பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: