தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

free panchang

Written by Santanam Nagarajan

Research Article no. 1707; dated 11 March 2015
by ச.நாகராஜன்
தமிழக அரசு தை மாதத்தை புத்தாண்டு துவக்கமாக அறிவித்தவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது; பலரும் தவறைச் சுட்டிக் காட்டிய பின் இந்த அறிவிப்பு காலாவதியாகி தற்போது தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே வழக்கம் போலத் துவக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
– ச.நாகராஜன்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?

புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

tamil years

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.

இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

new-year-tamil-cards

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!

இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை ‘பிறக்க இருக்கும் புத்தாண்டு’ ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!

southindiacitiesbig

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.

ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!

வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.

270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!

இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.

இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: