கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1481; தேதி 13 டிசம்பர், 2014.
ஓம், சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவையும் கொல்லு.
ஒம், சக்தி அருளால் உலகில் ஏறு- ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன்னருளே என்று மனது தேறு — சுப்பிரமணிய பாரதி
ஓம்காரத்துக்கும் எண் மூன்றுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் புரிந்து கொள்ள பேரறிஞராக இருக்க வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த சின்னத்தைப் பார்த்த உடனேயே மூன்று என்பது அதில் இருப்பதைக் கண்டுபிடித்து விடுவர். நீங்களே கீழ்கண்ட படங்களைப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
முதலில் இந்து மதத்தில் ஓம்காரத்தின் சிறப்பைக் காண்போம். இது ஆன்மீகக் கட்டுரை இல்லை- வெறும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகவே மூன்று தொடர்புள்ள இடங்களை மட்டும் காண்போம்.
இந்தப் பிரபஞ்சத்தில் முதலில் இருந்த நாதம் ஓம்கார நாதம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அதுவே பிரம்மன், அதாவது கடவுள். அதுவே பிரம்மா, விஷ்ணு, சிவனாக பரிணமித்தது. சத்வ, ரஜோ, தாமஸ குணத்தின் சின்னம் அது. அதே நேரத்தில் குணங்களைக் கடந்த நிலையும் அதற்கு உண்டு. அ+உ+ம என்ற மூன்று எழுத்துக்களால் உருவான சின்னம் அது. தமிழ் ஓமாக இருந்தாலும் சம்ஸ்கிருத ஓமாக இருந்தாலும் இந்த அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துகளும் அதில் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இருப்பதையும், மூன்று என்ற எண் அதில் இருப்பதையும் காணலாம்.
ஓம்காரம் மிகவும் அபூர்வமான மந்திரம் என்பதால் கிருஷ்ணன் பகவத் கீதையில் மூன்று முறை அதன் பெருமைதனை எடுத்துரைக்கிறார். இதற்கு ஏக அக்ஷரம் = ஓரெழுத்து என்று பெயர். பிரபஞ்சம் மஹா பிரளயத்தில் ஒடுங்கும்போது அது ஓம்காரத்தில் கலந்து விடும். சப்தத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்ளும்.
படைத்தது—படைக்கப்பட்டது எல்லாவற்றையும் குறிப்பது ஓம். முக்காலத்தையும் குறிப்பது ஓம்காரம்.
மூன்று என்ற எண்ணில் உள்ள சொற்கள் (த்ரி குணம், த்ரி காலம் முதலியன) சம்ஸ்கிருதத்தில் மட்டும் 203 உள்ளன. தமிழில் உள்ள முத்தமிழ், முக்கனிகள் என்ற சொற்களைச் சேர்த்தால் இன்னும் நூறு சொற்கள் கிடைக்கலாம். மற்ற கலாசாரங்களில் உள்ள மூன்றுகளையும் சேர்த்தால் இன்னும் நூறு கிடைக்கலாம்.
Towrie petrosphere, Aberdeenshire, 3200 BCE
பகவத் கீதையில் ஓம்காரம்
இனி கண்ணன் சொல்வதைக் காண்போம்:
1.நான் எழுத்துகளில் ஓம் – ஆக இருக்கிறேன், அதாவது ஏகாக்ஷரமாக இருக்கிறேன் (10-25)
2.”ஆகையால் ஓம் என்று உச்சரித்து வேதியர்களின் வேள்வி, தானம், தவம் முதலியன துவங்குகின்றன” (17-24)
வேதத்தின் முதல் சொல் ஓம். இது இல்லாமல் எந்த மந்திரமும் சொல்லப்படமாட்டாது. வெறும் பூஜ்யங்களை ஆயிரம் முறை வரிசையாக எழுதினாலும் அது பூஜ்யமே. ஆனால் அதற்கு முன் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எதை எழுதினாலும் அதன் மதிப்பு அபரிமிதமாகப் பெருகும். அது போலவே ஓம் என்னும் மந்திரத்துடன் மற்ற மந்திரங்களை சேர்க்கையில் அதில் உயிர்ச் சக்தி =பிராண சக்தி பாய்கிறது. இதனால் ஓம்காரத்துக்கு பிரணவம் என்று பெயர்.
(இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியின் பெயர் பிரணவ குமார முகர்ஜி. ஓம்காரம் என்பதைப் பலர் பெயர்களில் சூட்டிக்கொள்வர்)
3.பிரணவத்தை உச்சரித்து, என்னையும் சிந்தித்து உயிர் விடுவோர் மிக உயர்ந்த நிலையை அடைவர் என்று (8—13) மற்றொரு இடத்தில் சொல்லுகிறார்.
Omega of Greek Alphabet
கிரேக்க நாட்டில் ஓம்காரம்
கிரேக்க லிபியின் கடைசி எழுத்து ஒமெகா அதாவது மெகா + ஓ= பெரிய ஓ. ஓம்காரத்தின் பெருமையைத் தெரிந்து இதை இப்படி வைத்தனரோ என்று எண்ணுகிறோம். இன்னொரு காரணம் அந்த ஊர் பழங்காலப் பானைகளில் மூன்று சுழி சின்னத்தைக் காண முடிகிறது. ஒமேகா என்பதும் கிட்டத்தட்ட ஓம் போலவே எழுதப்படுகிறது.
அயர்லாந்து நியூகிரேஞ்ச்
அயர்லாந்து நாட்டில் நியூகிரேஞ்ச் என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கல்லறைகள் இருக்கின்றன. அதன் முன்னால் வைக்கப்பட்டுள பாறையில் மர்மமான மூன்று சுழிச் சின்னங்கள் இருக்கின்றன. “என்னை நினைத்து ஓம்காரத்தைச் சொல்லி உயிர் விடுபவன் பரம கதியை அடைகிறான்” — என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதை உறுதிபடுத்தும் வகையில் இச்சின்னத்தைக் கல்லறையில் காண்கிறோம். இதன் காலம் கி.மு 2000 முதல் 3000 என்று பல கணிப்புகள் உள்ளன.
மால்டா என்ற தீவு நாட்டிலும், அயர்லாந்தில் மேலும் பல இடங்களிலும் பிரான்ஸில் பிரிட்டனி என்னும் இடத்திலும் இதே போல மூன்று சுழிச் சின்னங்கள் உளது. ஆயினும் நியூகிரேஞ்ச் சின்னம் தெள்ளத் தெளிவானது. அதில் ஏழு வளைவுக் கோடுகள் கடிகார முறையிலும் எதிர்திசையிலும் செல்லும்படி வரைந்துள்ளனர். இதன் காரணமாக, இதில் உட்பொருள், மறை பொருள் உண்டு என்றே தொல்பொருட்த் துறை அறிஞர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.
இதே போல கெல்டிக் ஆர்ட் எனப்படும் ஐரிஷ் கலாசாரம் பரவிய நாடுகளில் கை போன்ற மூன்ற வளைவுகள் உடைய சின்னம் —ட்ரஸ்கெலியான் எனப்படும்—சின்னம் காணப்படுகிறது.
இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் பாஸிட்டிவ் = ஆக்கபூர்வ சக்தி உண்டாக்கும் சின்னங்கள். ஏனெனில் “ஐல் ஆப் மேன்” எனப்படும் தீவில் மூன்று கால்கள் சுற்றும் சின்னம் இருக்கிறது. அதில் எழுதி இருக்கும் வாசகம்:– ‘’இதை எங்கே தூக்கி எறிந்தாலும் இது நிமிர்ந்தே நிற்கும்’’.
இதிலிருந்தே இத்தகைய சின்னத்தை உருவாக்கியவர்களின் மனநிலை நமக்குப் புரிகிறது. எல்லாம் ஓம்காரம் போல ஆக்கபூர்வமான சக்தியைக் குறிப்பதே. மற்றொரு அபூர்வ ஒற்றுமை எல்லாம் மூன்று என்ற எண்ணின் அடிப்படையில் அமைந்த சின்னங்கள்!!
ஓம் ஓம் என்று உரைத்தனர் தேவர்- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
நாமும் கதையை முடித்தோம் – இந்த
நாநிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க! – பாஞ்சாலி சபதம், பாரதியார்