ராவணன் சீதையை தூக்கிச் செல்லுதல்
Written by S NAGARAJAN
Research Article No: 1828
Date: 26 April 2015; Uploaded in London at 7-19 am
சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3
3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!
ச.நாகராஜன்
கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-
கே ப்ரவீணா: குதோ ஹீனம் ஜீர்ணம் வாசோம்ஷுமாஞ்ச்ச க: I
நிராகரிஷ்னவோ பாஹ்யம் யோகாசாராச்ச கீத்ருஷா: II
இதன் பொருள் :- யார் புத்திசாலி? (விஞ்ஞானா: – படித்த மனிதர்கள்)
பழைய துணி எதில் குறைபாடுடையது? – (நவாத் – புதியதில்)
யார் கிரணங்களைக் கொண்டுள்ளார்? – (இனா: – சூரியன்)
புத்த மத யோகசாரா பிரிவைச் சேர்ந்தோர் எப்படி இருப்பர்? (விஞ்ஞானவாதின – புத்தமத தத்துவத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞானவாதிகள் என அழைக்கப்படுகின்றனர்)
விஞ்ஞானவாதின: என்ற சொற்றொடரைப் பிரித்தால் விஞ்ஞானா:, நவாத், இனா, விஞ்ஞானவாதின: என்ற அனைத்துச் சொற்களும் கிடைப்பதைப் பார்க்கலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் இந்த ஒரே சொற்றொடர் விடையைத் தருகிறது. இதைக் கண்டு பிடிப்பது தான் கஷ்டம்!
இனி அந்தர் ஆலாப வகை புதிர் ஒன்று. இதில் பாடலுக்குள்ளேயே விடை இருப்பதால் புரிந்து கொள்வது சுலபம்.
கே பூஷயந்தி ஸ்தனமண்டலானி
கோத்ருஷ்யுமா சந்த்ரமச: குத: ஶ்ரீ:
கிமாஹ சீதா தசகண்டநீதா
ஹாராமஹாதேவர்தாதமாத:
கடைசி வரி புதிர்களுக்கு விடையாக அமைகிறது. ஆகவே புதிரை விடுவிப்பது வெகு சுலபம்.
இதன் பொருளைப் பார்ப்போம்:-
வட்டமான மார்பகங்களை எது அலங்கரிக்கிறது – ஹாரம்
பார்வதி எப்படி இருக்கிறாள்? மஹாதேவனுடன் இணைந்து இருக்கிறாள் (மஹாதேவ)
சந்திரனின் பிரகாசம் எப்போது வருகிறது? – இருளிலிருந்து (ராத்)
சீதையை தசகண்ட ராவணன் தூக்கிச் செல்லும் போது அவள் என்ன கூறினாள் – ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாத)
(ஹா, ராமா, ஹா, மைத்துனரே, அப்பா, அம்மா என்று சீதை அலறினாள்)
இது அமைந்துள்ள விருத்தம் உபஜாதி (இந்திரவ்ரஜா மற்றும் உபேந்திரவ்ரஜா) விருத்தமாகும்.
இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் புதிர்களை பதம் பதமாகப் பிரித்து அர்த்தம் கண்டு புதிர்களை அவிழ்த்து விடை கண்டு மகிழலாம்.
பொறுமையும், ஆவலும் இருந்தால் போதும்; புதிருக்கு விடை கண்ட மகிழ்ச்சி ஏற்படும்!
*************