Ramayana Ballet in Indonesia
Post No 1712; Date 13th March 2015
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 11
by ச.நாகராஜன்
ராம நாமம் ஒரு வேதமே!
ராமாயணம் வேத சாரம்
எழுதாக் கிளவி என தமிழ் நூல்களால் சிறப்பித்துக் கூறப்படும் வேதங்கள் பாரத தேச மக்கள் அனைவருக்குமான சொத்து. அதன் சாரமே ராமாயணம் என மகான்கள் அருளியுள்ளனர்.
वेद वेद्ये परे पुंसि जाते दशरथात्मजे ।
वेदःप्रचेतसादासीद् साक्षाद् रामायणात्मना ॥
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயணமாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
இதை மீண்டும் மீண்டும் மகான்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இப்படி அவதரித்த பெரும் அருளாளர்களின் ஒருவர் குரு ராகவேந்திரர். மந்த்ராலய மகான் என போற்றப்படும் இவரது திவ்ய சரித்திரம் ராம நாம மஹிமையை வெளிப்படுத்தும் அற்புதமான வரலாறு ஆகும்.
சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம்!
இவரது வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குத் தோன்றியது. தனது நூறாவது படமாக இதை எடுத்து அதில் ராகவேந்திரராக நடிக்க அவர் தீர்மானித்தார். படத்தின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். அவர் சற்று தயங்கிய போது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவரை ஊக்குவித்து கவிதாலயா வெளியீடாக அதை வெளியிட்டார்.ஶ்ரீராகவேந்திரா படம் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
சாதாரணமாக ஸ்டைல் மன்னர் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அனாயாசமாக நடிப்பார்; ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் விதவிதமான ஸ்டைல்களுடன் பஞ்ச் டயலாக்குகளும் அனைவரையும் பரவசப்படுத்தும்.
அவர் இப்படி ஒரு அருளாளர் வேடத்தில் சோபிக்க முடியுமா? இந்த ஐயத்தை நீக்கியதோடு, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்து உயர்தர குணசித்திர நடிகர் பட்டியலில் இடமும் பெற்றார் சூப்பர்ஸ்டார்.
படம் வசூலில் சற்று பின் தங்கினாலும், பண்பாட்டைப் பரப்பியதில் முன்னணி இடத்தைப் பிடித்தது.
படத்தில் நடித்தோர் வியாழக்கிழமை விரதம் இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பக்தியுடன் நடித்தனர். மக்கள் விரும்பிப் பார்த்த படமாக இது அமைந்தது.
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளைய ராஜா. பாடல்களை எழுதியவரோ வாலி.
Vali- Sugreeva Fight
வாலி சிறந்த ராம பக்தர். ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். வார்த்தைக் கோவைகளை இடம் பார்த்து இசை நோக்கி அமைப்பவர். அவர் எழுதிய ஒரு பாடலை ஶ்ரீ ராகவேந்திரர் கோவில் மண்டபத்தில் வீணை இசைத்துப் பாடுவதாக ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றது. ரஜினியின் நடிப்பு இந்தக் காட்சியில் மிக அருமையாக இருப்பதை அனைவரும் ரசித்தனர். ஸ்வர வரிசைகளை உச்சரித்து, நல்ல முகபாவம் காட்டி, சொற்களின் வேகத்திற்கேற்ப வீணையையும் மீட்டி, தானும் பரவசப்பட்டு பக்தர்களையும் பரவசப்படுத்தினார்.
பாடலைப் பாடியவர்கள் சீனுக்குட்டி பாகவதர், இளமையாக ராகவேந்திரர் பாடும் போது வாணி ஜெயராம், பெரியவராகப் பாடும் போது கே ஜே ஜேசுதாஸ்.
பாடல் இது தான்!
ராம நாமம் ஒரு வேதமே!
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான்
கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)
ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே, உலகு புகழ் தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறையெலாம் துதிக்கவே, தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல, விளங்கிய திருமகனாம் ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஶ்ரீ ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது (ராம நாமம் ஒரு வேதமே)
Sita in Asoka Vana
வாலி என்ற புனைப்பெயரில் தன்னை அடையாளம் காட்டிய டி.எஸ்.ரங்கராஜன் 15000 பாடல்களுக்கு மேல் எழுதிய அரும் கவிஞர். ராமகாதையை எளிய நடையில் அவதாரபுருஷன் என்ற தலைப்பில் எழுதி வந்த இவரது தொடரை ஆனந்தவிகடனில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டினர்.
அவர், ‘வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா’ என்ற கருத்தை வேதமே வால்மீகி முனிவரால் ராமாயணமாக வெளிப்பட்டது என்பதை உள்ளடக்கி ராம நாமமே ஒரு வேதமே என்று இயற்றி மகிழ்ந்தார்; அனைவரையும் மகிழ்வித்தார்.
சிறியன சிந்தியாதான்!
கம்பன் வாலியை சிறியன சிந்தியாதான் (தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – வாலி வதைப் படலம் பாடல் 119) என்று போற்றுவான். மிக உயர்ந்த சிந்தனைகளிலேயே தோய்ந்து ஊறி இருக்கும் அவன் ராமன் தன்னை மறைந்து நின்று கொன்றான் என்று சிறிய மனதுடன் சிந்தியாதவன்; ஆனால் கம்பன் பிறிதோரிடத்தில் பின்னால் எடுத்துக் காட்டுவது போல ‘முந்தைய கேள்விச் செல்வத்தால்’ ஊறிய அவனுக்கு ராம நாம மஹிமை நன்கு தெரியும்!
அவன் தன் மார்பில் ஊடுருவிய அம்பு யாருடையது என்று பார்க்கும் போது அதில் பொறித்திருக்கும் ராம நாமத்தைக் காண்கிறான். அதை கம்பன் சித்தரிக்கும் பாடல் இது:-
மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராமனென்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்
(கம்ப ராமாயணம் –கிஷ்கிந்தா காண்டம், வாலி வதைப்படலம் பாடல் 71)
ராம நாம தாரக மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும் இந்தப் பாடலின் சிறப்பை யாராலும் முழுவதுமாகச் சொல்லி விட முடியாது.
Ramayana sculptures in Temples
அந்த வாலியும் இந்த வாலியும்!
உலகுக்கு எல்லாம் மூல மந்திரம்
தன்னை தன்னை அண்டியவர்க்கு தருபவன்; வைகுண்ட பதம் அருள்பவன்
எழுமை நோய்க்கு மருந்து
இதுவே ராம நாமம்
இப்படி அனைத்து மஹிமைகளையும் கொண்ட ராம நாமம் வேத சாரம்!
இதை சிறியன சிந்தியாத வாலியின் மூலம் தெரிந்து கொள்ளும் போதே பெரியன சிந்திக்கும் கவிஞர் வாலி ராம நாமம் ஒரு வேதமே என்று கூறி இருப்பது எவ்வளவு பொருத்தமாக அமைகிறது.
இரண்டு வாலிகளும் ஒரே கருத்தையே மனதில் ஊன்றி வைத்துள்ளதைத் தான் இது காட்டுகிறதோ?!
****************
You must be logged in to post a comment.