கட்டுரை எண்: 1832 தேதி: 28 ஏப்ரல் 2015
எழுதியவர் சந்தானம் நாகராஜன்
லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை 6-24
சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3
4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?
ச.நாகராஜன்
கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-
அநுகூல விதாயிதைவதோ
விஜயீ ஸ்யான் நநு கீத்ருஷோ ந்ருப:
விரஹின்யபி ஜானகீ வனே
நிவஸந்தி முதமாதவௌ குத: I
இதற்கு விடை கண்டுபிடிப்பது கஷ்டம் தான்!
விதி ஒரு அரசனுக்கு அநுகூலமாக இருக்கும் போது அவன் எப்படி இருப்பான்?
விடை:- குசலவார்த்திதா: (மிகுந்த உற்சாகத்துடன் இருப்பான்)
தன் கணவனை விட்டுப் பிரிந்து காட்டில் சீதை இருந்த போதும் கூட அவள் எப்படி மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தாள்?
விடை:- குச லவ வர்த்திதா (குச, லவ ஆகிய இரு மகன்களும் உடன் இருந்ததால் சீதை சந்தோஷமாக இருந்தாள்.)
வியோகினி சந்தத்தில் அமைந்த செய்யுள் இது.
குசலவார்த்திதா என்ற ஒரே சொற்றொடரே இரு கேள்விகளுக்கும் விடையை அளிப்பது கண்டு மகிழலாம்!
இன்னும் ஒரு புதிர்:-
அன்யஸ்த்ரீஸ்ப்ருஹ்ருயாலவோ ஜகதி கே பத்ம்யாமகம்யா ச கா
கோ தாது தஸ்ஷனே ஸமஸ்தமனுஜை: ப்ராவ்யர்தேஹநிர்ஷம் I
வ்ருஷ்ட்வைகாம் யவனேஷ்வரோ நிஜபுரை பத்யானனாம் காமினீம்
மித்ரம் ப்ராஹ கிமாதரேன சஹஸா யாராநதீதம்ஸபா II
அடுத்தவரின் வீட்டுப் பெண்களை யார் விரும்புகின்றனர்? (விடை ஜாராஸ் அதாவது கள்ளக் காதலர்கள்)
கால்களால் கடக்கப்படாதது எது? (விடை: நதி)
தஸ்னா என்ற (சம்ஸ்கிருத) வார்த்தைக்கு மூலம் எது?
விடை :- தம்ஸ் – கடிப்பது என பொருள்
இரவும் பகலும் எல்லா மனிதரும் எதை அடைய பிரார்த்தனை புரிகின்றனர்?
விடை: மா: – லக்ஷ்மி – அதாவது பணம்
அழகிய தாமரை போன்ற முகமுடைய அழகியைப் பார்த்த பின்னர் யவன அரசன் ஆவலுடன் தன் நண்பனிடம் கூறியது என்ன?
விடை:- யாரா ந தி–தம்ஸா மா (இதன் பொருள் – இப்படிப்பட்ட அழகிய பெண் இதற்கு முன் ஒரு போதும் பார்க்கப்பட்டதில்லை!)
யாரா ஜாரா – காதலர்
நதி – ஆறு
தம்ஸ் – தஸ்னா என்ற வார்த்தையின் மூலம்
மா – பணம்
இந்த சொற்களின் சேர்க்கை பல கேள்விகளுக்கு விடை அளித்து விட்டது.
செய்யுளைச் சொல்லி விட்டு புதிரை அவிழுங்கள் என்றால் விடையைக் கண்டு பிடிக்க முடியுமா என்ன?
சார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்தில் அமைந்த செய்யுள் இது.
பழைய கால ராஜ சபைகளில் ராஜாவின் முன்பு, இது போல பண்டிதர் ஒருவர் புதிரைப் போட மற்றவர்கள் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும், இல்லையா!
***************