பாணினி மாஜிக்!! Panini Magic!!

panini better

Compiled by London swaminathan

Post No. 1783; Date 7th April 2015

Uploaded from London at   8-58 am

பாணினியை ஏன் உலகமே புகழ்கிறது? அவர் அப்படி என்ன செய்தார்?

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரில் பிறந்தார். சம்ஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தார். அவருக்கு முன்னரும் அந்த மொழி இருந்தது. அவரே நிறைய இலக்கண வித்தகர்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார். ஆனால் இவர் செய்த புதுமை ஒரு கன கச்சிதமான இலக்கணம் எழுதியது ஆகும். அவர் செய்த ஒவ்வொரு புதுமையையும் விளக்க அல்லது விளங்கிக் கொள்ள நமக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

பின்னர் எப்படி அவர் பெருமையை உணர்வது?

பாரதியார் பாட்டில் படிக்கிறோம்:

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்…..

 

உலகில் யாரும் நம்பமுடியாத திறமையுடன் இலக்கணம் செய்தார் என்கிறார் நம்முடைய மதிப்பைப் பெற்ற பாரதியார்.அவரோ காசியில் சம்ஸ்கிருதம் கற்றவர்.

அது சரி, ஒரு எடுத்துக்காட்டாவது காட்ட முடியுமா?

பாணினி எழுதிய புத்தகத்தின் பெயர் அஷ்டாத்யாயி (அஷ்ட அத்யாயங்கள் = எட்டு பகுதிகள்). அதில் முதலாவது மஹேஸ்வர சூத்திரம் என்று இருக்கிறது– சிலர் இதை பாணினி புத்தகத்தில் இருந்து வேறாகவும் கருதுவர். ஆனால் 2700 ஆண்டுகளாக வழங்கும் கதை என்ன வென்றால், சிவபெருமான் உடுக்கை அடித்து ஆடியபோது அந்த ஒலியில் இருந்து எழுந்த 14 சூத்திரங்களே இவை. இதை அவர் தனது புத்தகத்தில் பயன்படுத்தியதில் இருந்து இதற்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தெள்ளிதின் விளங்கும்.

panini fdc

சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:

14 சூத்திரங்கள்:

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதஸ்

க ப ச ட த சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.

இவைதான் அவருடைய உடுக்கையில் இருந்து எழுந்த ஒலிகள்.

சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இதில் உள. ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியிலும் உள்ள எழுத்து புள்ளிவைத்த மெய் எழுத்து. அது அடையாளத்துக்காக உள்ளது. விதிகளைப் பயன்படுத்தும்போது, அதைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது – அதாவது அது உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.

ஒரு எடுத்துக் காட்டு:—

உயிர் எழுத்துக்கள் சம்பந்தமான ஒரு விதியைச் சொல்ல வேண்டுமானால் “அச்” என்று சொன்னால் போதும். மேலே உள்ள சூத்திரத்தில் “அ” என்பது முதல் எழுத்து; பின்னர். நாலாவது சூத்திரத்தில் “ச்” என்று முடிகிறது. அ – முதல் ச் – வரையுள்ள எழுத்துக்கள் எல்லாம் உயிர் எழுத்துக்கள். முன்னர் சொன்னது போல ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை ( ச் ) மறந்துவிடுங்கள்.

விடை:–

அ இ உ ((ண்))

ருலு  ((க்))

ஏ ஓ ((ங்))

ஐ ஔ ((ச்)),

உயிர் எழுத்துக்கள் (Vowels) அ, இ, உ, ரு, லு, ஏ, ஓ, ஐ, ஔ

Panini,_

இன்னொரு விதியும் இதில் அடக்கம். அது என்ன?

ஒரு குறில் எழுத்தைச் சொன்னால் அது தொடர்பான நெடிலும் அடக்கம். அ என்றால் ஆ, இ என்றால் ஈ, உ என்றால் ஊ என்று சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

அட, இது என்ன பிரமாதம்? “அச்” என்று சொல்லுவதற்கு பதில் தமிழில் உள்ளது போல “உயிர் எழுத்து” என்று சொல்லி விடலாமே. இதற்காகவா, பாணினியைப் புகழ்கிறார்கள்? என்று கேட்கலாம்.

இதே போல “ஹல்: என்றால் அது மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். ஐந்தாவது சூத்திரத்தில் ஹ என்னும் எழுத்தில் சூத்திரம் துவங்கி 14-ஆவது சூத்திரத்தில் “ல்” என்ற எழுத்தில் முடிகிறது. அது வரை உள்ள எழுத்துக்கள் எல்லாம் மெய் எழுத்துக்கள் (Consonants) — (ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை மறந்துவிடுங்கள்).

அட, இது என்ன பிரமாதம், “ஹல்” என்று சொல்லுவதற்குப் பதிலாக ‘மெய் எழுத்துக்கள்’ என்று சொன்னால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடும்? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்பதற்கு மட்டும் இன்றி, எந்த இரண்டு எழுத்துக்கள் இடையேயும் உள்ள எழுத்துக்களை இப்படி எடுத்துக் கொண்டு விதி செய்யலாம். சம்ஸ்கிருதத்தில் சந்தி விதிகளை விளக்க இப்படிப் பல சூத்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த 14 சூத்திரங்களை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம் என்று அறிஞர்கள் சொல்லுவர்!  இதனால் இதை பிரத்தியாஹார சூத்திரம் என்றும் சொல்லுவர். பிரத்தியாஹாரம் என்றால் முன்னர் குறிப்பிட்ட “அச்”, “ஹல்” போன்ற கூட்டு எழுத்துக்கள் (காம்பினேஷன்) ஆகும். சிவ அல்லது மாஹேஸ்வர சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி 44 பிரத்தியாஹார சூத்திரங்களை பாணினி பயன்படுத்தியுள்ளார்.

இப்படி அவர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுபோன்ற புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினால் இவ்வளவு பாராட்டி இருக்க மாட்டார்கள். சம்ஸ்கிருதம் என்ற மொழியே, முழுக்க முழுக்க இப்படி சில விஞ்ஞானபூர்வ விதிகளின் மேல் அமைந்துளது. அதாவது வேர்ச் சொற்களைத் தெரிந்து கொண்டு விட்டால், அகராதியே இல்லாமல் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் புதிய சொற்களை உண்டாக்கலாம். ஒரு வேர்ச் சொல்லுக்கு முன் ஒரு முன்னொட்டு (prefix) அல்லது வேர்ச் சொல்லுக்குப் பின்னர் ஒரு பின் ஒட்டைச் (Suffix) சேர்த்துக் கொண்டால் அர்த்தம் மாறிக்கொண்டே போகும்.

ஆங்கிலத்தில் வண்ணங்களைக் (Colours)  குறிக்க ஏராளமான சொற்கள் உண்டு. பெயிண்ட் விற்கும் கடைக்குப் போய் கேடலாக்- கை (Catalogue) வாங்கிப் பார்த்தால் இவ்வளவு வகையான கலர்கள் உண்டா என்று வியப்பீர்கள். உண்மையில் உலகில் மூன்றே வர்ணங்கள்தான் உண்டு. சிவப்பு, நீலம், மஞ்சள் — இவைகளை வெவ்வேறு விகிதத்தில் கலக்க கலக்கப் புதுப் புது வர்ணங்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஆங்கிலப் பெயர். (Different shades of colours). இதே போல சம்ஸ்கிருதத்தில் ஒரு வேர்ச் சொல்லை எடுத்துக் கொண்டு முன்னொட்டு, பின்னொட்டுகளைச் சேர்த்து அர்த்தத்தை மாற்றிக் கொண்டே போகலாம். உலகில் சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய மொழிகளில் இதைக் காணலாம். ஆயினும் சம்ஸ்கிருதத்தில் இன்றும் அதற்கான இலக்கணம் உள்ளது. ஒரு நூறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வரை சம்ஸ்கிருதத்தில் துதிகள் எழுதப்பட்டுள்ளன. அவைகளும் இதே விதியைத் தான் பயன்படுத்தின.

பாணினியைப் பயிலப் பயில, சம்ஸ்கிருத அமைப்பைப் பார்க்கப் பார்க்க, வியப்பு மேலே மேலே வந்து கொண்டே இருக்கும். தமிழர்களாகிய நாம் சந்தோஷப் படவேண்டிய விஷயம் நம் முன்னோர்கள் காழ்ப்பு உணர்ச்சி எதுவுமின்றி சங்க காலம் முதல் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சம்ஸ்கிருதம் இல்லாமல் எந்த இந்தியனும் எந்த இந்திய மொழியையும் பேசவே முடியாது! —- இருதயம், மனம், காமம், நீலம் – இது போன்ற நூற்றுக் கணக்கான சம்ஸ்கிருதச் சொற்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்கள் பெயர்கள் பலவும், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொற்கள்!!!

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:– யார் யார் பெயர்களில் எல்லாம் ராஜா, இந்திரன், சரஸ்வதி, பாரதி, சோம, சூர்ய, ஆதித்ய, கருணா, நிதி, கீர்த்தி, வீர,மணி, தாச,க்ருஷ்ண, சாந்தி முதலியன வருகின்றனவோ அவை எல்லாம் ரிக்வேதத்தில் உள்ள சொற்கள் என்பதை அறிக.

தமிழுக்கு மிக,மிக, மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம். இந்த அளவு நெருக்கத்துக்கு வேறு எந்த மொழியும் தமிழுக்கு பக்கத்தில் வரவே முடியாது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அவை எல்லாம் தமிழின் சஹோதர மொழிகள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

-சுபம்-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: