கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.
சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.
கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.
இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.
இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:
1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!
2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.
2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.
3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.
பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!
4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.
5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.
6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.
7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.
8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.
9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!
10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.
11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.
12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.
13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?
14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.
புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.
வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!
contact swami_48@yahoo.com
venkatlic66
/ April 19, 2016Good work. Thanks