Research Paper written by ச.நாகராஜன்
Research Article No.1658; Dated 18th February 2015.
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4
ச.நாகராஜன்
ராமனை தோள் வலி கூறுவதன் பயன்!
காலம் காலமாக பாரத மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையை அப்படியே சுருக்கமாக மஹாகவி கம்பன் இப்படிக் கூறுகிறான்:
“நாடிய பொருள் கை கூடும்ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய
ராமன் தோள் வலி கூறுவோர்க்கே!”
ராமன் தோள்வலியைக் கூறி மக்களிடம் உத்வேகம் ஊட்ட ஜனரஞ்சக ஊடகமான
திரைப்படம் முன் வந்தது.
பக்திப் படங்களில் ஒரு திருப்பம்!
1958-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் அரங்கங்களில் வெளியிடப்பட மனத்தைக் கொள்ளை கொண்ட இதிஹாஸத்தின் திரை வடிவைப் பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.
எம்.ஏ. வேணு தயாரிக்க கே.சோமு இயக்க திரைப்படக் கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்க ராமராக என்.டி.ராமாராவும், பரதனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், சீதையாக பத்மினியும், ராவணனாக டி.கே.பகவதியும் மண்டோதரியாக சந்தியாவும் தோன்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
திரைப்படத்தை எள்ளி நகையாடியவர்கள் கூட அது அரும் பங்கை ஆற்றவல்லது என்று ஒத்துக் கொள்ளுமளவு படம் அனைவரின் மனதிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
மஹாதேவனின் இசை; மருதகாசியின் பாடல்கள்!
ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நடிப்பால் படம் களை கட்டிய போது இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை அமைத்தவர் கே.வி.மஹாதேவன்.
பாடலை எழுதியவரோ கவிஞர் ஏ.மருதகாசி. ராமன் பாடல்களுக்கும் இவருக்கும் நிறையப் பொருத்தம் இருப்பதாகத் திரையுலகே முத்திரை குத்தி விட்ட ஒரு பெரும் கவிஞர் மருதகாசி.
படத்தின் வில்லனாக இருக்கும் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாகப் படமாக்கப்பட்டிருந்தது. ராவணனுடைய சபையில் வீணை இசைத்துப் பாடி பரிசு பெற விழையும் வெளிநாட்டுப் பாடகன் ஒருவனை ராவணன் வரவேற்றுப் பாட வைக்கும் காட்சி அது.
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ஆனந்தகான அமுத மழையே
பொழிந்து மனம் தனை உருக வழி செய்த
வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி)
மோஹன ராகத்தில் அற்புதமான பாடல், திருச்சி லோகநாதனின் குரலில், மலர இதைத் தொடர்ந்து
ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது.
காலையில் பாடும் ராகம் பூபாளம்
உச்சியில் பாடும் ராகம் சாரங்கா
மாலையில் பாடும் ராகம் வசந்தா
இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி
மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி
யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை
வெண்பா பாட சங்கராபரணம்
அகவல் இசைக்க தோடி
தாழிசைக்கு கல்யாணி
என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி (சந்தியா) வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறான்.
அற்புதமாக இப்படி ராவணனின் ஏற்றத்தைச் சித்தரிக்கக் காரணம் அப்படிப்பட்ட ஏற்றமுடையவன் தவறாக, அயலான் மனைவியை அபகரித்த பெரும் பாவத்தைச் செய்து அழிந்தான் என்பதை வலியுறுத்தவே தான்!
கம்பனின் ராவணன்
கம்பன் ராவணனை மிக அழகாகச் சித்தரிப்பான்.அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதைத் தன் காவியத்தின் லட்சிய வாசகமாக வைத்து எப்படிப்பட்ட பெரும் ராவணேஸ்வரன் தன் செய்கையால் இப்படி வீழ்ந்து பட்டான் என்பதைத் திறம்பட எடுத்துரைப்பான்.
தாரணி மௌலி பத்து.
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா
சங்கரன் கொடுத்த வாள்.
முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெரும் தவமும் கொண்டவன்! – இது தான் ராவணன்.
ஆனால் தேவியைக் அபகரித்து வந்ததைப் பாவம் என்று சொல்லி அவளை விடுவிக்க அனைவரும் ஆலோசனை கூறுகையில்,
“ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்று அகங்காரத்துடன் மொழிந்தவன் ராவணன்.’என்னையே நோக்கி நான் இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்கிறான்! தன் வீரத்தின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!
போர், பெரும் போர்!
போர் எனில் இது போர். புண்ணியத் திருப்போர். அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடந்த கடும் போர்! அது எப்படி இருந்தது?
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்!
(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)
ஆனால் அண்ணலின் கடும் அஸ்திரங்கள் அவனை வீழ்த்த, ஆயுதமின்றி இருக்கும் ராவணனை நோக்கி,
ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை;
இன்று போய் போர்க்கு நாளை வா”
(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)
என்று ராமன் கூறுகிறான். ‘பெரும் காற்றில் பறந்த பூளைப் பூக்களைப் போல உன் துணைப் படைகள் பறந்தே போயின; இன்று போய் (இன்னும் போர் புரியும் எண்ணம் இருக்குமானால்) நாளை வா; (இல்லையேல் சரணாகதி எனில் உடனே சரண் அடை”)’ என்கிறான் ராமன்!
சிவனிடம் முறையீடு!
போர்க்களக் காட்சியை அடுத்து ராவணன் மனம் சோர்ந்து அரண்மனை திரும்புகிறான்.
சிவனுக்கு சாம கானம் இசைத்தவன்; சிவ பக்தனான ராவணன் சிவனிடம் முறையிடும் காட்சி அடுத்து இடம் பெறுகிறது.
டி.கே.பகவதி வீணை இசைக்கும் காட்சியில் இன்று போய் நாளை வாராய் என்ற அற்புதமான பாடல் மலர்கிறது. பாடலைப் பாடியவர் சிதம்பரம் ஜெயராமன்.
கே.வி,மஹாதேவன் இசை அமைத்த திலங் ராகப் பாடல் இன்றளவும் ஜீவன் உள்ளதாய் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.
“இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!
மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?
எண்டிசை வென்றேனே! அன்று இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே” (பாடல்- ஏ.மருதகாசி)
அற்புதமான பாடல்; அற்புத இசை; அற்புத நடிப்பு.
அனைவரின் மனமும் தவறு செய்த பேரரசனுக்காக ஒரு கணம் உருகவே செய்கிறது, காட்சி அமைப்பால்!
மக்களை மனம் கவர்ந்த ராமர் என் டி ராமாராவ் என்றால் சீதை பத்மினி தான்; பரதன் சிவாஜி கணேசன் தான். இராவணன் டி.கே பகவதி தான். தசரதன் நாகையா தான்!
அனைவராலும் பார்க்கப்பட்ட நல்ல படமாக அமைந்த சம்பூர்ண ராமாயணம் திரைப்பட வரலாற்றில் பக்திப் படங்களில் ஒரு மைல் கல்!
-தொடரும்
குறிப்பு: படம் வெளியிடப்பட்ட ஆண்டாக 1956 என சில தளங்களும் பத்திரிகைகளும் குறிப்பிட்டாலும் கூட, 1958 என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சிவாஜிகணேசனின் அதிகாரபூர்வமான இணையதளமும் அதைச் சுட்டிக்காட்டும் விக்கிபீடியா தரும் விவரத்தின் அடிப்படையிலும் தான்!
-தொடரும்
You must be logged in to post a comment.