Mask dance in the Himalayan kingdom Bhutan
Research paper written by London Swaminathan
Research article No.1395; Dated 7th November 2014
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? முடியும்!!
எங்கே? இந்துக்கள் எங்கெங்கே வசிக்கிறார்களோ அங்கே!!!!
அது என்ன கதை? என்று கேட்கிறீர்களா?
ஆரியர்கள் தேவர்களாம்; திராவிடர்கள் அரக்கர்களாம்; ராக்ஷசர்களாம். இப்படி ஒரு கட்டுக்கதையை எட்டுக்கட்டினான் வெளிநாட்டு “அறிஞன்”. அதை இந்துக்கள், அதிலும் குறிப்பாக தமிழ் இந்துக்கள் நம்பிவிட்டார்கள்
நமது வேத இதிஹாச புராணங்களில் ஆரிய என்ற வார்த்தை உள்ளது. திராவிட என்னும் சொல் வேத காலத்துக்கு மிகவும் பின்னால் காணப்படுகிறது. அந்த இரண்டு சொற்களும் இப்போது பயன்படுத்தப்படும் இனம் என்னும் பொருளில் பயனபடுத்தப் படவில்லை. பல லட்சம் பாடல்கள், துதிகள் கொண்ட இந்து மதக் கடலில் இருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஸ்லோகங்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் தவறாக எழுதியதால் பலரும் நம்பிவிட்டனர்.
இதோ சில உண்மைகள்:—-
1.புராண, இதிஹாசங்களில் வரும் ராக்ஷசர்கள் –( அரக்கர்), அசுரர்கள், தானவர்கள், தைத்யர்கள் ஆகிய அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் என்று நமது நூல்கள் தெள்ளத் தெளிவாக இயம்புகின்றன.
2.ராக்ஷச ராவணன் முதல் சிவனை ஓட ஓட விரட்டிய பஸ்மாசுரன் வரை அனைவருக்கும் வரம் கொடுத்தவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவ பெருமான் தான். இவர்கள் நம்மவர்களாக இல்லாவிடில் அவர்கள் வரம் கொடுத்ததாக ஆயிரக் கணக்கான கதைகள் தோன்றி இருக்குமா?
3. தைத்யர்கள் யார்?
அசுரர், அரக்கர், தைத்யர், தானவர் ஆகியோரின் தந்தையர் பிரஜாபதி அல்லது அவரது புதல்வரான காஷ்யபர் என்றும் தாயார் தீதி என்றுமே நம் புராணங்கள் பகரும். ராவணன் என்பான் புலஸ்த்யர் என்னும் பிராமண ரிஷியின் பேரன். அவருடைய புதல்வர் விஸ்ரவசுக்கும் ராக்ஷச குலப் பெண் நிகஷாவுக்கும் பிறந்தவர். ராவணனின் மனைவியான மண்டோதரி யை மஹா உத்தமியாக எல்லா ராமாயணங்களும் சித்தரிக்கின்றன. அவர் மயன் என்னும் அசுரனின் மகள்.
அவளையும் மற்ற அசுரர்களையும் இந்துக்கள் தினமும் காலையில் வணங்கித்தான் மற்ற காரியங்களைச் செய்வர் ( பிராதஸ்மரணம் என்னும் பிரார்த்தனையில் மண்டோதரி, தாரா, பலி, விபீஷணன் முதலியோரை இந்துக்கள் வணங்குகின்றனர். எனது பாட்டி, அம்மா ஆகியோர் குளிக்கும் போதும், சில நேரங்களில் சமைக்கும் போதும் இந்த ஸ்லோகங்களை சொல்லுவர். ஆர். எஸ்.எஸ்.காரர்கள் நடத்தும் ஷாகாக்களில் இன்றும் பல லட்சம் பேர் இதை அனுதினமும் சொல்கிறார்கள்.
இதே போல இந்திரன் ,அக்னி, வருணன் ஆகியோரை ரிக் வேதத்தின் மிகப் பழைய பகுதி அசுரன் என்றே பாராட்டி வருணிக்கிறது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கோபித்துக் கொண்டு வேதக் கட்சியைப் பிளந்தார். பின்னர் பாரசீக (ஈரான்) நாட்டுக்கு ஓடிப்போனார். அவரை சௌராஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்பர். நம் ஊரில் தி.க. என்னும் கட்சி—— சுக்கு நூறாக உடைந்தவுடன் ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவரைப் பாராட்டுவதையும் மற்றவரை இகழ்வதையும் பார்க்கிறோம். இதே போல வேதக் கட்சியை உடைத்த சௌராஷ்ட்ரார் இந்திரனைப் பாரட்டாமல் வருணனே மிக உயர்ந்த தெய்வம் என்பார். தேவர்கள் என்பவரைத் தீயோராகவும் அசுரர்கள் என்போரை நல்லவர்களாகவும் சித்தரிப்பார். அசல் தமிழ் “பாலிடிக்ஸ்!!! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆரை ஒரு கட்சி பாராட்டுவதையும் இன்னொரு கட்சி கிண்டல் செய்து சொற்பொழி வாற்றுவதையும் இன்றும் காணலாம். அப்படி ஓடிப்போன சௌராஷ்டிரர் சிஷ்யர்கள், ஈரானை முஸ்லீம்கள் பிடித்துக் கொடுமைப் படுத்தியவுடன் தாய்நாட்டுக்கே – அதே குஜராத்துக்கே – திரும்பி வந்தனர். இந்தியாவின் மிக உயர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள், பெரும் தொழில் அதிபர்கள் இந்த வம்சத்தினரே!
அசுரர்கள் நம்மவர்கள் இல்லாவிடில் இன்றும் பல கோடி இந்துக்கள் அவர்களை வணங்குவார்களா?
4.தானவர்கள் யார்?
தக்ஷப் பிரஜாபதியின் மகளான தனுவுக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவர்கள் தானவர்கள். இவர்களில் ஹயக்ரீவர், புலோமர், சம்பரன், வைஸ்வானர, விப்ராச்சி, விரூபாக்ஷ, விருஷபர்வா கதைகள் புராணங்களில் காணக் கிடக்கின்றன. இவர்கள் எல்லோர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன!!!
5.த, த, த — கதை (பிப்ரவரி 19, 2014-ல் நான் எழுதிய கதையின் பகுதி)–ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். பாடுவதற்காக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடலில் வரும் “தாம்யத – தத்த – தயத்வம்” என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை:
ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர். ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார்.
இந்தக்கதை வரும் பிருஹத் ஆரண்யக (பெரிய காடு) உபநிஷத்தை வெள்ளைக்காரர் கூட கி.மு. 800 என்று தேதி குறித்துள்ளனர். இதில் அசுரர்களும் சம உரிமையுடம் பிரஜாபதியை அணுகியதும், அவர்களுக்கு ஏற்ற உபதேசத்தை அவர் அருளியதும் சமத்துவத்தைக் காட்டுகிறது. அசுரகளும் பிரஜாபதியிடம்தான் உபதேசம் பெறச் சென்றதும் அவர்களுக்கும் பிராமணரான சுக்ராச்சாரியார்தான் குரு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.
ஆனால் வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் என்ன எழுதினான்? இவர்கள் பழங்குடிமக்கள், ஆரியர்களால் விரட்டப்பட்ட திராவிடர்கள் என்று பொய்க் கதை கட்டி, திராவிடர்களை கோழைகளாகவும், முட்டாள்களாகவும் சித்தரித்தான்.
Jaws Villain in James Bod film
இன்று நம்மிடையேயும் அரக்கர், அசுரர், தைத்யர், தானவர் எல்லோரும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் கோர்ட்டுகளில் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்டு சிறைத் தண்டனை பெறுவதையும் பார்க்கிறோம். விடுதலையான பின்னர் பலர் அதே குற்றத்தை மீண்டும் செய்து மீண்டும் சிறை செல்வதையும், சிலர் நல்லவர்களாகத் திருந்தி பெரிய பதவிகளை அடைவதையும் காண்கிறோம். இது போலவே அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி முறைகளை எதிர்த்தவர்கள், மீறியவர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தில் அல்லது உடைமைகளில் கை வைத்தவர்கள் முதலியோர் அரக்கர், அசுரர் எனப்பட்டனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் திரைப்படத்தில் கொடுமை செய்யும் வில்லன்களாக வரும் அனைவரும் அரக்கர்களைப் போன்றவர்களே!
அமரகோசம் என்னும் உலகின் முதல் அகராதி–நிகண்டு ராக்ஷசர்கள் என்பதற்கு 15 சம்ஸ்கிருத்ச் சொற்களைத் தருகிறது. இதில் எல்லாவற்றிலும், பச்சையாக மாமிசம் (சமைக்காமல்) சாப்பிடுவோர், நர மாமிசம் உண்ணுவோர், ரத்தம் குடிப்போர், இரவு நேரத்தில் சஞ்சரிப்போர், பயங்கரவாதிகள், மாயத் தோற்றம் உள்ளோர் என்றெல்லாம் வருணித்துள்ளனர்.
இதன் முழு விவரம் வேண்டுவோர் இதே தலைப்பில் வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் (எண் 1381 அக்டோபர் 31, 2014) காண்க.
வால்மீகி ராமாயணத்தில் அனுமன் கண்ட ராக்ஷசர்கள் பல்வேறு கோர உருவத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் செய்வோர் மற்றவர்களை பயமுறுத்தவும், தனது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவும் வேறு வேஷம் போடுவதை இன்றும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாங்கள் வாழும் லண்டன் மாநகரத்தில் தலைக்கு ஹூட் (முட்டாக்கு) போட்டுக்கொண்டு யாரும் கடைகளுக்குள் வரக்கூடாது என்று சட்டமே போட்டுவிட்டனர். ஏனெனில் கடைகளில் திருட வருபவர்களும் வங்கிகளைக் கொள்ளையடிக்க வந்தோரும் இப்படி தனது அடையாளத்தை மறைத்து வந்தனர்.
இதேபோல திருட்டுத் தனம் செய்யும் ராக்ஷசர்கள் எப்போதும் இரவு நேரத்தில் அட்டூழியம் செய்ததால் அவர்களுக்கு “இரவில் உலவுவோர்” என்றும் வடமொழியில் ஒரு பெயர் உண்டு. ஆக இராக்கதர்கள் குதிரை போலவும், யானை போலவும் உருவம் உடையோர் என்று எழுதி இருப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் வரைந்த சித்திரங்கள் அல்லது போட்டு வந்த முகமூடிகளையே குறிக்கும் என்க.
இலங்கையில் இன்றும் கூட முகமூடி நடனம் உண்டு. பூதஸ்தான் என்னும் நாட்டில் (இமயமலையில் உள்ள பூட்டான்) இப்போதும் திருவிழாக்களில் முகமூடி டான்ஸ் உண்டு. இது நமது திருவிழாக்களில் சிலர் அனுமன், கருடன், அரக்கன் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் வருவது போன்றதாகும். இன்றும் கூட முகமூடி போட்டு ஆடும் வழக்கம் கேரளத்தில் கதகளி, கர்நாடகத்தில் யக்ஷகானம் முதலியவற்றில் உள்ளன. ஆக அரக்கர்களின் கோர உருவம் அவர்களின் உடலில் இல்லை. வேஷத்திலும் மன விஹாரங்களிலும் இருந்தது என்பதே பொருந்தும்.
மாற்றான் மனைவி மீது கை வைத்த இராவணனை சொந்தம் கொண்டாடுவோரும் அரக்க வம்சத்தினரே என்பது அவர்கள் ஆதரிக்கும் கொள்கையில் இருந்து தெற்றென விளங்கும். இதற்குப் பின்னும் விளங்கிக் கொள்ளாதவர்கள் “விளங்காதவர்களே!” என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டி இருக்கிறது.
எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி யாது ஒன்றும் அறியேன் பராபரமே—தாயுமானவர்.
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து – வேத இலக்கியம்.
–சுபம்—
You must be logged in to post a comment.