இரண்டு நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்தியவர்!

krishnamac1

Written by S Nagarajan
Article No.1510; Dated 23 December 2014.

“ யோகம் என்பது மனதின் இயக்கங்களை நிறுத்துவது தான்!”
– பதஞ்சலி முனிவர் யோகசூத்திரத்தில் கூறுவது

மனிதனின் பூரண ஆயுள் என்று கூறப்படும் நூறு வயதை எட்டியதோடு ஆயுள் முழுவதும் திடகாத்திரமாக வாழ்ந்து காட்டி அறிவியலை வியக்க வைத்த இந்திய யோகி திருமலை கிருஷ்ணமாசார்யா (தோற்றம் 18-11-1888 மறைவு 28-2-1989). இள வயதிலேயே யோகத்தை முறைப்படி கற்ற கிருஷ்ணமாசார்யா யோகத்திற்கு ஒரு புதிய பொலிவையும் மதிப்பையும் உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தார்.

இந்திய வைசிராயாக இருந்த லார்ட் இர்வின் கிருஷ்ணமாசார்யாவிடம் பெரு மதிப்பு கொண்டவர். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. சிம்லாவில் தங்கி ஆறு மாத காலம் அவருக்கு யோகப் பயிற்சிகளை கிருஷ்ணமாசார்யா கற்றுத் தர அவர் பெரிதும் குணமடைந்தார். 1919ஆம் ஆண்டு கிருஷ்ணமாசார்யாவை திபெத்திற்கு அனுப்பி அதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

1935ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த இதய நோய் நிபுணர் தெரெஸி ப்ராஸே (Therese Brosse) என்பவர் கலிபோர்னியா விஞ்ஞானி ஒருவருடன் இந்தியா வந்து கிருஷ்ணமாசார்யா மீது சோதனைகளை மேற்கொண்டார். அவர்களிடம் யோகா மூலமாக இதயத் துடிப்பை நிறுத்த முடியும், இதய ஓட்டத்தின் மின் அதிர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முற்றிலுமாக நிறுத்தவும் முடியும் என்று கிருஷ்ணமாசார்யா கூறினார். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. ஆனால் சுமார் இரு நிமிடங்கள் இதயத்தை நிறுத்திக் காண்பித்தார் அவர்கள் அயர்ந்து வியந்தனர். ஈசிஜியில் பூஜ்யம் என்ற அளவை பல வினாடிகளுக்குத் தான் பார்த்ததாக தெரெஸி ப்ராஸே தன் குறிப்பில் எழுதி வைத்தார்.

Tirumalai_Krishnamacharya

இன்னொரு ஜெர்மானிய டாக்டர் இதைப் பார்த்து விட்டு, “இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவரை இறந்து விட்டதாகவே சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மைசூரில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் யோகா மூலமாக என்னென்ன செய்யமுடியும் என்பதை நிரூபிப்பதற்காக தனது நாடியை நிறுத்திக் காண்பித்தார். ஓடுகின்ற காரை நிறுத்திக் காண்பித்தார். பற்களால் மிகவும் கனமான பொருள்களைத் தூக்கிக் காண்பித்தார். அத்தோடு பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ள கடினமான ஆசனங்களை பொது மக்கள் மத்தியில் செய்து காண்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த மைசூர் அரசர் இவரை வெகுவாக மதித்து ஆதரித்தார்.

அறுபது வயதுக்குப் பின்னர் சென்னைக்கு வந்த கிருஷ்ணமாசார்யா இறுதி வரை சென்னையிலேயே வசித்தார். பழுத்த 96ஆம் வயதில் அவர் இடுப்பு எலும்பு முறியவே, அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்து தன் யோகம் மூலமாகவே சிகிச்சை செய்து கொண்டார். நூறு வயது தாண்டியும் இறுதி வரை உணர்வுடன் இருந்தது அவரது யோகப் பயிற்சியின் வலிமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

அவரது சிகிச்சை முறையே அலாதியாக அமைந்தது. நோயாளியின் நாடித் துடிப்பும் அவரது தோலின் நிறம், அவரது மூச்சின் தரம் ஆகியவற்றை வைத்தே அவருக்கு இன்ன வியாதி என்று கூறி அதற்கான சிகிச்சையையும் தர ஆரம்பிப்பது அவரது விசேஷமான யோக வழியிலான சிகிச்சை முறையாக அமைந்தது.

பெரும் யோக நூல்கள் பலவும் அவருக்கு மனப்பாடம். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலகிற்குக் கிடைத்த அரும் கொடை என்று அவர் அடிக்கடி கூறுவார்.சூரியனின் மீது அபார பக்தி கொண்டவர் அவர். எந்த ஒரு மருந்தையும் தரும் முன்னர் சூரியனை வேண்டிய பின்னரே தருவார். சூரியனை வணங்குமாறு இடையறாது அனைவருக்கும் அவர் அறிவுரை சொல்லி வந்தார்.
Krishnamacharya_scorpion

ஆரோக்கியத்துடன் அறிவியல் வியக்கும் வகையில் ஒரு சூப்பர் மேனாக யோகா மூலம் வாழ முடியும் என்று உணர்த்திய அபூர்வ யோகியாக அவர் அமைந்தது இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

மனித ஆற்றலின் எல்லையற்ற சக்தியை கடந்த முன்னூறு ஆண்டுகளாக தொடர்ந்து அறிவியல் ஆய்ந்து வருகிறது. அதிசய மனிதர்களில் சிலரைப் பற்றி இது வரை பார்த்தோம். ஆங்காங்கே இப்படிப்பட்ட சூப்பர்மேன்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விஞ்ஞானிகளுள் அபூர்வமான ஒரு மனிதர் இரத்த வகைகளைக் கண்டுபிடித்த லாண்ட்ஸ்டெய்னர். எதற்கும் அலட்டிக்கொள்ளாத சுபாவம் கொண்டவர் அவர். 1930ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்கு பரபரப்புடன் அவரது நண்பர் பிலிப் லெவைன் வந்தார். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் வழக்கம் போல படிப்பதும் பேசுவதுமாக இருந்தனர்.”உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று அவர் பரபரப்புடன் கேட்டார், “என்ன விஷயம்?” என்று லாண்ட்ஸ்டெய்னரின் மனைவியும் மகனும் கேட்டனர். லாண்ட்ஸ்டெய்னர் நோபல் பரிசை வென்றிருக்கிறார் என்று பரபரப்புடன் கூறினார் நண்பர். லாண்ட்ஸ்டெய்னருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை அவர்கள் அதுவரை அறிந்திருக்கவே இல்லை. அன்று காலையே லாண்ட்ஸ்டெய்னருக்கு இது தெரிந்திருந்த போதிலும் அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை. அப்படி ஒரு அடக்கமான சுபாவம் மனிதருக்கு.

about_krishnamacharya

போலியோ ஆராய்ச்சி, நோய் தடுப்பு அமைப்பு வேலை செய்யும் முறை, மனிதனின் இரத்த வகைகள் ஆகியவற்றில் அவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சுமார் 14 பேர்கள் நாமினேஷன் தந்து வலியுறுத்தி வந்தனர். விஞ்ஞானிகள் வட்டாரமும் அவரது நோபல் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது. இறுதியாக 29 நீண்ட வருடங்கள் கழிந்த பிறகு, அவரது இரத்த வகைகளின் கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு கிடைத்தது.

இவரது வாழ்க்கை முழுவதும் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. அயராத கடும் உழைப்பாளியான அவர் லாபரட்டரியிலேயே தான் வாசம் செய்வார். அவரது கீழ் வேலை பார்த்த இளம் விஞ்ஞானிகள் மிகுந்த அவசரம் அவசரமாக பல முடிவுகளைத் தெரிவிப்பர். அவர்களை நோக்கி அவர்,” இது வேடிக்கையாக இல்லையா! முதுமை வயதை அடைந்த எனக்கு இன்னும் சிறிது காலமே மீதம் இருக்கும் போது நான் உங்களுக்கு பொறுமையைப் பற்றி போதிக்க வேண்டியிருக்கிறதே! உங்களுக்கு இன்னும் நீண்ட நெடிய வாழ்க்கை உள்ளதே! அவசரப்படாதீர்கள்” என்பார்.

அவரது வளர்ப்பு நாயான வால்டியை தன் டெஸ்கின் கீழே அமர வைப்பார். அசராமல் நெடு நேரம் அப்படியே உட்காரும் அது, சாப்பாடு நேரம் வந்தவுடன் குலைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்து லாண்ட்ஸ்டெய்னர், “என்ன வால்டி, விஞ்ஞானத்தை நீ மதிக்கவே மாட்டேன் என்கிறாய்” என்று செல்லமாகக் கடிந்து கொள்வார்!

Contact swami_48@yahoo.com
*****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: