Research Article written by London swaminathan
Post No. 1774; Date 4th April 2015
Uploaded from London at 13-10 (லண்டன் நேரம்)
கல்கி புராணம்
சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கு.அனந்தாசாரியார் – 1903 — விலை12 அணா
சென்ற வாரம் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று கல்கி புராணத்தைப் படித்தேன். அதிலுள்ள சில சுவையான விஷயங்களைத் தருகிறேன். கூடிய மட்டிலும் கு.அனந்தாசாரியார் 1903-ல் பயன்படுத்திய சொற்களை அப்படியே தருகிறேன். குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற கட்டுரையில் சொன்ன பூலிங்கப் பறவையே என்பதும் தெரிந்தது. இது பற்றி வைஷ்ணவப் பெரியார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் (கி.பி 1268—1370) எழுதிய தயா சதகத்தில் வரும் சுவையான விஷயத்தையும் கீழே படியுங்கள்:–
ஓ, சூத முனிவரே! மனிதர்கள் முப்பதடிப் பிரமாணமுள்ளவர்கள்,கலி யுகத்தில் முடிவில் மூன்றங்குலப் பிரமாணமாகி விடுவர்.
கலியுகத்தில், ஜனங்கள் அன்ன விக்ரயம் (விற்பது) செய்வார்கள்; அந்தணர்கள் மந்திரங்களை விற்பார்கள்; ஸ்த்ரீகள் பதிவ்ரதா தர்மத்தை (கற்பை) விற்பார்கள்.
பிராமணர்கள், வேதங்களைக் கீழ்ப்பட்ட ஜாதியினருக்குச் சொல்லிப் பிழைப்பர். பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர், பால் விற்பார்கள்; வைஸ்யர்கள் எல்லோரும் மாமிசம் விற்பார்கள்
மானுக்குதவி செய்யும் பறவை
கலியுகத்தில் பிராமணாதி மூன்று வர்கத்தினர் ஸ்வதர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும், மாதர்களைப் புணர்வதிலும் ஆசை கொள்வர். சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள்.
ஸ்த்ரீகள் (பெண்கள்) எல்லோரும் எட்டாவது வருஷத்தில் புத்திரர்களைப் பிரசவிப்பார்கள்- நியாயாநியாயாயமில்லா மல் (நியாயம்+ அநியாயம்) புருஷர்களைப் புணருவார்கள்.
மாதர்கள் யாவரும் பன்றிபோல் பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள். இரு கரத்தாலும் சிரத்தை (தலையை) சொறியப்போகிறார்கள்.
ஓ, புத்திமானே, மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும், உறங்குதலும் செய்யப்போகிறார்கள்
பூமிகளெல்லாம் சுரமில்லாமல் சுவல்பப் பலனாய் பலிக்கப்போகிறது. கொடிகள் யாவும் செழிப்பாக வளர மாட்டா.
கல்கி அவதாரம்
விவாக ரத்து அதிகரிக்கும்!
ஜனங்களைப் பிணிகள் பீடிக்கப் போகிறது. விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததியுண்டு பண்ணுவர். சுமங்கலி ஸ்த்ரீக்கள் புருஷனோடு சண்டையிட்டு விதவைகளைப் போல் ஆவர் (டைவர்ஸ்- விவாக ரத்து அதிகரிக்கும் என்று சொல்வதாக நான் அர்த்தம் செய்கிறேன். பம்பாய், கலகத்தா, டில்லி, சென்னை ஒவ்வொரு நகரத்திலும் ஆண்டுக்கு 8000 விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த நம் முன்னோர்களை எண்ணி வியக்கிறேன்)
கலியுகத்தில் கொடையாளிகள், தரித்திரர்களாகவும் கிருபணன், தனிகனாகவும், பாபி, தீர்க்கயுஸ் உடையவனாகவும், நல்லவன் அல்பாயுஸ் உள்ளவனாகவும், அல்ப ஜாதிகள் மஹாராஜாவாகவும், உத்தம குணத்தினர் அவர்களுக்குப் பணிவாகவும் இருப்பர்
பெருங்காற்று- சுவல்ப மழை- க்ஷாமம் உண்டாகும்
எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவர்- ஒருவரும் தத்துவத்தை அறியார். அந்தணர்கள் வெகுவாக வாதம் பண்ணுவர். வேஷத்தில் மட்டும் அந்தணர்களாக இருப்பர்.
கலியுகத்தில் மனிதர்கள் பொய்யை சத்தியமாகவும், மெய்யை அசத்தியமாகவும் செய்வர். வேத மார்க்க கர்மங்களை தூஷிப்பர் – நீதியை அனுசரியார்.
நீர் யானைக்குதவும் பறவைகள்
குலிங்கப் பறவைகளும் குருமார்களும்
கலியுகத்தில் சில குருமார்கள், நித்திய கர்மங்களை இழந்து இதரர்களுக்கு மாத்திரம் ஞானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிக்கள் போல் சஞ்சரிப்பார்கள்.
எனது கருத்து
குலிங்க பறவை பற்றிய ஒன்றிரண்டு கதைகள் மஹாபரதத்தில் வருகின்றன. ஆனால் அவை மேற்கூறிய குருமார்கள் விஷயத்தில் பொருந்தாததால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய தயா சதக மேற்கோளைப் பார்த்தேன். மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இதோ அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும்:–
மாசாஹசஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய
பத்யத்ஸு தேஷு விததாமி அதி சாஹசானி
பத்மா சஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்
கோரம் குலிங்கம் சகுநே: இவ சேஷ்டிதம் மே (ஸ்லோகம் 94)
பொருள் விளக்கம்:
தயாதேவியே! சாஹசச் செயல்களைச் செய்யாதே என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு – உத்தமன் போல வேஷம் போட்டு — அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சாஹசச் செயல்களில் இறங்குகிறேன். குலிங்கப் பறவை போல நான் செய்யும் சாஹசச் செயல்களை நீ கண்டிக்காமல் இருப்பது ஏன்? (என்னை சரியான பாதையில் செலுத்துவது தாய் போன்ற உனது கடமை இல்லையா?)
குலிங்கம் என்னும் பறவை கத்துவது — மா ஸாஹஸம் குரு—
சாகசம் செய்யாதே – என்று சொல்லுவது போல இருக்குமாம். இப்படிச் சொல்லிக்கொண்டே, கொட்டாவி விடும் சிங்கத்தின் வாயில் புகுந்து அதன் பற்களில் சிக்கியுள்ள மாமிசத் துண்டுகளை இழுக்குமாம். சிங்கம் வாயை மூடினால் அதற்கு என்ன நேரிடும்?
(வேதாந்த தேசிகர் மிகப் பெரிய மஹான். பணிவின் காரணமாகவும் நம்மைப் போன்றோருக்கு அறிவுறுத்தவும் தன்னைக் குலிங்க பறவைக்கு ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தன்னை நூற்றுக்கும் மேலான பாடல்களில் நாயுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பதை நினைவிற் கொள்ளுதல் பொருத்தம்)
இரு வகை பிராணிகள் இடையே நிலவும் ஒத்துழைப்பை உயிரியல் விஞ்ஞானிகள் ‘’சிம்பியாஸிஸ்’’ என்று அழைப்பர். முதலையின் வாயில் சிக்கும் மாமிசத் துண்டுகளை எடுத்து சுத்தம் செய்யும் ப்ளோவர் பறவைகளின் வரவுக்காக முதலைகள் வாயைத் திறந்துகொண்டு காத்திருக்கும். அவைகளுக்கு ஒரு தீங்கும் செய்யா. ஆனால் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடையே இப்படி நடப்பதாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியக் காடுகளில் இத்தகைய செயல்கலைக் கண்ட நம் முன்னோர்கள் தக்க இடத்தில் அதை உவமையாகப் பயன்படுத்துவது சிறப்புடைத்து.
ஏற்கனவே ஆதி சங்கரர் ஒரு நாலு வரிப் பாட்டிலேயே நான்கு பறவைகளை உவமையாக்கியது பற்றியும் தத்தாத்ரேயர் இருபதுக்கும் மேலான பறவை, விலங்குகள், பூச்சிகளிடமிருந்து தான் கற்ற போதனைகளை பாகவத புராணத்தில் சொல்லியிருப்பதையும், மரத்தின் மீது ஏறும் அதிசய அங்கோல மர விதைகள் பற்றி ஆதி சங்கரர் பாடியிருப்பது பற்றியும் பல கட்டுரைகளில் தந்துள்ளேன். படித்து இன்புறுக.
இனி, கல்கி புராணத்தில், மேலும் உள்ள விஷயங்களைக் காண்போம்:–
கலியுகத்தில் பிராமணாதி வர்ணத்தினர் நித்திய கர்மங்களை இழந்து, அதர்மங்களைச் செய்து சாராயம், கள், மாம்ஸம் முதலான தாமஸ பதார்த்தங்களைப் புசித்து உலகத்து ஜனங்கள் (அவர்களை) நிந்திக்கப் போகிறார்கள்.
கலியுகத்தில் வித்தியா குருவென்றும், மந்திரோபதேசக் குருவென்றும், சிஷ்யன் என்கிற பேதமுமில்லாமல் நாம வாசகத்தால் மட்டும் பேதத்தை அடைந்து ஆசார்யப் பத்தினியை சீஷனும், சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.
கலியுகத்தில் எவன் தனிகனோ (பணக்காரன்) அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்). தரித்ரனானவன் துஷ் குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்).சிலவிடங்களில் ஜாதி பேதமில்லாமல் இருக்கும்.
கலியில் மிருகங்கள் முதலிய ஜந்துக்களின் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியுக முடிவில் மனுஷ்ய யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாகப் போகின்றது.
யோகிகளுக்குள் சிறந்தவரான சூத புராணிகன், கலியுக தர்மம் யாவையும் ரிஷிகளுள் சிறந்தவரான வியாச மாமுனியிடத்தில் கேட்டு, பரம ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் கிருத யுக தர்மத்தைக் கேட்டார்.
(இதற்குப் பின்னர் கிருதயுக தர்மம் பற்றி வருகிறது. இது 1903 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பது எனது விளக்கங்கள்).
You must be logged in to post a comment.