கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1449; தேதி 1 டிசம்பர், 2014.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் உண்டு எனவும் அதில் பத்துப் (10) பாட்டு+ எட்டு (8)த்தொகை அடக்கம் எனவும் கண்டோம். சங்க காலத்துக்குப் பின்னர் திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியதையும் அறிவோம். எட்டுத்தொகை நூலில் ஒன்றான பதிற்றுப்பத்து அதிசயங்களைக் கண்டோம். பின்னர் புறநானூற்று அதிசயங்களைக் கண்டோம். இன்று எட்டுத் தொகை நூலில் மேலும் ஒரு நூலான குறுந்தொகை என்னும் நூலின் அதிசயங்களைக் காண்போம்.
குறுந்தொகையில் குடும்ப உறவு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் இருக்கின்றன. இவை குறுகிய அடிகளைக் கொண்ட சின்னச் சின்ன பாடல்கள்.
தமிழர்கள் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்றால் நீண்ட பட்டியலையே தரலாம். பெரும்பாணாற்றுபடையில் எந்தெந்த ஜாதியினர் வீட்டுக்குப் போனால் என்னென்ன உணவு கிடைக்கும் என்று அழகாகப் பாடி வைத்துள்ளனர். ஆயினும் குறுந்தொகை உணவு பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
வற்றல் குழம்பும் தயிர் சாதமும்
ஒரு தோழி அவள் நண்பி நடத்தும் திருமண வாழ்வை அறிய அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாள்– பின்னர் திரும்பி வந்து அப்பெண்ணின் தாயிடம் சொன்னாள்,
“அடியே! உன் மகள் வீட்டுக்குச் சாப்பிடப் போனேன். நல்ல அருமையான தயிர் சாதமும் வற்றல் குழம்பும் சமைத்து வைத்திருந்தாள். நல்ல வாசனை! தாளித்துக் கொட்டியிருந்தாள். அடுப்பின் புகை தாளாமல் எல்லாவற்றையும் புடவையிலேயே துடைத்துக்கொண்டாள்; கணவனோ அதை ரசித்து, ருசித்து சுவைத்து சாப்பிட்டான். அவள் முகம் மலர்ந்தது:–
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
……………………………….
தான் துழந்து இட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின் – (கூடலூர்க் கிழார், 167)
பாடல் 277ல் ஓரில் பிச்சையார் வேறு ஒரு உணவு பற்றிப் பாடுகிறார். அதோ ! நாய்கள் நுழைய முடியாத (அந்தணர்) தெருவில் நெய் கலந்து வெண்சோறு போடுவர். உன் செம்பில் வெந்நீரும் தருவர். அதைப் பெறும் துறவியாரே என் கணவர் எப்போது வருவார்? வாடைக் காலம் வந்துவிட்டதா? என்று ஒரு த்ரிகால ஞானியிடம் ஒரு பெண் வினவுகிறாள். துறவிகள் முக்காலம் உணரும் த்ரிகால ஞானிகள் என்று தொல்காப்பியம் செப்பும் (தொல்.புறத்.20). ஐயர்கள் வசிக்கும் தெருவில் நாய்களோ கோழிகளோ போகக் கூடாது என்று பெரும்பாணாற்றுப்படையும் செப்பும் (வரிகள் 298-301).
குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் ஒரு குரங்கு, கணவன் உயிர் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை எழுதி இருந்தேன். அதுவும் பொறுப்புடன் தன் குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்புவித்துவிட்டு மலை முகட்டில் இருந்து விழ்ந்து இறந்தது. இது கணவனுடன் உடன் கட்டை ஏறும் ‘’சதி’’ போன்றது (பாடல் 69)
கார்க்கியர் என்று உபநிஷதத்தில் ஒருரிஷியின் பெயர் உண்டு. எப்படி புறநானூற்றில் வால்மீகி, மார்க்கண்டேயன் போன்ற பெயர்கள் உளதோ அதே போல குறுந்தொகையில் கார்ர்கியர் என்ற ரிஷி பெயரில் ஒரு புலவர் இருக்கிறார். சாண்டில்யன் , மஹாபாரத சல்லியன் பெயரிலும் புலவர்கள் இருக்கின்றனர். தமிழைக் கிண்டல் செய்து பின்னர் கபிலரிடம் தமிழ் கற்று ஒரு தமிழ்ப் பாட்டும் பாடிய வட நாட்டு ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்பவனும் குறுந்தொகைப் புலவனே!!
Dhenupureeswar Temple, Chennai
சம்ஸ்கிருதச் சொற்கள்
குறுந்தொகையில் பல புலவர்கள் தயக்கமின்றி பல சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவர். அவையாவன:–
அகில், அச்சிரம், அமயம், அமிழ்தம், அரசன், அவை, இமயம், ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கமண்டலம், கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், நேமி, பக்கம், பணிலம், பருவம், பலி, பவழம், பிச்சை, மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம், வாசம் (உ.வே.சாமிநாத அய்யர் தந்த பட்டியல்)
தமிழ்ப் பெண்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். அடுத்த பிறப்பிலும் நீயே கணவனாக வரவேண்டும் என்று விரும்பினர் என்று அம்மூவனார் பாடுகிறார் (பாடல் 49)
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
பழந்தமிழ் வழக்கங்கள்
பறையும் சங்கும் ஊதி திருமணம் செய்தல் (ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்திலும் உண்டு), திருமணம் செய்த பின்னர் பெண்ணின் சிலம்பைக் கழித்தல், சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுதல், முதியோர் சென்று திருமணம் பேசுதல், பிறையைத் தொழுதல் ஆகியவற்றைக் குறுந்தொகை நமக்கு அளிக்கிறது.
குறுந்தொகை அளிக்கும் தமிழ் பொன்மொழிகள்
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே (பாடல் 115)
பெரிய நன்மையைச் செய்தால் போற்றாதோர் உண்டோ
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற் குரியதன்று (143)
புகழையே விரும்பும் நல்ல மனிதனிடம் உள்ள பொருள் அவனிடம் தங்காது எல்லோருக்கும் பயன்படுவது போல
திறவோர் செய்வினை அறவது ஆகும் (247)
திறமையுள்ளோர் செய்யும் காரியம் அறத்துடன் பொருந்தியது — (தர்மம் உடையது)
சன்றோர் புகழும் முன்னர் நாணுப;
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே (252)
பெரியார், தம்மைப் புகழ்வதற்கு முன்னரே வெட்கப்படுவர். அப்படிப்பட்டவர்கள் பழிச் சொல்லைக் கூறினால் பொறுத்துக் கொள்வரோ?
புலவர்களின் விநோதப் பெயர்கள்
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சிறப்பு சொற்றொடர் காரணமாகவோ அதையே அவர்களுக்குப் பெயராக வைத்துள்ளனர். இது போல ரிக்வேத முனிவர்கள் பெயரிலும் பல பெயர்கள் இருக்கின்றனர்!!
செம்புலப்பெயல் நீரார், கயமனார், அணிலாடு முன்றிலார், நெடு வெண் நிலவினார், மீன் எறி தூண்டிலார், விட்ட குதிரையார், ஓரேர் உழவனார், கூவன் மைந்தன், காலெறி கடிகையார், ஓரில் பிச்சையார், கல் பொரு சிறு நுரையார், கள்ளில் ஆத்திரையனார், குப்பைக் கோழியார், பதடி வைகலார், கவை மகன், கங்குல் வெள்ளத்தார், குறியிரையார். — இவர்களில் 13 பேரின் பெயர்கள் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் சொற்கள்!!
இன்னும் சில சுவையான செய்திகள் இதோ:–
பாடல் 61: சிறுவர் இழுத்துச் செல்லும் குதிரை வண்டி பொம்மை
பாடல் 156: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! என்று துவங்கும் பாடலில் வேதத்தை எழுதாக் கற்பு என்ற மிக அழகிய சொல்லால் வருணித்துவிட்டு கணவன் மனைவியைச் சேர்த்துவைக்கும் மந்திரம் ஏதேனும் வேதத்தில் உண்டா என்று கேட்கிறார் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.
பாடல் 300: கடல் சூழ் மண்டிலம் என்ற சொற்கள் இந்தப் பூமி உருண்டையானது என்பது தமிழர்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டும். கோப்பர்நிகசுக்கு முன்னரே இந்தியருக்குத் தெரிந்த சாதாரண விஷயம் இது.
பாடல் 135: வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் = “தோழி! வேலைதான் ஆடவர்க்கு உயிர், மனைவியர்க்கு கணவன் தான் உயிர்!”
பாடல் 1: பெண்களுக்கு பூ கொடுக்கும் வழக்கம்
குறுந்தொகையில் வரும் கடவுளர்
பாடல் 1:முருகன்
பாடல் 362: முருகனுக்கு ஆட்டுக் குட்டி பலி
பாடல் 218: சூலி என்னும் துர்க்கையை வணங்குதல், தமிழ் பெண்கள் காப்பு நூல் அணியும் வழக்கம், சோதிடம் கேட்கும் வழக்கம்
பாடல் 267:யமன்
பாடல் 87:மரா மரக் கடவுள்
பாடல் 89, 100: கொல்லி மலைப் பாவை
பாடல் 372: சுனாமி, நில அதிர்ச்சி, கடல் எல்லை மாறுதல் (இவை பற்றி நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுபத்திலும் உண்டு)
பாடல் 361: காதலன் வாழும் மலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்து வந்த காந்தள் கிழங்கைக் கொஞ்சி அதை நட்டு வைத்துக் கணவன் போல எண்ணி மகிழ்தல்
பாடல் 151: இப்பாடலில் வரும் வங்கா என்ற பறவை மடகாஸ்கர் தீவிலும் உண்டு.
பாடல் 119: யானையைப் படாத படுத்தும் வெள்ளைப் பாம்பு (இது என்ன பாம்பு என்பது ஆய்வுக்குரியது)
400 பாடல்களிலும் நனி சுவை சொட்டும்; படித்து இன்புறுக!
–சுபம்–