல்கிறேன். பூமியும் வானமும்; –பிறந்த குழந்தை — தந்தை, தாயையே விழுங்கிவிட்டது.
இந்தக் கடவுள் பற்றி முழுதும் நான் அறியேன். நான் சாதரண மானுடன்– ஆனால் அக்னி பகவானுக்குத் தெரியும். அவர் எல்லாம் அறிந்தவர்.”
இதில் கவனிக்க வேண்டியது பிறந்த குழந்தை—தாய் தந்தையரையே விழுங்கிவிட்டது. அதாவது தீயானது பிறக்கும் இடம் — காடுகளில் இரண்டு மரங்கள் உராயும் போது — மரத்தில் பிறக்கும். அவைதான் தாய் தந்தையர்கள் – அப்படிப் பிறந்தவுடன் தன்னையும் அந்த மரங்களையும் எரித்து அழிப்பதையே தாய்,தந்தையரை விழுங்கிவிட்டது என்கிறார் ஒரு வேத கால ரிஷி. இதைத் தமிழ் நாட்டில் வாழ்ந்த கம்பன் வரை பலரும் பயன்படுத்துவது பாரத நாட்டின் சிந்தனையும் செயல்பாடும் ஒன்றே — உவமைகளில் கூட – ஒன்றே என்று காட்டுகிறது.
ஆஸ்ரயாச: = சேர்ந்தாரைக்கொல்லி
அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நிகண்டில் அக்னி பகவானுக்கு உள்ள 34 பெயர்களில் ஒன்று ஆஸ்ரயாச:. இதன் பொருள் சேர்ந்தாரைக் கொல்லி என்பதாகும். அதாவது தன்னுடன் சேர்ந்தாரையும் சேர்த்து அழிப்பது அக்னி. இதை 4000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலரும் உவமையாகப் பயன்படுதுவது படித்துச் சுவைக்கத்தக்கது.
புறநானூற்றில் மருதன் இளநாகன்:–
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம் ஆயின், வைஎயிற்று,
அரிமதர்க் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறு தீப் போல
அணங்காயினள்,, தான் பிறந்த ஊர்க்கே.
—மருதன் இளநாகன் பாடல் 349 புறம்
பொருள்:–அரசனோ கோபக் கனல் பொங்கப் பேசுகிறான். நெற்றியில் வழியும் வேர்வையை கூரான ஈட்டியால் வழிக்கிறான். பெண்ணைப் பெற்ற அப்பனோ கொஞ்சமும் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. இவளோ அழகி; கூரான பற்கள், குளிர்ந்த கண்கள், மா நிறம் —- காட்டில் ஒரு மரத்தில் தோன்றிய தீ, அந்த மரத்தை அழிப்பதோடு நிற்காமல் அந்தக் காட்டையே அழிப்பது போல இந்தப் பெண்ணால் ஊருக்கே கேடு வரப்போகிறது.
மரம்படு சிறு தீப்போல அணங்கு ஆயினள் – என்பது அழகான உவமை.
கம்பராமாயணத்தில்
மூங்கிலிற் பிறந்து முழங்கு தீ மூங்கில்
முதலற முருக்குமாப் போலத்
தாங்கரும் சினத் தீ தன்னுள்ளே பிறந்து
தன்னுறு கிளையெல்லாம் தகிக்கும்;
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் அடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத்தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறுண்டோ ?
உத்தரகாண்டம் – இலவிணன் -29
வள்ளுவனைப் போல, கம்பன் கோபத் தீயை, மரத் தீக்கு ஒப்பிடுகிறான். ஒருவன் அடையும் கோபம் அவனை மட்டும் அழிக்காது அவனைச் சார்ந்து நின்றாரையும் அவனுக்கு ஆதரவு கொடுத்தாரையும் சேர்ந்து அழித்துவிடும்.
உதவிய நூல்கள்:– திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன், ரிக்வேதம்-ஆங்கில மொழிபெயர்ப்பு, ரால்ப் டி.எச்.கிரிப்பித், புறநானூறு-வர்த்தமானன் பதிப்பகம், அமரகோசம், கம்பராமாயணம்.
You must be logged in to post a comment.