சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- தண்ணீர் கொண்டு வா — நியாயம்!
Post No 1619; Dated 3rd Febraury 2015
by ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.
चन्द्रचन्द्रिकान्यायः
candracandrika nyayah
சந்திர சந்திரிகா நியாயம்
சந்திரனும் அதன் ஒளியும் பற்றிய நியாயம் இது. நிலவின் குளிர்ந்த ஒளியையும் நிலவையும் பிரிக்கவே முடியாது என்பதைச் சொல்லும் இந்த நியாயம் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்து இருக்கும் இரு பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
जलानयनन्यायः
jalanayana nyayah
ஜலாநயன நியாயம்
நீரைக் கொண்டு வருதல் பற்றிய நியாயம் இது.
குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்று ஒருவரிடம் சொன்னால் அதைக் கொண்டுவரும் போது அதை எடுத்து வருவதற்கான குவளையும் கொண்டு வா என்பதும் அதில் அடங்கும் அல்லவா! பிரிக்க முடியாத ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட இரு விஷயங்களைக் குறிப்பிட இந்த நியாயம் பயன்படுத்தப் படுகிறது.
Painting by S. Ilayaraja from Face Book
चित्रांगनान्यायः
citrangana nyayah
சித்ராங்கனா நியாயம்
ஓவியம் ஒன்றில் சித்தரிக்கப்படும் அணங்கு பற்றிய நியாயம் இது. எவ்வளவு தான் த்த்ரூபமாக ஒரு அழகியின் படத்தை வரைந்தாலும் கூட அந்த அழகி நேரில் இருப்பது போல ஆகுமா? ஆகாது. எவ்வளவு அரிய முயற்சி எடுத்து ஓவியத்தை வரைந்தாலும் கூட நிஜத்திற்கு அது நிகராகாது. அதே போல ஒருவன் எவ்வளவு தான் சித்தரித்தாலும் பேசினாலும் ஒரு விஷயத்தின் நிஜ ரூபம் காண்பிக்கப்படும் போது அதற்கு நிகராக எதுவும் ஆகாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.
कूर्माङ्गन्यायः
kurmanga nyayah.
கூர்மாங்க நியாயம்
கூர்மம் – ஆமை அங்கம் – உறுப்பு
ஆமையின் உறுப்புகள் பற்றிய நியாயம் இது. ஆமை தனது கழுத்து மற்றும் கால்களை தேவைப்படும்போது மட்டுமே வெளியில் நீட்டும். தேவை இல்லாவிட்டாலோ அல்லது ஒரு ஆபத்து வந்தாலோ அது தன் கழுத்தையும் கால்களையும் இழுத்து தன் ஓட்டிற்குள் அடக்கிக்கொண்டு விடும். அதே போல விஷயம் தெரிந்த ஒருவன் தன் சக்தியை தேவைப்படும் போது மட்டுமே வெளியில் காட்டுவான். சரியான வாய்ப்பு வரும் போது தன் திறனைக் காட்டிப் பயன் பெறுவான். தேவையற்ற காலங்களில் அனாவசியமாக தன் திறமைகளைக் காட்டி சக்தியை விரயம் ஆக்க மாட்டான்; தம்ப்பட்டம் அடிக்க மாட்டான்.
इक्षुविकारन्यायः
iksuvikara nyayah
இக்ஷுவிகார நியாயம்
கரும்பை எப்படியெல்லாம் மாற்றுகிறோம் என்பதைக் குறிக்கும் நியாயம் இது. கரும்பை வெட்டி எடுத்து அதை முதலில் நசுக்கி அதன் சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சூடாக்கப்பட்டுப் பின்னர் மெதுவாக திட நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு அழகிய வெல்லக் கட்டிகளாக ஆக்கப்படுகிறது. படிப்படியாக ஒரு விஷயம் பக்குவப்படுத்தப்பட்டு இறுதியில் விரும்புகின்ற ஒரு வடிவமாக ஆவதைச் சுட்டிக்காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.
contact swami_48@yahoo.com
********
You must be logged in to post a comment.