வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

valmiki2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1491; தேதி 16 டிசம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி ராமயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

அப்பய்ய தீக்ஷிதரின் உவமை பற்றிய ஸ்லோகத்தை பரிதிமாற்கலைஞர் என்ற பெயர்கொண்ட பேராசிரியர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்:–

உவமை என்னும் வலருங் கூத்தி
பலவகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய அரங்கிற் கவின்பெறத் தோன்றி
யாப்பு அறி புலவர் இதயம்
நீப்பு அறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே.

பொருள்:–உவமை என்பவள் ஒப்பற்ற நாட்டிய மங்கை. அவள் பலவேறு கோலங்களைக் கொண்டு காவியம் என்னும் மேடையிலே அழகுபொலியத் தோன்றி, பாட்டின் சுவையை அறியும் ரசிகர் மனத்தில் நீங்காத இன்பம் மலர நடிக்கிறாள்
(காளிதாசன் உவமைகள் —- என்னும் நா.வரதஜுலு நாயுடு எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது)

கம்பன் அவனது ராமாயணத்தில்

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அப்பெண்தானே ஆயினபோது இங்கு அயல்வேறோர்
ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை செய்வோம்

—என்பான். எல்லோரும் உவமைக்குப் பயன்படுத்துவது சீதை என்னும் பேரழகியை— குணத்தில் பெண்மைக்கெல்லாம் இலக்கணம் வகுத்தாளை – அப்படிப்பட்ட சீதையை நான் எதைக் கொண்டு உவமை சொல்ல முடியும் – என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு உவமை சீதையே!
Valmiki's-Ramayana-

உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே ‘’உபமா’’ என்ற சொல் இருப்பதாக (5-34-9; 1-31-15) வேதத்தை ஆராய்ந்தோர் (ஆர்.எஸ்.டே) கூறுவர். கி.மு. 800-க்கு முன் வாழ்ந்த யாஸ்கர் என்பவர் கார்க்யர் எழுதிய இலக்கணப் புத்தகத்தில் ‘’உபமா’’ என்பதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதை மேற்கோள் காட்டுவார்.

மஹாபாரதத்தில் 232 பொருட்கள் அல்லது உபமானங்கள் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்படுவதால் 2299 ஸ்லோகங்களில் அவை திரும்பத் திரும்ப வருகின்றன என்று மஹாபாரத உவமைகள் பற்றிய ஆய்வுகள் (ராம் கரன் சர்மாவின் நூல்) காட்டுகின்றன. உவமைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர் இந்திரன். 247 முறை ஒப்பிடப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் வேத கால தெய்வங்களான இந்திரன், சூரியன், அக்னி, யமன் ஆகியோருக்கும் பின்னரே வருவதால் (எண்ணிக்கையின் படி), மஹாபாரதம் மிகவும் பழைய நூல் என்பது தெளிவாகும்.

புராணங்களில் சிவனையும், விஷ்ணுவையும் பெரிய தெய்வங்கள் எனக் கொண்டாடுவர். அதற்கும் முந்தியவை ராமாயண மஹாபாரதம் என்பது உவமை ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

உலகத்திலேயே காளிதாசன் போல உவமைகளைத் திறம்படப் பயன்படுத்திய கவிஞன் எவனும் இலன். இதனால் ‘’உபமா காளிதாசஸ்ய’’ — என்ற சொற்றொடர் வழங்குகிறது. உவமைக்கு காளிதாசன் என்பது இதன் பொருள். அவனுடைய ஏழு படைப்புகளில் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளைப் படுத்தியதால் இந்தப் பெயர் என்பதல்ல. தகுந்த இடத்தில் தகுந்த உவமைகளைக் கையாண்டதே அவன் சிறப்பு.

abhijnanasakuntalam

காளிதாசன் புள்ளிவிவரம்

உலகப் பெரும் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறும் கவிஞர்களில் காளிதாசனும் ஒருவன். அவனுடைய உவமைகளை ஆராய்ந்தோர் தரும் பட்டியல் இதோ:
காளிதாசர் பயன்படுத்திய உவமைகள் –1250
ஏழு நூல்களில் பயன்படுத்திய சொற்கள் – 40,000 -க்கு மேல்!
அவருடைய ஏழு படைப்புகளில் மூன்றுக்கு மட்டும்
எழுதப்பட்ட உரைகள் – 93
ரகு வம்சத்தில் இவன் வரலாறு
சொல்லும் அரசர்களின் எண்ணிக்கை – 29

நாடகம், கவிதை, காவியம், சிறு நூல்கள் எனப் பல எழுதி ஷேக்ஸ்பியருக்கும் மேலான இடம் பிடித்த இந்தியன். ஈரான் முதல் இந்தோநேசியா வரை வருணித்தவன் காளிதாசன். அது மட்டுமல்ல மேக தூதம் என்னும் பயண நூல் மூலம் உலகின் முதல் ‘’டூரிஸ்ட் கைடு’’ என்னும் பெயரையும் பெற்றான். இவனுக்கு இணையான கவிஞன் இதுவரை இந்தியாவில் தோன்றியது. இனி தோன்றப் போவதும் இல்லை! இல்லை. பாரதியால் புகழப்பட்ட கவிஞன்!

வடமொழி அறிஞர்களும், நாணயங்கள் சிலைகளை ஆராய்ந்த டாக்டர் சிவராமமூர்த்தி போன்றோரும் இவன் கி. மு. முதல் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ வழ்ந்ததை உறுதிபடக் கூறுவர். காலத்தாலும் முந்திய கவிஞன்!

காளிதாசனின் ரகுவம்சத்தைப் பின்பற்றி இலங்கை வரலாற்று நூலுக்கு மஹாவம்சம் என்று பெயரிட்டனர். காளிதாசனின் உவமைகளை காதா சப்த சதி என்னும் பிராக்ருத நூலில் ஊர் பேர் தெரியாத கவிஞர்கள் அப்படியே கையாண்டனர் (களவாடினர்!)

சங்க இலக்கியத்தில் காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் இருப்பதை நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன். காளிதாசன், விக்ரமாதித்தன் என்ற புகழ் பெற்ற மன்னன் காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த விக்ரமாதித்தன் கி.மு 56-ல் அவன் பெயரில் ஒரு சஹாப்தத்தையே துவங்கிய பெருமை உடையவன். சகரர், யவனர், ஹூணர்களை ஓட ஓட விரட்டியவன்.

மேற்கூறிய தகல்களை உவமைகள் பற்றிய மூன்று ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் இருந்து திரட்டினேன்.
dr nagaswami

தொல்காப்பியத்தில் உவம இயல்

உவமை என்பது சம்ஸ்கிருதத்தில் ‘’உபமா’’ எனப்படும். தொல்காப்பியரும் கூட இதைத் தமிழ்ப் படுத்தி உவமம் என்கிறார். உவம இயல் என்றே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அவர் 38 உவம உருபுகளைப் பட்டியல் இட்டுள்ளார். அதில் நிறைய உருபுகளை சங்க இலக்கியத்தில் கூடக் காண முடியவில்லை. நமக்கு எல்லோருக்கும் தெரிந்த உவம உருபு ‘’போல’’ என்பதாகும். ரோஜா மலர் போல இதழ், ஆப்பிள் பழம் போலக் கன்னம் என்றெல்லாம் சினிமா வசனங்களில் கேட்கிறோம். ஆனால் தொல்காப்பியர் தரும் பட்டியலைப் பாருங்கள்:–

அன்ன, அங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட,ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப, தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க, புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வென்ற, வெல்ல. இதில் 14 உருபுகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. என்றும் சங்க இலக்கியத்தில் 28 கூடுதல் உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் ரா.சீனிவாசன் சங்க இலக்கியத்தில் உவமைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

15FR-_TOLKAPPIYAM__1120361e

–சுபம்–

Leave a comment

2 Comments

  1. T Jagannathan

     /  December 16, 2014

    Very nice.thsnk you sir.
    T.jagannathan

  2. Great research….Nandri Sir

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: