Research Article No.1742; Date:- 23 March, 2015
Written by S Nagarajan
Uploaded at London time 7-56 am
Roasted Sunflower seeds
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
25. வறுத்த விதை முளைக்குமா?
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
दग्धबीजन्यायः
dagdhabaja nyayah
தக்தபீஜ நியாயம்
வறுத்த விதை பற்றிய நியாயம் இது.
விதைகளை வறுத்து விட்டால் அவை நிலத்தில் விதைக்கப்பட்டாலும் முளைக்க மாட்டா.
பெரிய ஞானிகள் தம் கர்மாக்களைக் கழித்து விட்ட பின்னர் அவர்கள் மீண்டும் பிறக்கத் தேவையே இல்லை. வறுத்த விதை போல அவர்கள் பூமி மீது இருந்தாலும் நடந்தாலும் அவர்களைக் கர்மங்கள் கட்டுப் படுத்தாது. ஞானம் அவர்களின் அஞ்ஞானத்தைச் சுட்டெரித்து விட்டதால் அவர்கள் ஜீவமுக்தர்கள் ஆகி விடுவர்.
இதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
Old Type Fuel Oven (Virahu Aduppu in Tamil)
दग्धेन्धनवह्निन्यायः
dagdhendhanavahni nyayah
தக்தேந்தனவஹ்னி நியாயம்
எரிபொருளையும் தீயையும் பற்றிய நியாயம் இது.
எரி பொருளாக இருக்கும் விறகு, மண்ணெண்ணெய் ,எரிவாயு எதுவாக இருந்தாலும் சரி, அது முற்றிலுமாக தீர்ந்து விட்டால் தீயும் தானே அணைந்து விடும்.
எடுத்த வேலையை முடிக்காமல் இலட்சியவாதியான ஒருவன் ஓயமாட்டான். எரிபொருளாக இருந்து தன் வேலையை முடித்த பின்னரே அவன் அணைந்த தீ போல ஆவான். ஓய்வெடுப்பான்!
Beating a snake with a stick
दण्डसर्पमारणन्यायः
dandasarpamarana nyayah
தண்டசர்ப்பமாரண நியாயம்
தண்டம் – தடி; கம்பு; சர்ப்பம் – பாம்பு மாரணம் – கொல்லுதல்
தடியும் பாம்பும் பற்றிய நியாயம் இது.
தடியை எடுத்து ஒரு பாம்பை அடிக்கும் போது பாம்பும் சாக வேண்டும், அதே சமயம் தடியும் உடைந்து விடக் கூடாது. புத்திசாலியான ஒருவன் ஒரு வேலையை முடிக்கும் போது அவன் செய்வதற்கு எடுத்த காரியமும் நன்கு முடிய வேண்டும், அதே சமயம் தனது கருவிக்கோ அல்லது மற்ற யாருக்குமோ எந்த விதமான ஆபத்தோ அல்லது ஊறோ ஏற்பட்டு விடக் கூடாது. செய்யும் வேலையைத் திறம்படச் செய் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
King and a commoner
दुर्बलैरपि वध्यन्ते पुरुषाः पार्थिवाश्रितैः
durbalairapi vadhyante purusah parthivasritaih
துர்பலைரபி வத்யந்தே புருஷா: பார்திவாஷ்ரிதை: நியாயம்
சமான்யனான ஒருவன் அரசனுக்கு அருகில் இருந்தால் அவன் அந்தஸ்தே தனி தான். தற்காலத்தைக் கூட எடுத்துக் கொண்டால் பாஸ் (Boss) அல்லது உயர் அதிகாரி அருகே இருக்கும் ஒருவன் பலமுள்ளவனாக இருக்கிறான். அவன் சொல்வதை அனைவரும் கேட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவன் சாதாரணமானவனாக இருந்தாலும் இருக்கும் இடத்தால் ஏற்படும் மஹிமை அது.
இதைச் சுட்டிக்காட்டும் நியாயம்.
देवदत्तहन्तृहतन्यायः
devadattahantrhata nyayah
தேவதத்த ஹந்த்ருஹத நியாயம்
தேவதத்தனைக் கொன்றவன் கொல்லப்பட்டான் என்னும் நியாயம் இது.
தேவதத்தன் என்பவனை ஒருவன் கொன்று விட்டான். ஆனால் அந்தக் கொலையாளியை இன்னொருவன் கொன்று விட்டான் என்ற கதையைச் சொல்லும் நியாயம் இது.
US President J F Kennedy was shot dead by Oswald. And Oswald was shot dead by Jack Ruby(1963)
இது சுட்டிக் காட்டுவது எதை? யாருமே பலசாலி இல்லை என்பதைத் தான்! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி! பலசாலியான ஒருவனுக்கு மேலே இன்னொரு பலசாலியும் இருப்பான்! இந்த நியாயம் கொலையாளி கொலை செய்யப்பட்டாலும் அவனால் கொலையுண்டவன் மீண்டும் எழுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
************
You must be logged in to post a comment.