கடவுள் தந்த இரண்டு மொழிகள்

shiva
பம் பம் பம் பம் பம் பம் பாஜே டமரு
டம் டம் டம் டம் டமருக நாதா (பஜனைப் பாடல்)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1408; தேதி 13 நவம்பர், 2014.

இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே பவழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம். இதைவிடப் பெரிய சிறப்பு இவ்விரு மொழிகளும் கடவுளால் படைக்கப்பட்டன. இவ்விரு மொழிகளையும் சிவ பெருமான் கொடுத்ததாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலவர்கள் பாடி வருகின்றனர்.

பாரதியின் தமிழ்ப் பற்றை சந்தேகிப்பார் எவரேனும் உளரோ? அவரே ஆதி சிவன் இந்த தெய்வீகத் தமிழ் மொழியை உருவாக்கியதையும் அதற்கு அகத்தியன் என்று ஒரு பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்ததையும் சம்ஸ்கிருத (ஆரியம்) மொழிக்குச் சமமாக தமிழ் மொழி, வாழ்ந்ததையும் பாடுகிறார்:-

damaruka

தமிழ்த் தாய் – என்னும் பாடலில் பாரதியார் பாடுகிறார்:

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்

ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — (பாரதியார் பாடல்)

சிவபெருமான் தனது உடுக்கையை வாசிக்கும்போது அதன் ஒரு புறத்திலிருந்து தமிழும் மறு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வந்ததாக ஆன்றோர்கள் கூறுவர். பாணினி என்னும் உலக மகா அறிஞன், உலகின் முதலாவது இலக்கண வித்தகன் சிவபெருமானுடைய ‘’டமருகம்’’ என்னும் உடுக்கை ஒலியில் இருந்து எழுந்த 14 ஒலிகளைக் கேட்டு சம்ஸ்கிருத இலக்கணம் செய்தார். இதை மஹேஸ்வர சூத்ரம் என்று கூறுவர்.

இதே போல அகத்தியர் என்பார் தமிழுக்கு இலக்கணம் செய்தார். ஆக இவ்விரு மொழிகளும் பாணினி, அகத்தியர் என்போருக்கு முன்னதாகவே வழங்கின. ஆனால் காலத்துக்கு காலம் இலக்கணம் மாறுபடும் என்பதால் அவ்வப்போது வரும் பெரியோர் இத்தகைய பணியை ஏற்பர். தமிழில் தொல்காப்பியருக்கு முன்னரும் இலக்கண வித்தகர்கள் இருந்தனர். பின்னரும் பலர் வந்து நூல்களை யாத்தனர். இது போலவே பாணினிக்கு முன்னரும் இலக்கண அறிஞர்கள் இருந்தனர்.

வட கோடு (இமய மலை) உயர்ந்து, தென் நாடு தாழவே, பூபாரத்தை சமனப் படுத்த அகத்தியனை தென் திசைக்குச் செல்லுமாறு சிவ பெருமான் கட்டளையிட்டதை முன்னரே உலகின் முதல் மக்கட்தொகைப் பெருக்கப் பிரச்சனை என்ற கட்டுரை வாயிலாகத் தந்துள்ளேன்.

shiva2

காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை பற்றி நான் முன்னரே எழுதிவிட்டேன்.

புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.

மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)

trishul-damaru

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு எது பெரிது என்றே சொல்ல முடியாது. ஏனெனில் சம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழிலோ திருக்குறள் இருக்கிறது என்று பெருமைப்படுவார் வண்ணக்கன் சாத்தனார்:-

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

shiva3
கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

shiva on coin

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!

எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? (ஜூன் 9, 2014)
புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர் ( 28 மார்ச் 2014)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
தமிழ் ஒரு கடல்

Ravana-Pandya Peace Treaty: Kalidasa solves a Tamil Puzzle (24th June 2014)
Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures (posted on 2nd February 2013)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: