ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி-2
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.
(நிறைய கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் வெளியான எனது கட்டுரையின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் தருகிறேன்.)
“ராஜதரங்கிணி அதிசயங்கள் முதல் பகுதி”–யில் இந்த நூல் ஏன் தமிழர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் முக்கியமானது என்று எழுதினேன். முதல் தரங்கத்தில் (அத்தியாயத்தில்) ஹூண மன்னன் மிகிரகுலன் செய்த அட்டூழியங்கள் பற்றி வருகிறது.
1.மிகிரகுலன், நூறு யானைகளை மலையில் இருந்து உருட்டிவிட்டு அவை கதறிக் கதறி சாவதைக் கண்டு மகிழ்ந்தான். அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் “என்ன இது விநோத சப்தம்?– என்று வினவினான். காஷ்மீர் மலை முகட்டில் இருந்து ஒரு யானை மலைப் பள்ளத்தில் விழுந்துவிட்டது. அதனுடைய கதறல் சப்தம் இது — என்று அதிகாரிகள் கூறினர். உடனே அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது. மேலும் பல யானைகள மலை உச்சிக்குக் கொண்டு சென்று விரட்டி விழச் செய்யுங்கள் என்றான். அது முதல் அவனுக்கு யானைகளை உருட்டி விளையாடுவது பொழுது போக்கு ஆகிவிட்டது!!
2.மனைவி பிளவுசில் (ரவிக்கை) பாதங்கள் படம் இருப்பதைப் பார்த்து அதை ஏற்றுமதி செய்த இலங்கை மீது படை எடுத்தான். மனைவி அழகான ‘’டிசைன்’’ போட்ட பிளவுஸ் அணிந்து வந்தாள். உடனே இதை எங்கு வாங்கினாய்? மார்பகப் பக்கத்தில் கால் சுவடுகள் இருக்கிறதே! என்றான். அரசாங்க அதிகாரி ஓடி வந்து, இதை இலங்கையில் இருந்து வரவழைத்தோம். அங்கு மன்னரின் பாதங்களைப் போட்டு இப்படி துணிகள் தயாரிக்கிறார்கள் என்றனர். உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘’படை எடு, படை எடு’’- என்று கூச்சலிட்டான். இலங்கை மன்னன் புயல் வேக ஹூணப் படைகள் வருவதை அறிந்து ஓடி ஒளிந்தான். வேறு ஒரு மன்னனை பதவியில் அமர்த்திவிட்டு, மிகிரகுலன், புத்த மதப் பொக்கிஷங்களைச் சூறையாடிவிட்டு காஷ்மீருக்குத் திரும்பினான்.
3.போகும் வழியில் தமிழ்ச் சோழ மன்னன் தலையிலும் இரண்டு தட்டு தட்டிவிட்டுப் போனான். இவை எல்லாம் கல்ஹணர் எழுதிய விஷயங்கள். யார் அந்தச் சோழன் என்பதை தமிழர்கள் ஆராய வேண்டும்.
4.ஒரு அணையில் பாறாங்கல் அடைத்துக் கொண்டது. யாரவது ஒரு பத்தினி தொட்டால் பாறை அகன்றுவிடும். அதில் ஒரு யக்ஷன் இருக்கிறான் என்று அறிஞர்கள் சொன்னார்கள். பத்தினி என்று சொல்லிக் கொண்ட பெண்கள் தொட்டும் நகராமல் ஒரு குயவப் பெண் தொட்டவுடன் பாறை விலகியது. இதனால் கோபம் அடைந்து உயர் ஜாதிகளைச் சேர்ந்த மூன்று கோடிப்பேரை கொன்று குவித்தான். உயர்குலப் பெண்கள், அவர்களுடைய கணவன்மார்கள், குழந்தைகள் எல்லோரையும் கொன்றான்.
(இப்படி நடக்குமா? என்று நாம் யோசிப்போம். ஆனால் வரலாற்றில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் உண்டு. ஹிட்லர், ஸ்டாலின், சூ என்லாய் போன்றோர் கோடிக் கணகான மக்களைக் கொன்றார்கள். அமெரிக்கா அணுகுண்டு வீசி ஹிரோஷிமா, நாகசாஹியில் ஒன்றும் அறியாத அப்பாவி ஜப்பானிய பொதுமக்களை மில்லியன் கணக்கில் கொன்று குவித்தது. அண்மையில் சதாம் ஹுசைனின் பேரக் குழந்தையைக் கூட அமெரிக்கா கொன்றது. இந்திரா காந்தியை சீக்கியர்கள் கொன்றனர் என்பதற்காக 3000 சீக்கியப் பெண்கள் குழந்தைகள், ஆண்களை ரவுடிக் கும்பல்கள் கொன்றன. திருஞான சம்பந்தர் என்ற பிராமண சிறுவனின் மடத்துக்கு தீவைத்த 8000 சமணர்களை பாண்டிய மன்னன் கழுவேறச் செய்தான். பொற்கொல்லன் ஒருவன் காரணமாக கோவலன் கொலையுண்டதால் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு ஆயிரம் பொற்கொல்லர்களைப் பாண்டிய மன்னன் பலி கொடுத்தான் என்பது சிலப்பதிகாரம் நமக்கு அளிக்கும் செய்தி. இலங்கையில் கடைசி காலத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் யானைகளைக் கொல்வோர் மீது மட்டுமே பரணி பாட முடியும் என்று தமிழ் நூல் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. ஆயினும் முறையான போரில் எதைக் கொன்றாலும் அது குற்றமாகாது என்று எல்லா நாடுகளும், மதப் புத்தகங்களும், இலக்கியங்களும் சொல்லும்.)
5.இவ்வளவு பாபம் செய்தும் இவன் கொடுத்த தானங்களை வாங்க காஷ்மீரி பிராமணர்கள் வரிசையில் நின்றனர்! அத்தகைய பிராமணர்க்ளும் கொடியவர்களே என்று காஷ்மீரி பிராமணன் கல்ஹணன் சாடுகிறான். இவர்தான் ராஜ தரங்கிணி என்னும் நூலின் ஆசிரியர்.
6.இறுதியில் எல்லாவற்றுக்கும் பரிகாரமாக கூரான வாள் பொருத்தப்பட்ட கொதிக்கும் இரும்புப் பலகையின் மீது ஏறி உயிர்விட்டான் மிகிரகுலன்.
7.இவனுக்கு புத்தமதம் பிடிக்காது. ஆகையால் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள புத்த விஹாரங்களையும் தூபிகளையும் நாசம் செய்து புத்த குருமார்களைக் கொன்று குவித்தான். சைவ சமயத்துக்கு மட்டும் ஆதரவளித்தான். சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் இதைக் குறிப்பிடுகிறான்.
8.இவன் ஆண்டது கி.பி.515-ஐ ஒட்டிய காலம். அப்பொழுது தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி நடந்தது. ஆயினும் ஆங்காங்கே சேர சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரளவுக்கு இருந்திருக்கலாம்.
9.இவனுடைய ஆட்சி குவாலியர் (ம.பி) வரை இருந்தது ஒரு கல்வெட்டால் தெரிகிறது. பிறகு யசோ வர்மன் அல்லது பாலாதித்யன் என்ற குப்த மன்னன் இவனை விரட்டி அடித்தனர். அதற்குப் பின்னரே காச்மீரையும் ஆப்கனிஸ்தானத்தையும் வென்றான்.
10.ஹூணர்கள் என்பவர்கள் மங்கோலிய வம்சத்தினர் — நாடோடி மக்கள் — புயல் போல வருவர் — காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வர். புயற் காற்று சேதத்தை உண்டாக்கிவிட்டு போய்விடுவது போல இவர்களும் போய் விடுவர். போகும் வழியில் கிடைத்ததை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடுவர்.
மேற்கூறிய விஷயங்களை விரிவாக அறிய விரும்புவோர், ஸ்லோகம் வாரியான முழு மொழி பெயர்ப்பையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் காண்க.
மூன்றாவது பகுதியில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறேன்