Written by London swaminathan
Article no. 1725; dated 17 March 2015
Up loaded at 9-12 London time
சுதந்திராநந்தர் என்று தன்னை அடைப்புக்குறிக்குள் பெயர் போட்டுக் கொள்ளும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ர் சுபரமண்ய சிவா பல சுவையான கதைகளை அவரது நூலில் தருகிறார். இதோ மேலும் ஒரு கதை (கதையின் கரு அவருடையது. சொற்கள் என்னுடையவை. பிழை இருப்பின் பொறுத்தருள்க)
ஒரு ஊரில் ஒரு போலி சாமியார் இருந்தார். சரியான ஆஷாடபூதி- வேடதாரி. நெற்றியில் பட்டை—கழுத்தில் கொட்டை-தலையில் மொட்டை. அதாவது விபூதி,ருத்திராட்சம், பாத குறடு—சகிதம் துறவி போலக் காட்சி தந்தார்.
கோவிலில் அல்லும் பகலும் குடியிருந்து, இறைவா இன்னும் உன்னிடம் அழைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாயே என்று கதறல். கோவிலில் எல்லோரும் போகும்வரை இப்படிப் புலம்பிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குச் செல்வார்.
எதற்காக இப்படிச் செய்தார்? இந்த சந்யாசி வேடத்தால் அவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு, ராஜ உபசாரம். ஆனால் கோவில் அர்ச்சகர் இந்த சாமியாரிம் போலித்தனத்தை நன்கு அறிவார். ஆயினும் ஊரே புகழும் ஒருவரைக் குறை கூறினால் “ஐயருக்குப் பொறாமை” — என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயந்தார்.
திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. திட்டம் தீட்டி செயலில் இறங்கினார். ஒரு நாள் கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். எல்லோரும் போய்விட்டனர். அர்ச்சகர் ஒவ்வொரு விளக்காக அணைத்துவிட்டு சுவாமியிடம் மட்டும் விளக்கு இருக்கும்படி பார்த்துக் கொண்டார். மற்ற இடமெல்லாம் கும்மிருட்டு. போலி சாமியார் வழக்கம்போல தன் வசனத்தை ஒப்புவித்தார். “இறைவா, இன்னும் உன் கண்கள் திறக்கவில்லையா? என்று எனக்கு முக்தி கிட்டும்? என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ள மாட்டாயா?”
அர்ச்சகர் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு திடீரெனக் குரல் கொடுத்தார்- “ பக்தா உன் பக்திக்கு மெச்சினோம். உமக்கு முக்தி கிட்டும் — இன்றே கிட்டும் — இப்பொழுதே கிட்டும் என்றார். போலி சாமியார் திடுக்கிட்டுப் போனார்.
அந்த நேரத்தில் சிலைக்கு இரு புறமும் இரு கைகள் நீண்டு, வா, வா! என் அருகே வா! இப்பொழுதே உன்னை மோட்ச லோகத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். இதைக் கேட்டதுதான் தாமதம். போலி சாமியாருக்கு ஒரே உதறல். கோவிலில் இருந்து வெளியேறி, வீட்டை நோக்கி ஓடினார். அர்ச்சகரும் விடவில்லை. சுவாமியின் வஸ்திரங்களைத் (உடைகள்) தலையில் போட்டுக் கொண்டு போலி சாமியாரின் பின்னாலேயே ஓடினார். இப்பொழுதே மோட்சத்துக்கு அழைத்துச் செல்வேன், அஞ்சாதே என்று பெரிய குரல்!!
போலி சாமியார் தலை தெறிக்க ஓடி வீட்டுக் கதவை ‘தடால்’ என்று தட்ட அவன் மனைவி அதைப் ‘படால்’ என்று திறந்தார். இவர் ‘மடால்’ என்று உள்ளே விழுந்து சீக்கிரம் கதவைத் தாளிடு என்று கத்தினார். அவர் மனைவி யாரோ திருடன் துரத்தி வந்தான் என்று எண்ணி கதவைத் தாளிட்டார். எனக்கு மோட்சம் தருவதாக – இப்பொழுதே தருவதாகச் — சொல்லி கோவிலில் இருந்த கடவுள் தன்னை விரட்டிக் கொண்டு வந்ததாகவும் இனிமேல் அக்கோவிலின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்க மாட்டேன் என்றும் கொட்டித் தீர்த்தார். அவர் மனைவிக்கு, இவர் ஏதோ காய்ச்சலில் உளறுகிறார் என்று தோன்றியது.
இறைவன் நாளைக்கே மோட்சம் தருவதாகச் சொன்னால் பெரிய ஆன்மீகவாதிகள் கூட ‘வாய்தா’ கேட்பர். உடனே உலகை விட்டுப் பிரிய மனம் வாரா. அப்படி இருக்கையில் போலி சாமியார்கள் – ஆஷாடபூதிகள் – ருத்திராட்சப் பூனைகள் எம்மாத்திரம்?
ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம், ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்:– பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்
You must be logged in to post a comment.