கும்பமேளா, பிரயாகை படம்
Written by London swaminathan
Article no. 1715; dated 14 March 2015
Up loaded at 12-10 London time
மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் புத்தகத்தில் அன்னதானத்தின் பெருமையை ஒரு அழகான கதை மூலம் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா விளக்கியதை முன்னர் கண்டோம். இதோ அவர் சொல்லும் இன்னும் ஒரு சுவையான கதை (சொற்கள் என்னுடையவை. ஆகவே பிழை இருப்பின் மன்னிக்க):
பார்வதியும் பரமசிவனும் உலகைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். கங்கை நதிக் கரையில் ஒரே கூட்டம். கோடிக் கணக்கான மக்கள் கும்பமேளா விழாவை ஒட்டி கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். பார்வதிக்கு ஒரே வியப்பு. ஆனால் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அருகிலேயே பிறவா யாக்கைப் பெரியோன், நீல மணி மிடற்று முக்கண்ணன் இருந்ததால் தொடுத்தாள் கேள்விக் கணைகளை,
“நாதா! கங்கையில் குளித்தால் பாபங்கள் எல்லாம் அடியோடு போய்விடும் என்பது உண்மையா?அப்படி உண்மையானால் கோடிக் கணக்கான மக்கள் இப்படிக் குளித்து பாபங்களைப் போக்கிவிட்டால் எல்லோரும் சொர்க்கத்துக்ப் போய்விடுவார்களே! நரகம் காலியாகி விடாதா?”
படம்: கங்கைக் கரையில் சிவன்
சிவன் சிரித்துக் கொண்டே சொன்னார்,
“அன்பே! என் ஆருயிரே! அப்படியெல்லாம் கவலை கொள்ளாதே. சுவர்க்க லோகம் என்றும் நிறைந்ததாக—நிரம்பியதாக—(கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் கூட படிக்க முடியாது. இதை நிரூபிக்க வேண்டுமா?” என்றார்.
ஆமாம், சுவாமி! எனக்கு ப்ரூப் (ஆதாரம்) வேண்டும் என்றாள் உலகாளும் அம்மை.
உடனே சிவன் சொன்னார்,” நான் என்னதான் சொன்னாலும் உனக்கு நம்பிக்கை வராது. சந்தேகம் தெளியாது. ஆகையால் ஒன்று செய். நீ போய் பூலோகத்தில் இரு. நான் ஒரு பயங்கர குஷ்ட ரோகி போல வருவேன். நீ என்னை கணவன் போல பின் தொடர்ந்து வா. நான் கீழே விழுந்து உயிர் விடுகிறேன். நீ கதறி அழுது உதவி கோரு. யார் உதவி செய்ய வந்தாலும் — பாவம் கொஞ்சம்கூட இல்லாத ஆட்களே சடலத்தைத் தொடலாம் — என்று கூறு.
அவர்கள் திட்டப்படியே சிவன் குஷ்ட ரோகியா கவும்,பார்வதி பேரழகியாகவும் சென்றனர். எல்லோரும் பார்க்கையில் அவர்கள் முன்னிலையில் சிவன் திடீரென்று கீழே விழுந்தார்; மூர்ச்சையானார். பார்வதி அழுது புரண்டாள். எல்லோரும் உதவிக்கு வந்தனர். ஆனால் பார்வதியோ பாவமே இல்லாதவர் மட்டும் சடலத்தைத் தொடலாம், மற்றவர்கள் தொடாமல் விலகிப் போங்கள் என்றார். கூட்டம் மெதுவாக நழுவிட்டது.
மஹா கும்ப மேளா படங்கள்
அப்போது ஒருவன் மட்டும் வேகமாக முன்னால் வந்தான். அம்மையே நான் இந்த சடலத்தை கங்கையில் எறிந்து அடக்கம் செய்கிறேன் என்றான். அவனைப் பார்த்தாலே படிப்பறிவும் நாகரீகமும் இல்லாதவன் என்று தெரிந்தது. பார்வதியோ எல்லோருக்கும் இட்ட நிபந்தனையையே அவனுக்கும் இட்டாள். அதைக் கேட்ட அவன் அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டே கங்கையில் பாய்ந்தான், குளித்தான், வெளியே வந்தான். அம்மையே நான் சிறிதும் பாபமற்றவன் என்று சொல்லி சடலத்தின் அருகில் வந்தான். சிவனும் பார்வதியும் மறைந்தனர்!!
பல கோடிப் பேர்களில் ஒருவனுக்குத் தான் “கங்கா ஸ்நானம் பாபத்தைப் போக்கும் ” என்ற நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் கங்கையில் குளிப்பதை ஒரு சடங்கு போலச் செய்தனர். அவர்களிடம் முழு நம்பிகை இல்லை. இப்பொழுது புரிந்தது பார்வதிக்கு! சொர்க்கம் என்றும் நிரம்பாது; நரகம் என்றும் குறைவு படாது!!
வளர்க சுவர்கம்!! தேய்க நரகம்!!
கோடிப் பேர் புனித நீராடும் கங்கை நதி
You must be logged in to post a comment.