Naina (Nayana) Devi Temple, Bilaspur, HP
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1457; தேதி 4 டிசம்பர், 2014.
சிரியா என்பது முஸ்லீம் நாடு. அங்கே நயன (கண்) தேவி கோவில் இருக்கிறது. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன் வழிபாடு நடந்ததால் அது பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள நயனதேவி கோவிலுடன் ஒப்பிடுகையில்தான் அதன் சிறப்பு தெரியும்
சிரியாவில் டெல் பிராக் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கான கண் உருவங்களும் கண் தேவியர் உருவங்களும் கிடைத்தன. வேறு எங்கும் இப்படிக் கிடைக்காததால் அது என்ன என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவை அனைத்தும் இந்துக்கள் வழிபடும் நயன தேவி உருவங்கள் என்று நான் கருதுகிறேன்.
ஹிமாசலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர் என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது நைனா தேவி கோவில் இருக்கிறது. நயன, லோசன, அக்ஷி,, நேத்ர என்ற சம்ஸ்கிருத சொற்களுக்கு கண் என்று பொருள். இங்கு கண் வடிவத்தில் தேவி வழிபடப் படுகிறாள்.
தக்ஷ யக்ஞத்தில் சிவனுக்கு அழைப்பு இல்லாததால் சிவ பெருமான் அவனுடைய யாகத்தை உருக்குலைத்ததும் அதன் காரணமாக தேவி தீயில் குதித்து உயிர் இழந்ததும் எல்லோரும் அறிந்த கதையே (திருவிளையாடல் சினிமா). தீயில் உயிர் நீத்த ‘’சதி’’யின் உருவத்தை சிவன் எடுத்துச் செல்லவே தேவியின் உடற் பகுதிகள் இந்தியாவில் 51 இடங்களில் விழுந்தன. அந்த 51 கேந்திரங்களும் சக்தி பீடங்கள் ஆயின. பல்லாயிரக் கணக்கான மக்கள் இன்றும் அந்த சக்தி க்ஷேத்திரங்களுக்குச் சென்று அருள் பெற்று வருகின்றனர்.
தேவியின் கண்கள் (நயனம்) விழுந்த இடம் பிலாஸ்பூரில் நைனா தேவி கோவில் ஆகியதாக தல புராணம் கூறும். இதே போல உத்த்ரகண்டில் உள்ள நைனிடால் கோவிலும் பெயர் பெற்ற கோவில் ஆகும். அந்த ஊரின் பெயரான நைனிடால் என்பதே நயன தளம் என்பதில் இருந்தே வந்தது. பிலாஸ்பூர் கோவிலில் சீக்கிய குருவான குரு கோவித சிம்மன் பெரிய சண்டி யக்ஞம் செய்த பின்னரே மொகலாய மன்னரை எதிர்த்துப் போரிட்டார் என்பர்.
சிரியாவில் டெல்பிராக்கில் கண்டெடுக்கப்பட்ட கண் உருவம் போல தமிழ்நாடு, கேரள கோவில்களில் மாரியம்மன், தேவி உருவங்களுக்கு கண் பூ வாங்கிப் போடும் வழக்கம் உண்டு. அது மட்டும் அல்ல மீனாக்ஷி, காமாக்ஷி, நீலாயதாக்ஷி, விசாலாக்ஷி என்ற தேவியர்கள் பெயரிலும் கண் (அக்ஷி) சிறப்பிக்கப்படுகிறது. இந்து மகளிரின் பெயர்களில் லோசனி, அக்ஷி, நயன, நேத்ர என்ற பெயர்கள் நிறைய இடம்பெறும்.
புரி தேர்த்திருவிழாவில் பலபத்ரா, கிருஷ்ணா, சுபத்ரா உருவங்களிலும் கண் பெரிதாக சித்தரிக்கப்படும். சிவனுடைய மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் ஞானத்தையும் அபூர்வ சக்திகளையும் குறிக்கும். இவை எல்லாம் இந்துக்கள் , கண் என்னும் அவயத்துக்குக் கொடுத்த சிறப்பைக் காட்டுவன.
சிரியா கண் மலர்களை ஒப்பிடக் கூடிய ஒரே இடம் இந்தியக் கோவில்கள்தான் என்பதே அந்தக் கோவில் இந்துக் கோவிலாக இருந்த இடம் என்பதை நிரூபிக்கும்.
சிரியாவில் உள்ள கோவிலை இந்துக்களின் கோவில் என்று சொல்ல வேறு என்ன ஆதாரங்கள் உள்ளன?
1.டெல் பிராக் என்னும் இடத்தின் மற்றொரு பெயர் ‘’நகர்’’. இது நகரம் என்னும் சம்ஸ்கிருத்ச் சொல்லாகும். புறநானூற்றில் (பாடல் 6) நகர் என்னும் சொல் கோவில் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
2.இந்த பகுதி முழுதும் கி.மு1500ஆம் ஆண்டுகளில் இந்து மிட்டனிய அரசர்களால் ஆளப்பட்டது. தசரத, பிரதர்தன என்ற பெயர்களுடன் அவர்கள் ஏரத்தாழ 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். உலகிலேயே மிகப் பழைய சம்ஸ்கிருதச் சொல் கல்வெட்டுகளும் சிரியா-துருக்கி எல்லையில்தான் கிடைத்தன. மிட்டன்னிய மன்னர் கையெழுத்திட்ட உடன்படிக்கை களிமண் படிவ (கி.மு 1400) கல்வெட்டுகளில் கிடைத்தன. அதில் வேதகால தெய்வங்கள் பெயர்கள் உள.
3.கண் உருவங்கள் கிடைத்த இடத்தில் கி.மு.2600ல் நரம் சின் என்பவன் ஒரு அரண்மனை கட்டி இருக்கிறான். இவன் ஜில்காமேஷ் போன்றோருக்கு முன்னர் அரசாண்டவன். ‘’சின்’’ என்றால் சந்திரன் என்று பெயர். நம் ஊரில் மன்னர்கள் ஹரிச் சந்திரன், தேவ சந்திரன், ராம சந்திரன் என்று பெயர்கள் வைத்துக் கொண்டதுபோல அவர்கள் ஊரில் நிறைய சந்திரன்கள் (சின், சுயென், நன்னன்) உண்டு. நம்மைப் போலவே பெயருக்கு முன்னொட் டாகவோ பெயருக்கு பின்னொட்டாகவோ சின் / சந்திரன் வரும். இது சம்ஸ்கிருத மொழி அமைப்பு. பின் வரும் மன்னர்கள் பட்டியலைக் காண்க. இவர்கள் எல்லோரும் கி.மு.1600க்கு முன் அரசாண்டவர்கள்:–
இப்பி, நரம் சின், சுசின், சின் எட்டினம், சின் எரிபம், ரிம் சின் (ராம சந்திரன்), ரிம் சின்-2, சின் மகிர், அபில சின், சின் முபாலித்.
சின் என்பதை சேன என்றும் படிக்கலாம். ஆனால் சந்திரன் என்ற பொருள் கிட்டா. நன்னன் என்பதும் சந்திரனையே குறிக்கும். சங்க காலத்தில் தமிழ் நாட்டில் நன்னன் என்ற மன்னன் இருந்தான். வடக்கில் நன்ன தேவன் என்ற பெயரில் மன்னன் இருந்தான். சுமேரியாவில் நன்னன் என்பது வழிபாட்டுக்குரிய பெயர்.
Balabhadra, Krishna, Subhadra of Puri Rath Yatra
இன்ன பிற காரணங்களால் இந்தக் கண் கோவிலும் இந்துக் கோவிலாகவே இருக்க வேண்டும். மிட்டனியர்கள், காசைட்ஸ், ஹிட்டைட்ஸ் ஆகிய இன மக்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்களே. அவர்கள் சம்ஸ்கிருத குடும்ப மொழியையே பேசினர் என்பது ஆரரய்ச்சியாளர்களின் துணிபு.
–சுபம்—