அகநானூறு அதிசயங்கள்– பகுதி 3
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1479; தேதி 12 டிசம்பர், 2014.
முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.
அதிசயம் 11
தமிழர்களின் அதிசய நம்பிக்கைகள் பற்றி நிறைய பாடல்கள் உண்டு. ஒரு சில எடுத்துக் காட்டுகள்:-
அகம்.158: ஆந்தைகள் பற்றி அச்சம் (கபிலர் பாடியது)
அகம்.36: -ஆந்தைகள் பொருள் தெரிந்து உரைக்கும் (இளங்கீரனா)
ஏனைய ஆந்தைப் பாடல்கள்: அகம்.19, 88, 356
சங்க காலத்தில் கோவில்கள் இருந்தனவா என்ற கேவிக்கு விடை சொல்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாடல் 99)
அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே, கானம் நயவரும் அம்ம—
என்கிறார். அதாவது வணங்குதற்குரிய தெய்வம் உடைய கோவிலில் கலந்து கிடக்கும் மலர்களைப் போல அவை மணம் கமழும் என்பது பொருள். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் குடை சிவபெருமான் கோவிலைச் சுற்றும் (நகர் வலம்) போது மட்டும்தான் தாழ்த்தப்படுமாம் என்று காரிகிழார் (புறம்.6) பாடுவதையும் ஒப்பிடுக.
இந்தப் பாடல்கள் பல சுவையான செய்திகளை வெளிப்படுத்துகின்றன. பூக்காரிகள் பற்றி நிறைய பாடல்கள் இருப்பதால், கோவில் வாசலில் இன்று போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்னரும் பூ விற்றதும், அதைத் தமிழர்கள் கோவில்களில் பூசித்ததும் இதனால் விளங்கும். கிருஷ்ணனும் பகவத் கீதையில் பத்ரம் புஷ்பம் பழம் தோயம் (இலை, பழம், பூகள், தண்ணீர்) எதை அர்ப்பணித்தாலும் நான் ஏற்கிறேன் என்கிறான். அதையே கபிலர் பாடுவதை புறநானூற்றில் பகவத் கீதை என்ற எனது கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன்.
இதைவிட மிகச் சுவையான விஷயம்— மிலிட்டரி சல்யூட் – ஆகும்.. ராணுவ அணிவகுப்பில் தலைவர் அருகே வருகையில் அவரை நோக்கி முகத்தைத் திரும்புவதும் அவரைக் கடந்துசென்ற பின்னர் பார்வையை (ஐஸ் ப்ரன்ட்) நேராக்குவதும் உலகம் முழுதும் படைகளில் உண்டு. இப்படி முது குடுமிப் பெருவழுதியின் குடையும் கோவிலைச் சுற்றும் போது மட்டும் தாழ்த்தப்பட்டது. யாமார்க்கும் குடியல்லோம் என்று பாடியவர்களும் இறைவன் அருகே வருகையில் தான் ஒரு சிறு துளி என்று எண்ணி அகந்தையை விட்டது தமிழனின் ஆன்மீக உணர்வுக்கு சான்று பகரும்.
இன்று விண்வெளி ஆராய்ச்சிக்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் மூன்று அடிப்படை பௌதீக விதிகளைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டனும் பரந்த சமுத்திரத்தின் கரையில் கிடக்கும் கூழாங்க் கற்களைத்தான் கண்டு எடுத்திருக்கிறேன் — என்று பணிவுடன் கூறினார். பிரபஞ்சத்தின் மாபெரும் ரகசியங்களில் நாம் கண்டது வெறும் சில கற்களே.
கன்யாகுமரி கோவில்
பாடல் 370ல் அம்மூவனார் கன்யாகுமரி பகவதி அம்மன் கோவிலை குறிப்பால் உணர்த்துகிறார். தோழி சொல்கிறாள், “அடியே! நீ கடல் தெய்வம் வந்து கடற்கரையில் நின்றார் போல நில். நானும் கோவிலில் ஆடும் ஆடுமகள் போல உனக்குத் துணையாக நிற்பேன். இப்பாடலில் கன்யாகுமரி பகவதி அம்மன் போல கடற்கரைக் கோவில் இருந்ததும் அக்கோவில்களில் ஆடுவதற்கான பெண்கள் நியமிக்கப்பட்டதும் தெரிகிறது. ராஜ ராஜ சோழனின் தஞ்சைப் பெரியகோவிலைச் சுற்றி 400 பெண்கள் வசித்ததும் அவர்கள் பெயர்கள், வீட்டு முகவரி (டோர் நம்பர்) என்ன என்பதையும் கல்வெட்டுகளில் அறிகிறோம். சில பெண்களின் பெயர்கள் அழகிய அற்புதமான தமிழ்ப் பெயர்கள்
பிராமி கல்வெட்டு
ஆலம்பேரிச் சாத்தனார் என்பவர் பாடல்கள் 47, 81, 143, 175 ஆகியவற்றைப் பாடி இருக்கிறார். பாடல் 81ல் கடலன் என்பவன் பெயர் வருகிறது. இதே புலவர் நெடுஞ்செழியனையும் பாடியுள்ளார். பிராமி கல்வெட்டுகளிலும் இப்பெயர்கள் வருகின்றன. ஆகையால் அக் கல்வெட்டுகள் சங்க காலத்தை ஒட்டியே இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
எகிப்தும் தமிழர்களும்
எகிப்துக்குச் சென்றோர் பாண்டியர்கள் என்று ஏ.சி.தாஸ் என்பவர் புத்தகம் எழுதினார். இதோ மேலும் ஒரு சான்று:
அகம்.101 ல் வானம் என்னும் கடலில் சூரியன் என்னும் தோணி செல்வதாக மாமூலனார் பாடுகிறார். எகிப்தியர்களும் சூரியனை இப்படித்தான் வருணிக்கின்றனர். வேதத்தில் அவன் ஏழு குதிரைகள் பூட்டிய ரத்தில் வருவதாகப் படி இருக்கின்றனர். ஆக தமிழர்கள் சொன்னதையே எகிபதியர்கள் சொன்னார்கள். ஏற்கனவே குட்டுவன், பொறையன், ஆதன் என்ற பெயர்கள் எகிப்திய மன்னர் பெயர்களில் பின்னோட்டாக வருவதை எழுதி இருக்கிறேன்.
கண்ணன் – கோபியர் லீலை
பாடல் 59 மருதன் இளநாகன் பாடியது. இதில் கண்ண பிரானின் லீலைகள் சித்தரிக்கப்படுகின்றன. வடக்குத் திக்கில் உள்ள நீர்வளம் பொருந்திய தொழுநை (யமுனை) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஆயர் மகளிர் தழை உடை உடுத்திக் கொள்ள கிருஷணன் எப்படி குருந்த மரத்தை வளைத்தானோ அது போல ஆண் யானை பெண் யானைக்கு யா மரத்தை வளைத்துக் கொடுத்தது. அதனுடைய இளம் தளிர்களை உண்ண இப்படி உதவியது – என்று புலவர் பாடுகிறார். கிருஷ்ணனின் லீலைகள் சங்க காலத்தில் மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் என்பதும் பிராணிகளின் அன்பும் இப்பாட்டில் வெளிப்படுகிறது. ஆயினும் யமுனா, ஜமுனா என்ற பெயர் எப்படி தொழுநை என்று தமிழில் மாறியது என்பது தெரியவில்லை.
அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………
contact swami_48@yahoo.com