கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.
மஹாபாரதப் போர் நடந்ததா? பகவத் கீதை உண்மையா? போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா? 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா? இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை? தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா? அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா? இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்?
இதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- குதர்க்க வாதிகளை – மிதிப்போம் – கால்களால் அல்ல!!—சொற்களால் மட்டும் !!!
( பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon? பிரம்மாஸ்திரம் உண்மையா? என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது! வாழ்க நம் வாசகர் வட்டம்)
அக்குபங்சர் உத்திகளைப் பயன்படுத்தி 58 நாட்களுக்கு பீஷ்மர் இருந்தார்.
உண்மையில் நடந்தது
பாரபட்சமின்றி மஹாபாரதத்தைப் படிப்போர், அதில் உள்ள அத்தனையும் உண்மையில் நடந்தது என்பதை அறிந்து, படித்துச் சுவைத்து ரசித்து, மகிழ்வர். அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் எத்தனை பொருள் பொதிந்தது என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவர். அந்த ஸ்லோகம் சொல்கிறது:
உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!
வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!
இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!
பாரதப் போரின் காலம் என்ன?
பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.
இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!
கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-
வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.
தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.
ஹலபேடு என்னும் இடத்தில் சக்ர வ்யூஹம் கல்லில் செதுக்கப்படுள்ளது
முஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.
இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.
இனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–
கம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–
முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016
இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா
எல்லோரா குகைக் கோவிலில் இருந்து
மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151
நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900
அர்ஜுனன் அல்லது பகீரதன் தவம், மாமல்லபுரம்
மார்கசீயவாதிகள் இதை ஒரு வர்க்கப் போராட்டம் என வருணிப்பர். ஆகையால் இடது சாரிகள், இதை ஒரு சிறிய உள்ளூர் சண்டையாகக் காண்பர். எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.
எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.
எனது கருத்து:–
நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–
ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.
தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.
சரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.