கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1375; தேதி அக்டோபர் 28, 2014.
உலகின் முதல் அகராதி / நிகண்டின் பெயர் அமரகோசம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதை அமரசிம்மன் என்பவர் எழுதினார். இது விக்ரமாத்தித்தன் -(கி.மு.முதல் நூற்றாண்டு)– காலத்தில் எழுதப்பட்டதாக செவிவழி வந்த செய்திகள் கூறின. ஆனால் கட்டாயம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இது இருந்ததற்கான சான்றுகள் உள. சுமார் 2000 ஆண்டுப் பழமையுடையது என்று கொண்டால் தவறில்லை. உலகின் முதல் நிருக்தம் ( கி.மு 800 சொற் பிறப்பியல் நூல்), உலகின் முதல் இலக்கண நூல் ( கி.மு 700 பாணீனீயம்), உலகின் முதல் காம நூல் (காம சூத்ரம்), உலகம் வியக்கும் டெசிமல் சிஸ்டம் ( தசாம்ச முறையின் மிகப்பெரிய எண்கள்; கி.மு.1000 வேத கால பிராமணங்களில் உள ) – ஆகிய அனைத்தையும் உண்டாக்கியோருக்கு ‘அகராதி’ என்பது ஒரு எளிய பணியே.
சிறு குழந்தைகள் சம்ஸ்கிருத பள்ளிக்குப் போனவுடன் இலக்கண வாய்ப்பாட்டையும், நாம லிங்கானுசாசனம் எனப்படும் அமரகோசத்தையும் மனப்பாடம் செய்ய வைத்துவிடுவர். வாழ்நாள் முழுதும் இதை மறக்க முடியாது. நானே பள்ளிக்கூட வகுப்பு முடிந்தவுடன் மதுரை மேலச்சித்திரை வீதி ஆடிட்டர் வீட்டு நடையில், தரையில் உட்கார்ந்து இப்படிக் கற்றவன். உலகமே வியக்கும் அற்புதமான வகையில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. நிற்க. சொல்ல வந்த விஷயம் வேறு.
Kinnars in Avantipur, Kashmir
அமரகோஷத்தில் ஒவ்வொரு கடவுளருக்கும் சொல்லுக்கும் உள்ள பல பெயர்கள் இருக்கின்றன. இதற்கு வியாக்கியானம் செய்த உரைகார்கள் அற்புதமான விஷயங்களை நமக்கு அளிப்பர். அவைகளை ஒருவன் கற்றால் அறிவு ஒளிரும். லண்டனில் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியரை வீட்டிற்கு அழைத்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்தேன். இன்று அமரகோசம் குறிப்பிடும் கந்தர்வர்கள் “ஹாஹா ஹூஹூ” பற்றி பார்ப்போம்.
“கந்தர்வானாம் (அஹம்) சித்ரரத:”
— என்று பகவத் கீதையில் (10-26) கண்ண பிரான் கூறுகிறார்.
மஹாபாரதம் மூலம் சித்ரரதனை நமக்குத் தெரியும். ஆனால் ‘’ஹாஹா’’, ‘’ஹூஹூ’’ பற்றி எங்குமே தகவல் இல்லை. கந்தர்வர் பற்றி வரும் விஷயங்களை வைத்து நாம் ஊகிக்கத்தான் வேண்டும்.
கந்தர்வர் பற்றிய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது; ஏனெனில்
1.ராமாயணமும் மஹாபாரதமும் கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு படுத்துகின்றன. ஆகவே சிந்து சமவெளி நாகரீக ஆட்சியாளர் பற்றி அறிய உதவும்.
2.வெள்ளைக்காரர்கள் வந்து ஆரியர், திராவிடர், முண்டா என்று இந்தியர்களை 3 கூறு போடுவதற்கு முன் நம் வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் இந்தியர்களை 18 கூறுகளாகப் போட்டன. ஆனால் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் எழுதி வைத்தார்கள். அந்த 18 வகையினரில் கந்தர்வர் என்பவர் பாடகர்கள் — கின்னரர்கள் என்போர் வாத்யம் வாசிப்போர். துருக்கி வரை பல இசைக் கருவிகளுக்கு கின்னர, கின்னரி, தும்புரு, தம்புரா, டாம்போரின் என்று தான் பெயர்!!! ஆகவே வேத காலம் முதல் வழங்கும் கந்தர்வ என்னும் சொல் இசை ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் முக்கியம்.
சித்ரரதன் யார்?
மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன். அது என்ன கதை?
பஞ்சாப் (பாஞ்சாலம்) நோக்கி பாண்டவர்கள் சென்றபோது அவர்களை சித்ரரதன் தாக்கினான். அவனை அர்ஜுனன் கைது செய்து சிறைப் பிடித்தபோது, அவனது மனைவி கும்பிநாசி கெஞ்சவே, அவனை விடுதலை செய்தான். அவன் நன்றி பாராட்டும் முகத்தான் அர்ஜுனனுக்கு கந்தர்வ வகைப் போர்க்கலையை கற்றுக் கொடுத்தான். இருவரும் நண்பராயினர்.
கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்ன்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று.
அர்ஜுனன், மாதலி ஓட்டி வந்த –ஸ்பேஸ் ஷட்டிலில்—விண்வெளிக் கப்பலில் — சென்று ஐந்து ஆண்டுக் காலத்துக்கு வேறு கிரகத்தில் வசித்தான். அப்போது சித்ர சேனன் என்னும் ஒரு கந்தர்வன் அவனுக்கு இசையையும் நடனத்தையும் பயிற்றுவித்தான். தேவலோக ஊர்வசி அர்ஜுனனைக் காதலித்து அங்கேயே இருக்கும்படி கெஞ்சினாள். அர்ஜுனன் மறுக்கவே ‘’நீ அலியாகப் போ’’ என்று சபித்தாள். சித்ர சேனன் இடைமறித்து சமாதான உடன்படிக்கை செய்தான். அதன்படி குறிப்பிட்ட காலம் மட்டுமே அவன் அலியாக முடிவு செய்யப்பட்டது .பிற்காலத்தில் அஞ்ஞாதவாச காலத்தில் அவன் அலியாகி– உத்தராவுக்கு நடனம் கற்பித்து கரந்துறை வாழ்வு நடத்த இது பயன்பட்டது.
இந்தக் கதையிலும் ராமாயணக் கதையிலும் பஞ்சாப், சிந்து மாகாணம் மட்டுமே கந்தர்வர்களுடன் தொடர்புபடுத்தப் படுகிறது. இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்க ளுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும்.
ராமாயணத்தில் பரதன் படையெடுத்து வென்ற இடம் சிந்து சமவெளி நகரங்கள் ஆகும்— இதை வருணிக்கும் வால்மீகி முனிவர் ‘’நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களும் நகரங்களும்’’ அங்கே இருப்பதாக வருணிக்கிறார். லாகூர் என்னும் பாகிஸ்தானிய நகரமும் லவன் – இராமனின் மகனால்- உருவாக்கப்பட்டது. ஆக கந்தர்வர் பற்றிப் பேசும் வடமொழி இலக்கியங்கள் மூன்று விஷயங்களைத் தெளிவு படுத்துகின்றன:–
1.பஞ்சாப், சிந்து மாகாணங்களில் கந்தர்வர் –கின்னரர் என்னும் ஒரு இனம் வசித்தது. (அங்குதான் மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்கள் உள்ளன).
2.அவர்கள் கட்டிடக்கலை மன்னர்கள். இசை நாட்டியத்துறை நிபுணர்கள். சிந்துவெளியில் கிடைத்த நடன மாதுவின் வெண்கலச் சிலை இதற்குச் சான்று. அங்குள்ள செங்கல் வீடுகளும் மிகப்பெரிய குளமும், குதிர்களும் இதற்குச் சான்று.
3.அவர்கள் குறிப்பிட்ட போர்க்கலையில் வல்லவர்கள். பரதன், துரியோதனன், அர்ஜுனன் ஆகியோரை அவர்கள் தாக்கியதே இதற்குச் சான்று. கர்ணனையும் உயிருக்குப் பயந்து ஓட வைத்தவர்கள்!!
Mycenaean Cantharus (Gandharva) from Louvre Museum, France
வேத காலச் சான்றுகள்:–
ஊர்வசி என்னும் பெண், ரிக் வேத காலத்திலேயே பிரபலமானவள். தேவலோகப் பெண்கள், கந்தர்வர்களின் மனைவியராவர். இது தவிர, போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் (20-25) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காந்தர்வாய பாலேய அக்னிவேஷ்ய என்னும் பெயர் இருக்கிறது. ஆக கந்தர்வர், அப்சரஸ் ஆகியோர் ரிக்வேத காலத்தில் இருந்ததும், அவர்கள் பஞ்சாப் சிந்து பிரதேசத்தில் வசித்ததும், அவர்கள் வடமொழிப் பெயர்கள் வைத்திருந்ததையும் வேத கால இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.
Box with Kinnara figures in Asmolean Museum, Oxford, UK
இசை மன்னர்கள்
கின்னரர் என்ற பக்க வாத்தியக்காரர்களின் பெயரில் பல்வேறு வகை இசைக் கருவிகள் துருக்கி வரை இருக்கின்றன. கின்னரர் தலைவன் தும்புரு என்பவர், நாரதருக்கே இசை கற்பித்தவர். அவருடைய பெயரில் தம்பூரா, டாம்போரின் முதலிய கருவிகளும் பல நாடுகளில் காணப்படும். ஆக இசை ஆய்வுக்கும் ‘’கின்னரர் ஆய்வு’’ உதவும். தும்புரு போலவே குதிரை முகமும் மனித உடலும் கொண்ட ‘சிரோன்’ என்ற கிரேக்க தேவனும் குறிப்பிடத்தக்கவர். கிரேக்க நாகரீகத்துக்கு முன்னர் அங்கே நிலவிய மைசீனிய நாகரீகத்தில் ‘காந்தரோஸ்’ (கந்தர்வோஸ்??) என்பவர் இப்படிக் குதிரை உடலுடன் காட்டப்பட்டுள்ளார். இந்து மதக் கதைகள் இப்படி வெளிநாடுகளை அடையும்போது உருச் சிதைவதும், காலப்போக்கில் பழைய உண்மைக் கதைகள் மறைந்து புதுக்கதைகள் எட்டுக்கட்டபடுவதும் ஆய்வளர்களுக்கு புதுமை அன்று.
என்ன காரணத்தினாலோ கின்னரர்கள குதிரை உடல் அல்லது பறவை உடலுடன் சித்தரிக்கப் பட்டுள்ளனர். முகம் மட்டும் மனித முகம்!! இந்திய கின்னரர்- கந்தர்வர் உருவங்கள் தென்கிழக்காசியா முழுதும் பரவிக் கிடக்கின்றன. தாய்லாந்து நாட்டில் இது மிகவும் அதிகம். உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோநேசியாவின் போரோபுதூர், கம்போடியாவின் அங்கோர்வட், ப்ராம்பனான், தாய்லாந்தின் பாங்காக் ஆகிய இடங்களில் இந்தியாவை விட அழகிய கந்தர்வர்- கின்னரர் உருவங்கள் இந்தியப் பண்பாட்டைப் பறை சாற்றி நிற்கின்றன.
தேவலோக கந்தர்வர் என்போரும் உண்மையே. ரமண மகரிஷிக்கு முந்திய, திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். அவர் ஒரு இசைப் பிரியர். திடீரென வானத்தை உற்று நோக்கி இசைய ரசித்து மகிழ்வார். பக்தர்கள் கேட்டபோது வானுலக கந்தர்வர் பாடிக்கொண்டே போனதாகவும் அவர்கள் இசையைக் கேட்டு அதில் லயித்ததாகவும் கூறுவார். ஆக விண்ணுலக கந்தர்வர் என்றுமுளர். மண்ணுலக சிந்து சமவெளி கந்தர்வர் மண்ணில் கலந்துவிட்டனர் என்று கொள்வதில் தவறில்லை.
உலகம் முழுதும்— மைசீனிய நாகரீகம் வரை — கிடைக்கும் எல்லாத் தகவல்களையும், கின்னர, தும்புரு இசைகருவிகள் முதலியவற்றையும் இராமாயண, மஹாபாரத, சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். நான் முன்னர் எழுதியதுபோலவே சிந்து சமவெளி என்பது பல இன மக்கள்—பல வகை வழிபாட்டுடையோர்- ஒருங்கே வசித்த பூமி என்பதையும் நினைவிற் கொண்டால் பல புதிர்கள் விடுபட்டுப்போகும்!
Kinnaras from Prambanan, Cambodia
-சுபம்-
contact swami_48@yahoo.com
Sankarkumar
/ October 28, 2014There is a nama in Lord Ayyappa Sahasranamavali as follows:
Om haahaahuuhuu mukha sthuthyaaya nama:
Perhaps this may refer to this!??
Thanks .
Sankarkumar
/ October 28, 2014Also pl. check SRI GURU GITA Sutra 17.
2014-10-28 13:57 GMT-04:00 Sankarkumar :
> There is a nama in Lord Ayyappa Sahasranamavali as follows:
>
> Om haahaahuuhuu mukha sthuthyaaya nama:
>
> Perhaps this may refer to this!??
> Thanks .
>
Tamil and Vedas
/ October 28, 2014Thanks, Sankarkumar.
That is interesting.
Someone told me that it is in Lalita Sahasranamam as well.
But we need more information about those two Gandharvas.
Kalyanasundareswaran Nagarajan
/ June 24, 2020Someone asked Sheshadri Swamigal about the raga the gandharva recited he told it is Bhilahari. (Arunaachala Mahimai by Bharaneedharan)