கட்டுரையை எழுதியவர் :– London Swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1535; தேதி 1 January, 2015.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் நகைச் சுவை அதிகமில்லை. ஆனால் பிற்கால இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம். ஆயினும் படித்து ரசிப்பதற்கு ஏராளமான கவிதைகள் உண்டு.
சங்க இலக்கியத்தின் பதினெட்டு (மேல் கணக்கு) நூல்களில் ஒன்றான நற்றிணையில் இருந்து ஒரு பாடல்:
நற்றிணை
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்
பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் (நற்.35)
இந்தியாவுக்கு நாவலந்தீவு (ஜம்பூத்வீபம்) என்று பெயர். தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்தப் பெயர் வருகிறது. ஆகவே இது ஒரு பொருத்தமான பாடல்.
ஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதைப் பறக்கும் வண்டுகள் தம் இனத்தைச் சேர்ந்தவை என்று எண்ணி அதைச் சூழ்ந்து நின்றன. அந்தப் பக்கமாக வந்த நண்டு இவை எல்லாம் பழங்கள் என்று நினைத்து அவற்றைக் கவ்வின. உடனே வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு பறந்தன. அந்தப் பக்கம் பறந்து வந்த நாரை இதைப் பார்த்து, பெரிய சண்டை சச்சரவு போல இருக்கிறது, நாம் போய் சமரசம் செய்து வைக்கலாம் என்று போய் சமரசம் செய்தது.
இது ஒரு நல்ல காட்சி. இயற்கையில் நடக்கும் சில நகைச் சுவை மிகு கட்சிகளைக் கண்டு வியந்த அம்மூவனார் பாடிய பாடல் இது.
மேம்போக்காகப் பார்த்தால் இது இயற்கைக் காட்சி பற்றிய பாடல் என்று தோன்றும். ஆனால் இந்தக் காட்சி மூலம் ஒரு செய்தியை மறைமுகமாக உணர்த்துவது சங்கப் புலவர்களின் அகத்துறைப் பாடலில் உள்ள சிறப்பு அமசம் ஆகும். இதை உள்ளூறை உவமம் என்பர்.
இதில் புலவர் அம்மூவனார் கொடுக்கும் செய்தி:– நாவற்கனியாகிய தலைவியை, நாரையாகிய தலைவன் வந்து தடைகளை நீக்கி திருமணம் நடைபெறச் செய்தான்.
எட்டுத் தொகை நூலில் உள்ள அகநானூற்றிலும் இதே போல ஒரு நண்டுக் காதல் பாடல் வருகிறது. அதையும் ஒப்பிட்டு மகிழ்வோம். மதுரை மருதன் இளநாகனார் (380) பாடிய பாடல் இது:–
அகம் 380 நண்டுக் காதல்
அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்
தாழை வேரளை வீழ்துணைக்கு இடூம்
அலவன் காட்டி நற்பாற்று இதுவென
நினைத்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்று
நாமெதிர் கொள்ளா மாயின் தானது
துணிகுவன் போலா நாணுமிக உடையன் (அகம்380)
பொருள்:– உன் ஊர் எது என்று ஒரு பெண்ணை தலைவன் வினவினான். அவன் ஒரு காட்சியைக் காட்டினான் – ஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதை ஒரு ஆண் நண்டு இழுத்துச் சென்று தன் அன்பு மனைவிக்குக் கொடுத்தது. அதை நல்ல நண்டு என்று சொல்லிவிட்டுப் போனான். இதோ பார்! அவனது தேர் மீண்டும் வந்துவிட்டது என்று தலைவியிடம் தோழி கூறினாள்.
சுட்ட பழமும் சுடாத பழமும்!
மற்றொரு சுவையான காட்சி பிற்கால இலக்கியத்தில் வருகிறது. தமிழ் மொழி மூலம் ஆன்மீகத்தைப் பரப்பிய அவ்வையார் என்னும் புலவர் முருகன் பால் பேரன்பு கொண்டவர். திரு முருகனோ அவ்வைப் பாட்டியை தமிழ் சொற்கள் மூலமே வெல்ல எண்ணினான். முருகா….. முருகா என்று முக்கி முனகிக் கொண்டு ஒரு நாவல் பழ மரத்துக்கு அடியில் அவ்வையார் உடகார்ந்தார். மேலேயிருந்த முருகன் வேண்டுமென்றே கணைத்து தான் மரத்தின் மீது இருப்பதை உணர்த்தினான். அவனை ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் என்று எண்ணிய அவ்வையார், சிறுவா கொஞ்சம் நல்ல நாவற் பழங்களைப் போடேன் என்றார்.
முருகனோ , பாட்டி! சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்றான். தமிழ் கடலான அவ்வையாரை வியப்புக்குள்ளாக்கியது இந்தக் கேள்வி. மரம் என்ன சமையலா செய்கிறது? அடுப்பா இருக்கிறது? பழத்தைச் ‘’சுட’’ என்று நினைத்தார். அதற்குப் பதில் தெரியாமல், பையா, எனக்குக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன் என்று அவர் கெஞ்சவே முருகன் மரத்தின் கிளைகளை உலுக்கினான். பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அவ்வையார் நல்ல பழுத்த பழங்களை எடுத்து மண்ணை ஊதி ஊதித் தின்னார். என்ன பாட்டி! சுட்ட பழங்களை சாப்பிடுகிறீர்கள் என்று சொன்னபோதுதான் அவருக்குப் புரிந்தது. வாயினால் ஊதி வெப்பக் காற்றால் சுடுவதெலாம் ‘’சுட்ட பழங்கள்’’ என்று.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.