இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: