கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1459; தேதி 5 டிசம்பர், 2014.
(This is already posted in English)
உலகிலேயே மிக நீண்ட நூலான மஹாபாரதத்தை இயற்றிய,
உலகிலேயே மிகப் பழைய நூலான வேதங்களை நமக்குப் பாதுகாத்து அளித்த,
உலகிலேயே அதிகமான சமயக் கதைகளைக் கொண்ட 18 புராணங்களை நமக்கு தொகுத்துத் தந்த
வியாச மாமுனிவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசையும் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அளிக்க வேண்டும்.
அவர் காலத்தில் நோபல் பரிசு போன்ற ஒரு பரிசு இருந்திருக்குமானால் அவருடன் போட்டி போட யாருமே இருந்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் மிகவும் கறுப்பாகவும் அவலட்சணமாகவும் பிறந்த முனிவர் வியாசர். இவருடைய அம்மா ஒரு மீனவப் பெண்மணி. பெயர் சத்யவதி. அப்பா பெயர் பராசர முனிவர். வியாசருக்குப் பெயரே “தீவில் பிறந்த கறுப்பன்”, அதாவது கிருஷ்ண த்வைபாயன வியாசன்.
இவர் எவ்வளவு அவலட்சணம் என்றால், ராஜ வம்சத்தை நடத்திச் செல்ல பிள்ளைகள் இல்லாமல் விசித்ரவீர்யன் இறந்துவிட்டான் என்பதால் அவனது மனைவியர் அம்பா, அம்பாலிகா ஆகியோர் மூலம் பிள்ளைகளை உண்டாக்கு என்று அம்மா இட்ட கட்டளையை சிரமேற்கொண்டார். ஆனால் இவரைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரும் வெறுப்பால் படுக்க மறுத்தனர். பின்னர் அறுவறுப்புடன் படுத்ததால் ஒரு குழந்தை குருடாகவும் மற்றொரு குழந்தை ‘’ஆல்பினோ’’ குறையுடன் வெளுப்பாகவும் பிறந்தன. மூன்றாவது முறை அவருடன் படுத்து நல்ல பிள்ளையைப் பெறு என்று அம்மா சொன்ன போது அப்பெண்மணிகள் வேலைக் காரியை வியாசருடன் படுக்க அனுப்பவே ஒரு கள்ளப் பிள்ளை பிறந்தது. அவ்வளவு கறுப்பு/அவலட்சணம்!
ஆனால் உலகிலேயே ஒரு தூய ஆன்மா, ஒரு மகத்தான ஆன்மா இருந்ததென்றால் அது வியாச மாமுனிவனே. உலகில் யாரும் சாதிக்க முடியாத மகத்தான பணிகளைச் செய்தார். ஆகையால் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்போர் இவரை விஷ்ணு என்று போற்றுவர் (வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே). இவரைத்தான் இந்துக்கள் முதல் குருவாக கருதி ஆண்டுதோறும் வியாச பவுர்ணமியை குரு பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.
அவர் செய்த மகத்தான இலக்கியப் பணிகள்
1.அவர் வாழ்ந்த கி.மு.3100-ல் வேதங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. காரணம் அதை எழுதக் கூடாது, வாய் மொழியாகத்தான் கற்க வேண்டும் என்ற விதி இருந்தது. யாரும் அத்தனை வேதங்களையும் மனப்பாடம் செய்ய முடியாது. மேலும் வேதங்கள் எண்ணிக்கையில் கடல் போலப் பெருகிவிட்டன. உடனே அவர், அழிந்துபோனதைத் தவிர மிச்சமுள்ள வேதங்களைத் தொகுத்து நாலு மிகப் பெரிய அறிவாளிகளை அழைத்து அவர்கள் மூலம் பரவச் செய்தார். இன்று வரை வாய் மொழியாக வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் இப்படிப்பட்ட அதிசயத்தை வேறு எங்குமே காணமுடியாது.
உலகிலேயே பழமையான நூலான வேதங்களில் மனிதகுலத்தின் வரலாறும் உயரிய சிந்தனைகளும் இருக்கின்றன. சில வெளிநாட்டுக் காரர்கள் வேண்டுமென்றே இதை சுமேரிய ஜில்காமேஷ் காவியத்துக்குப் பின்னர் என்பர். முதலில் ஜில்காமேஷ் காவியம் முழு உருப்பெற்றது கி.மு 800 வாக்கில்தான். இரண்டாவது அது ஆதிமனிதனின் அடிபிடிச் சண்டை பற்றிய அசுர காவியம். அவரை யாரும் வழிபட்டதும் இல்லை
2.தமது காலத்தில் இந்தியாவில் வழங்கி வந்த அத்தனை பழமொழிகள், கதைகள், தர்ம விதிகள் அனைத்தையும் தொகுத்து அவற்றை மஹாபாரத கதையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்து உலகிலேயே மிகப் பெரிய இதிஹாச நூலை உருவக்கினார். மஹபாரதத்தில் இரண்டு லட்சம் வரிகளும் சுமார் ஒரு மில்லியன் சொற்களும் உள. அது மட்டுமல்ல. வியாசர் அதில் முதல் பகுதியிலேயே (ஆதிபர்வம்) ஒரு சவாலும் விட்டார். உலகில் உள்ள எல்லாப்பொருளும் இதனில் உள. இதனில் உள்ள அத்தனை பொருளும் வேறு எங்கும் இல என்றார். அதுவும் உண்மையே. அத்தனை விஷயங்களும் நீதி நெறிகளும் இந்த இதிகாசத்தில் இருக்கின்றன.
3.அவர் செய்த மூன்றாவது சாதனை 18 புராணங்களைத் தொகுத்ததாகும். நூற்றுக்கணக்கான புராணங்கள் இருந்தபோதிலும் அவற்றில் சிறப்புமிக்க 18-ஐ எடுத்து அவைகளை எழுதினார். எட்டு லட்சம் பாக்களையும் 16 லட்சம் வரிகளையும் உடைய புராணங்களில் இந்து மதத்தின் சாரம் கதைகள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதுவும் அவர் செய்த சாதனை.
வியாசர் இந்த சதானைகளைச் செய்த காலத்தில் உலகில் வேறு எந்த மொழியிலும் இலக்கியம் இல்லை. மோசஸ் பிறக்கவே இல்லை. கிரேக்க கதாசிரியர் ஹோமரும் பிறக்கவில்லை. சம்ஸ்கிருத வேதம் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடல்கள் மட்டும் சில மொழிகளில் இருந்தன. இலக்கியமென்று எதுவும் இல்லை!
இந்த மூன்று காரணங்களுக்காக வியாசருக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுக்கவேண்டும். அவர் தோன்றியிராவிடில் இந்துமதம் அழிந்தே போயிருக்கும்.
சமாதான நோபல் பரிசு எதற்கு?
மஹாபாரதப் போரைத் தவிர்ப்பதற்காக திருதராஷ்டிரனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லி உன் பிள்ளையை அடக்கு என்றார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பதால் போர் நடைபெறப்போவதும், அதன் முடிவும் அவருக்கு முன்கூட்டியே தெரியும்.
இதைவிட அவர் செய்த மிகப் பெரிய சமாதான வேலை ரிக் வேதத்தில் சமாதானம், அமைதி, உலக நலன் பற்றிய பாக்களை முதலாவது மற்றும் பத்தாவது மண்டலத்தில் சேர்த்ததாகும். ரிக் வேதத்தின் கருத்து என்ன என்பதைச் சொல்லும் முகத்தான், கடைசி பாடலாக அமைதி பற்றிய ஒரு பாடலை வைத்தார். மஹா பாரதத்தில் பாரத சாவித்ரி என்ற பகுதியில் நாலே ஸ்லோகங்களில் அதன் கருத்தை வெளியிட்டார். அதே போல மகத்தான வேதத்தின் கருத்தை கடைசி பாடலில் வெளியிட்டார். உலக மகா தேசிய கீதமாக வைக்கத் தக்க பாடல் அது.
உலக நாடுகள், இரண்டு உலகப் போர்களை நடத்தி பல லட்சம் மக்களைச் சாகடித்த பின்னர் ஐ நா சாசனத்தில் எழுதிய விஷயங்களை அதற்கு முன்னரே — 5000 ஆண்டுகளுக்கு முன்னரே — எழுதி விட்டார். அகவே அவருக்கு சமாதான நோபல் பரிசும் உரித்தாகுக!
இதோ அவர் நமக்கு தொகுத்தளித்த ரிக் வேதத்தின் கடைசி பாடல் ( ரிக் வேதம் 10-191) வரிகள்:
உங்கள் அனைத்து பிரார்த்தனையும் ஒரே கருத்துடையதாகுக !
உங்கள் இறுதி லட்சியம் ஒருமித்ததாகுக !
உங்கள் அணுகுமுறை ஒரே மாதியாக இருக்கட்டும் !
நீங்கள் பேசுவதெல்லாம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஆசை அபிலாசைகள் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் இதயங்கள் ஒன்றுபடட்டும் !
உங்கள் நோக்கம்/எண்ணம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஒற்றுமை பரிபூரணமானதாகட்டும் !
எல்லோரும் மகிழ்ச்சியுடன் இதைச் செய்யுங்கள் !
வாழ்க வியாசன் புகழ்!!
–சுபம்–
panchavarnam
/ December 8, 2014திரு . சுவாமிநாதன் அவர்களுக்கு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நான் தமிழ்
நூல்களில் உள்ள தாவரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு
தாவரத்திற்கும் ஒரு நூல் என்ற அடிப்படையில் முதலில் அரச மரம் புத்தம்
வெளியீட்டிருக்கின்றேன். அடுத்ததாக பனை மரம், கரும்பு, ஆலமரம், ஆகிய
புத்தங்கள் வெளியிட தயார் நிலையில் உள்ளது. வேதங்களில் இந்த தாவங்களின் பதிவை
என்னுடைய நூல்களில் இணைக்க விரும்புகின்றேன். முடிந்தால் தாங்கள் பதிவுகளைத்
தொகுத்து எனக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இரா. பஞ்சவர்ணம்,
பண்ருட்டி.
என்னுடைய blogspot பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
http://panrutipanchavarnam.blogspot.in/
Tamil and Vedas
/ December 8, 2014அன்புடையீர் தமிழில் இன்னும் நிறைய பணிகள் செய்வதற்குள. தாங்கள் செய்யும் பணி மிகச் சிறந்தது. இவ்வளவு காலமாக தமிழ் வாழ்க என்று கோஷமிட்டதோடு நிறுத்திவிட்டோம். இப்போது நிறைய ஆக்கபூர்வ பணிகள் நடப்பது நல்ல அறிகுறி. நான் எள், கரும்பு, பனைமரம், வாழைமரம், ஆலமரம், அரச மரம், அருகம்புல், உதியமரம், மராமரம் முதலியன பற்றி எழுதி இருக்கிறேன். வேதம், சிந்து சமவெளி, சம்ஸ்கிருத இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்தும் மேற்கோள்கள் இருப்பதால் இவைகளில் கூடுதல் தகவல் கிடைக்கும். ஆங்கிலத்தில் பிரம்மாஸ் ஹேர் (பிரம்மாவின் தலைமுடி) என்று ஒரு சிறிய புத்தகம் வெளியானது. கிடைத்தால் வாசியுங்கள். நான் இங்கு லண்டன் லைப்ரரியில் அதைப் படித்து குறிப்புகள் எடுத்துவைத்துள்ளேன். மரங்களைப் பற்றிக் கூட இவ்வளவு கதைகள் நம்பிக்கைகளா? என்று வியக்கத் தோன்றும். இதே போல நிறைய புத்தகங்கள் உள. கோவில் சிற்பங்களில் மரங்கள் என்று இன்னொரு ஆராய்ச்சிப் புத்தகம் எங்கள் லண்டன் பலகலைக்கழக லைப்ரரியில் உளது. அதிருந்தும் குறிப்புகள் வைத்துளேன்.தாங்கள் பயன்படுத்தும்போது பிளாக் பெயரையோ அல்லது கட்டுரையாளரின் பெயரையோ குறிபிட்டால் மகிழ்ச்சி. முடிந்தால் அவைகளுக்கான லிங்க் அனுப்புகிறேன்.