சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! –3

arthur lintgen

Arthur Lintgen

கட்டுரையை எழுதியவர் :– S NAGARAJAN
கட்டுரை எண்- 1490; தேதி 16 டிசம்பர், 2014.

“மிகவும் மதிப்புமிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அதீத உளவியல் கண்டுபிடிப்புகள் நிஜமாகவே ஒரு புதிய உலகத்தையே காண்பிக்கின்றன” – உளவியலாளர் டாக்டர் வில்லியம் மோல்டொன் மார்ட்ஸன்

11.புலன் மூலம் இசையை உணரும் திறன் கொண்ட ஆர்தர் லிண்ட்ஜென்
அமெரிக்க உளவியாளர் ஆர்தர் லிண்ட்ஜென் ஒரு அபூர்வமான மனிதர். ஒரு இசைத்தட்டைப் பார்த்தவுடன் – கேட்டவுடன் அல்ல – பார்த்த மாத்திரத்திலேயே அதில் என்ன இசை இருக்கிறது, என்ன பாட்டு அது என்பதைச் சொல்லி விடுகிறார்!

இசைத் தட்டில் வரி வரியாக இருக்கும் பள்ளங்களைப் பார்த்த மாத்திரத்தில் அதில் என்ன பாடல் பாடப்படுகிறது என்பதைத் தன்னால் உணர முடிகிறது என்கிறார் அவர். பாடலின் ஒலி தூக்கலாக இருக்கிறதா, குறைந்து ஒலிக்கப்படுகிறதா, என்ன வாத்தியம் இசைக்கப்படுகிறது என்பதை எல்லாம் கூட அவர் துல்லியமாகக் கூறி விடுகிறார். இது உண்மை தானா என்பதைப் பரிசோதிக்க பலர் நிபுணர்கள் வந்தனர். சோதனை செய்த பின்னர் வியப்பால் வாயடைத்துப் போய் பிரமிக்கின்றனர்.

shakauntala-devi

12.மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி
மனிதக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கணக்குப் புலியாகத் திகழ்பவர் சகுந்தலா தேவி. இந்தியாவில் பிறந்த இவர் இப்போது பங்களூருவில் வாழ்ந்து வருகிறார்.ஆறாம் வயதிலேயே எந்த விதப் பயிற்சியும் இல்லாத போதே மைசூர் பல்கலைக் கழகத்தில் தனது கணித ஆற்றலையும் நினைவாற்றல் திறனையும் காட்டி அனைவரையும் அசர வைத்தவர் இவர்.

அவரைப் பலரும் பல விதமாக சோதனை செய்து பார்த்துள்ளனர். அனைத்து கணிதங்களையும் மனதிலேயே செய்து விடுகிறார். பெர்க்லியில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டது.61,629,875 என்ற எண்ணின் க்யூப் ரூட்டையும் (கன மூலம்) 170,859,375 என்ற எண்ணின் ஏழாம் ரூட்டையும் (ஏழாம்படி மூலம்) கண்டுபிடிக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. உடனடியாக விடையைச் சொல்லி அனைவரையும் பிரமிக்க வைத்தார் சகுந்தலா தேவி! இவரை ஒரு மனித கம்ப்யூட்டர் என்று அனைவரும் புகழ்கின்றனர்.

Shakuntala_Devi-wiki

13. போட்டோகிராபிக் நினைவாற்றல் கொண்ட ஸ்டீபன் வில்ட்ஷைர்
ஸ்டீபன் வில்ட்ஷைர் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலை நிபுணர். இயற்கை நிலக்காட்சி (landscape) ஒன்றைக் கண்டு விட்டால் போதும் அதை அப்படியே ஓவியமாக வரையும் திறன் படைத்தவர் இவர்.
“அவர் பல நகரங்களையும் அப்படியே தத்ரூபமாக முழுவதுமாக வரையும் திறன் படைத்தவர்,இதற்காக இரு முறை ஹெலிகாப்டரில் கொஞ்ச நேரம் பறப்பார். அவ்வளவு தான், நகரத்தின் படம் தயாராகி விடும்!
உதாரணமாக ஒரு முறை லண்டனின் மேல் ஒரே ஒரு முறை அவர் ஹெலிகாப்டரில் பறந்து அப்படியே லண்டனைச் சித்தரித்து விட்டார். 305 சதுர மைல் பரப்பளவு உள்ள நியூயார்க் நகரை 29 நிமிட நேரமே ஹெலிகாப்டரில் பறந்து கண்டபிறகு, அவர் அதை அப்படியே 19 அடி நீள ஓவியமாக வரைந்தார்!

stephenwiltshire1
Stephen Wiltshire

14. நீண்ட தூரம் ஓட வல்ல தாராஹுமாரா மக்கள்
மெக்ஸிகோ நகரின் வடமேற்கில் உள்ள பழங்குடியினரான தாராஹுமாரா மக்கள் நீண்ட தூர ஓட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் இனத்தை அவர்கள் தங்கள் மொழியில் ‘ரராமுரி’ என்று குறிப்பிடுவர். இதன் பொருள் “காலால் நீண்ட தூரம் ஓடுபவர்கள்” அல்லது “வேகமாக ஓட வல்லவர்கள்” என்பதாகும்.
ஒரு முறை இரண்டே நாட்களில் அவர்கள் 200 மைல்களை ஓடிக் கடந்திருக்கின்றனர்!
இப்படி மக்கள் கூட்டம் ஒடுவது சகஜம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் டீன் கர்னாஜெஸ் என்ற மனிதர் 80 மணி நேரம் 44 நிமிடங்களில் தூக்கமே இன்றி 350 மைல்களை ஓடிக் கடந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

iceman wim hof
Ice man Wim Hof

15.ஐஸ்மேன் விம் ஹாஃப்
ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் விம் ஹாஃப் என்னும் மனிதர் ஒரு மனிதன் எவ்வளவு குளிரைத் தாங்க முடியும் என்பதைக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார். அவர் 35 ஆண்டுகளில் எல்லா விதமான சவால்களையும் எதிர்கொண்டு 20 கின்னஸ் உலக ரிகார்டுகளைப் படைத்துள்ளார்.
இந்தியாவில் மவுண்ட் எவரெஸ்ட் மவுண்ட் கிளிமஞ்ஜாரோ ஆகிய சிகரங்களில் ஏறி இருக்கிறார். ஐஸ் வாட்டரில் நீந்தி இருக்கிறார். பாலைவனத்தில் தண்ணீர அருந்தாமல் மாரதான் ஓட்டத்தில் பாதி தூரத்தை ஓடிக் கடந்திருக்கிறார்!
விம் ஒருவிதமான தியான உத்தியைக் கடைப்பிடித்து குளிரைத் தன்னால் உணரமுடியாமல் செய்து கொள்கிறார்! அந்த தியான முறை அவரது உடலின் தாங்கும் சக்தியை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார் அவர். ஐஸ் குளிரினால் எந்த பாதிப்பையும் தன் உடல் அடையாமல் பாதுகாக்க வல்லது அந்த தியான முறை என்கிறார் அவர்!

16. உடனடி எதிர்வினையாற்றும் சூப்பர் மனிதன் ஐசோ மச்சி
ஐசோ மச்சி என்பவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு வாள் போர் நிபுணர். இவர் நிபுணத்துவம் கொண்ட தற்காப்பு கலையின் பெயர் ஐடோ (Iaido). ரிஃப்ளெக்ஸ் எனப்படும் உடனடி எதிர்வினையாற்றுவதில் இவரது உடனடித் தாக்குதல் மின்னல் வேகத்தை ஒத்திருக்கும். வாட் போரில் அபாரமாக உடனடி எதிர் தாக்குதலை நிகழ்த்தும் இவர் பல உலக ரிகார்டுகளை ஏற்படுத்தியுள்ளார்!

Swami_main

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பகவான் சத்யசாயிபாபா ஒரு முறை பங்களூரில் உள்ள இந்தியன் இண்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸுக்கு விஜயம் செய்தார்.அதனுடைய டைரக்டர் பகவந்தம் பாபாவின் சிறந்த பக்தர். அவர் தங்கியிருந்த பகவந்தத்தின் வீட்டின் மாடியில் க்ளார்க் வேலைக்காக ஒரு இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனை அழைத்த பாபா என்ன விஷயம் என்று கேட்டார். இண்டர்வியூவில் கலந்து கொள்ள வந்த தான் பதிலைச் சரியாகச் சொல்லவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

பாபா,”அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் எதாவது உனக்குத் தந்தார்களா?” என்று கேட்டார். அந்தப் பையன்,” ஆமாம், நான் பக்கத்து கிராமத்திலிருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபாய் என்னிடம் இருக்கிறது” என்றான்.

உடனே பாபா,” சி.வி,ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.
பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி.ராமனுக்காகக் காத்திருந்தான். சி.வி.ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறப் போனவர் பையனைப் பார்த்து,” நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?” என்றார். பையன் அவர் அருகில் சென்று,” கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டவுடன் அளவிலா மகிழ்ச்சி அடைந்த சி.வி.ராமன், “ஆஹா! இந்த வேலைக்கு உன் போன்ற நேர்மை உடைய ஒருவன் தான் வேண்டும்” என்று கூறி விட்டு, நிறுவன அதிகாரியை அழைத்து உடனடியாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அடித்து அவனுக்குத் தர உத்தரவிட்டார்.ஐந்து ரூபாயையும் அவனிடமே தந்தார்.

பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நமஸ்கரித்தான். பாபா,”பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி” என்று அருளுரை பகன்றார்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: