அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ்

Tamil-annai
Mother Tamil- Tamil Annai

Research paper written by London Swaminathan
Research article No.1507; Dated 22 December 2014.

Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 1
தமிழ் ஒரு அற்புதமான மொழி. ஏராளமான அதிசயச் செய்திகள் நிறைந்த மொழி. படிக்கப் படிக்கத் தெவிட்டாத செய்திகள் உடைய மொழி. பழமொழிகளும் தனிப் பாடல்களும், நல்ல இலக்கியங்களும் ஆயிரக் கணக்கில் உடைய இம்மொழியை கற்று அனுபவிக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். இதன் சுவையை நுகர ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தமிழ் அதிசயம் -1
எத்தனை மன்னர்கள் அடிபணிந்தனர்?
குலோத்துங்க சோழனின் (1070-1118) வெற்றிகளை எடுத்துரைப்பது ஜயம்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி என்னும் நூல். அதில் குலோத்துங்கன் வெற்றிகொண்ட நாடுகள், இனங்களின் பட்டியலைக் கேளுங்கள்:

தென்னவர் வில்லவர் கூபகர்
சாபகர் சேதியவர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
காடவர் காரிபர் கோசலரே
சங்கர் கராளர் கலிந்தர்
துமிந்தர் கடம்பர், துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர்
விராடர் மயிந்தர் சயிந்தர்களே
சிங்களர் வங்களர் சேகுணரே
சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர்
சவுந்திரர் குச்சரர் கச்சியரே
வத்தவர் மத்திரர் மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர்
துருக்கர் குருக்கர் வியத்தர்களே
அந்தக் காலத்தில் பாரத நாடு 56 தேசங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மன்னன் இவர்கள் எல்லோரையும் வெற்றிகண்டதைப் பட்டியல் கூறுகிறது.

tamil annai 2

தமிழ் அதிசயம் -2 வாய்மை,உண்மை,மெய்மை
இந்து மதம் சத்தியம் என்னும் மாபெரும் அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ளது. கடவுளே ஆனாலும் சத்தியத்தை/ கொடுத்த வாக்கை மீறமுடியாது. இதை பஸ்மாசுரன் கதை முதலிய வேறு பல எடுத்துக்காட்டுகளால் என்னுடைய பல கட்டுரைகளில் விளக்கிவிட்டேன். ஆனால் தமிழர்கள் இந்த சத்தியத்தை விளக்குவது போல வேறு யாரும் அழகாக விளக்கவில்லை.

மனம், மொழி, மெய் (காயேன, மனசேன, இந்த்ரியைர்) ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு, சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களைச் செய்தால், ஒருவர் சித்தராகி அற்புதங்களைச் செய்யலாம். இதற்கு தமிழர்கள் மட்டுமே மூன்று அற்புதமான சொற்களைத் தனித்தனியே சொல்லுகின்றனர்.

மனதால் (உள்ளம்) பின்பற்றப்படும் சத்தியம்= உண்மை
வாக்கால் (வாய்ச் சொல்) பின்பற்றப்படும் சத்தியம்= வாய்மை
உடம்பால் (மெய்) பின்பற்றப்படும் சத்தியம்=மெய்மை

தமிழ் அதிசயம் -3 உண்மையான தமிழ் வாழ்த்து
தமிழர்களின் உண்மையான தமிழ் வாழ்த்து இதுதான். பாரதியின் வாழ்க தமிழ் மொழி, சுந்தரம் பிள்ளையின் நீராரும் கடலுடுத்த ஆகிய இரண்டு பாக்களையும் விட தமிழின் சிறப்புகள் அத்தனையும் கொண்டது கவி யோகி சுத்தானந்த பாரதியாரின் காதொளிரும் குண்டலமும் பாடல். இது தமிழரின் இல்லம் தோறும் நாள்தோறும் முழங்க வேண்டிய பாடல்.
இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஐம் பெரும் காப்பியங்களில் பெயரும், தமிழுக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் திருக்குறளும், நால்வர் மற்றும் ஆழ்வார் பெயரும், சேக்கிழார் கம்பன் பெயரும் இரண்டே பாக்களில் அடங்கிவிடுவதால் ஏறத் தாழ ஆயிரம் ஆண்டுத் தமிழ் வரலாற்றை அறிகிறோம்.

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

475px-Tamil_Culture

தமிழ் அதிசயம் -4
ஒரே அம்பில் ஐந்து
ராமனுடைய ஆற்றல் எவ்வளவுதான் பெரிதானாலும் அதைச் சோதிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சுக்ரீவனும் அனுமனௌம் முடிவு செய்கின்றனர். ஏழு மரா (சால்) மரங்கள் வரிசையாக நின்ற ஒரு இடத்தைத் தேந்தெடுத்து அம்பால் துளைக்கச் செய்தனர். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் எளிதில் துளைத்துச் சென்றது. இது போல தமிழ் இலக்கியத்திலும் ஒரு செய்தி வந்துள்ளது. கடை எழு வள்ளல்களில் ஒருவர் ஓரி. வருடைய பெருமையைப் வன் பரணர் பாடுகிறார்.

ஓரியின் வில் ஆற்றல் தமிழகம் எங்கும் பரவியதால் அவன் பெயரே வல் வில் ஓரி என்று ஆயிற்று. அவன் கையிலிருந்த வில்லில் இருந்து பாய்ந்த அம்பு ஒரு யானையைத் துளத்து ஒரு புலியைத் துளைத்து, மானை மாளச் செய்து, பன்றியின் உடம்பில் பாய்ந்து இறுதியில் ஒரு உடும்பின் உடலில் சென்று தைத்து நின்றதாம்.(புறம் 152)

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல் தலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

தமிழ் அதிசயம் -5

பாரதிக்கு எத்தனை பெயர்கள், அடை மொழிகள்?
புரட்சிக் கவி பாரதிதாசனின் குரு மஹா கவி சுப்பிரமணிய பாரதியார். குருவின் மீது பாரதிதாசனுக்கு அபார பக்தி. இதோ அவர் பாரதி பற்றி எழுதிய புகழுரையைப் படியுங்கள். எத்தனை அடைமொழிகள்!

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

Leave a comment

1 Comment

  1. Nandri thamizhasiriyare!!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: