கண்டோம்! கண்டோம்!! கண்டோம்!!! கண்ணுக்கினியன கண்டோம்!! 2 குட்டிக் கதைகள்

parrot_reflection

Compiled by London swaminathan

Post No. 1798: Dated 14th April 2015

Uploaded at London Time 10–28

கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே. — நம்மாழ்வார்

சேரவாரும் ஜகத்தீரே!!

கிளிகளுக்கு எப்படி பேசுவதற்குக் கற்றுக் கொடுப்பார்கள் தெரியுமா? அதை ஒரு தனி அறையில் கண்ணாடிக்கு முன் உட்கார வைத்துவிட்டு திரைக்குப் பின்னால் பயிற்சியாளர் நிற்பார். அவர் சின்னச் சொற்களைக் கூறுவார். கண்ணாடிக்கு முன் நிற்கும் கிளி, தனது உருவத்தை அதில் பார்த்துக் கொண்டு இருக்கும். பயிற்சியாளரின் குரலைக் கேட்டவுடன், தனக்கு முன் கண்ணாடியில் உள்ள கிளிதான் பேசுகிறது என்று நினைத்துக்கொண்டு இதுவும் பதிலுக்குக் குரல் கொடுக்கும்.

பயிற்சியாளர் பெரிய பெரிய சொற்களைச் சொல்லச் சொல்ல அதே குரலில் கிளியும் பேசத்துவங்கும். பிறகு இருவர் குரலும் ஒன்றாகவே இருக்கும். குருவும் இப்படித்தான் தனது சீடர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார். மனிதர்தான் கற்பிக்கிறார் என்றாலும் அவர் பின்னால் ஒளிந்திருப்பவர் கடவுள். குருவுக்கு ஞான ஒளி ஊட்டி குருவின் வாய் மூலமாக நமக்குக் கற்பிக்கிறார். குருவிடமிருந்து வரும் கட்டளைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வரும் வாக்கியங்கள் என்பதை சீடன் அறியவேண்டும். கடவுளும் குருவும் ஒன்றே.

guru3

இதனால்தான் இந்துக்கள், குருகுலப் பள்ளிகளில் தினமும்

குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஸ்வர:

குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

–என்று சொல்லி வணங்கி விட்டு பாடத்தைத் துவங்குவார்கள். சில இடங்களில் பாடம் முடிந்தவுடனும் சொல்லுவர்.

caged-parrots2

பறவையும் கைதியும்

ஐரோப்பாவில் எவ்வளவோ யுத்தங்கள் நடந்தன. அதில் ஒரு யுத்தத்தில், சிறைப் பிடிக்கப்பட்ட ஒரு வீரனுக்கு 15 ஆண்டு சிறைவாசம் கிடைத்தது. பின்னொரு காலத்தில் இரு நாடுகள் இடையே சமரச–சமாதான உடன்படிக்கை ஏற்படவே அந்தக் கைதி விடுவிக்கப்பட்டான். அவன் வெளியே வரும்போது அவனை வரவேற்க வந்த ஒரு நண்பன் ஐம்பது பவுண்டுகள் (பிரிட்டிஷ் நாணயம்)  உள்ள ஒரு பர்ஸைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

கைதிக்கு ஒரே ஆனந்தம், பேரானந்தம்!

“விடுதலை,விடுதலை விடுதலை!!! ((பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!!! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!!! (பாரதியார்))”

என்று பாடிக் கொண்டே தெருவில் கூத்தாடிக் கொண்டு வந்தான். வழியில் பறவைகள், செல்லப் பிராணிகளை விற்கும் ஒரு கடையைப் பார்த்தான். கூண்டுக்குள் நிறைய கிளிகள் கீச்சு, கீச்சு என்று கத்திக் கொண்டிருந்தன. கடைக்குள் சென்று எல்லாப் பறவைகளுக்கும் என்ன விலை என்று கேட்டான். கடைக்காரன், 49 பவுண்டுகள் 99 காசுகள் என்று சொன்னான். உடனே கையில் உள்ள எல்லா பணத்தையும் கொடுத்து விட்டு பறவைகளுடன் வெளியே வந்தான். கூண்டின் கதவைத் திறந்து விட்டு, ஒவ்வொரு பறவையாக வெளியே வரும்போது பேரானந்தம் அடைந்து கைகொட்டி ஆரவாரம் செய்தான். எல்லாப் பறவைகளும் விடுதலயானவுடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினான்.

chaitanya 3

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த கடைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம். “அன்பரே, கையில் உள்ள பணம் எல்லாவற்றையும் கொடுத்து விலைக்கு வாங்கிய எல்லாப் பறவைகளையும் விடுதலை செய்து இப்படி ஆனந்த நடனம் ஆடுகிறீர்களே, நீங்கள் யார், என்ன செய்தி?” என்று கேட்டான்.

“நண்பரே, நான் ஒரு போர்க்கைதி; 15 ஆண்டு சிறையில் கிடந்துவிட்டு இன்று தான் விடுதலை ஆனேன். இந்த பரந்த வானம், புதிய காற்று, பரிபூரண சுதந்திரத்தின் அருமை பெருமை எனக்குத்தான் தெரியும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூண்டில் அடைபட்ட இப் பறவைகளுக்கும் விடுதலை தர விரும்பினேன்” — என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.

நம்முடைய குரு மார்களும் இப்படித்தான். பரமானந்தம். சச்சிதானந்தம், பிரம்மானந்தம் என்றெலாம் வருணிக்கப்படும் இறைவனின் பேரருளைக் கண்ட பின்னர், மற்றவர்களுக்கும் விடுதலை (வீடு பேறு= மோக்ஷம்) கிடைப்பதற்காக நம்மையும் ‘அறியாமை’ என்னும் சிறையில் இருந்து விடுவிக்க ஓடோடி வருகின்றனர்.

சைவ, வைஷ்ணவப் பெரியார்களான நால்வர், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள் பாடல்களைப் பயில்வோருக்கு இது தெள்ளிதின் விளங்கும்.

“கண்டோம், கண்டோம், கண்டோம்!!!

கண்ணுக்கினியன கண்டோம், தொண்டீர் எல்லோரும் வாரீர்” — என்கிறார் ஒரு ஆழ்வார். “சேரவாரும் ஜகத்தீரே!” –என்று அறைகூவல் விடுக்கிறார்.

இன்னொருவரோ “அடடா! கடை விரித்தோம், கொள்வாரிலையே” – என்று வருந்துகிறார். “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; எண்ணில் நல்கதிக்கு யாதும் ஓர் குறைவிலை” — என்று உறுதி தருகிறார் சம்பந்தர்.

1caitanya-dancing

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், இதை இன்னும் அழகாக விளக்குகிறார். சில ஞானிகள் பேரானந்தக் கடலைப் பார்த்தவுடன் ஆர்வம் தாங்க மாட்டாமல், அதில் உடனே விழுந்து நீச்சல் அடிக்கின்றனர். உப்பு பொம்மை கடல் ஆழத்தைக் காணப்போவது போல போய் அவர்கள் ஆனந்தக் கடலில் கரைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அடடா! இப்பேற்பட்ட பேரானந்தக் கடலை அறியாமல் சிற்றின்பக் கடலில் மூழ்கித் தவிக்கும் மக்கள் இனத்தை மீட்போம் என்று நினைத்து, மிகவும் கஷ்டப்பட்டு, தங்கள் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு, திரும்பி வந்து,  மக்களிடம் கதறுகின்றனர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அவர்தம் கொள்கை.

chaitanya 2

சைதன்ய மஹாப்ரபு எல்லோரையும் பேரானந்தத்தில் மூழ்கடிக்கும் காட்சி.

சுபம்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: