பணிவு
Written by London swaminathan
Post No.1851; Date: 7 May 2015
Uploaded at London time: 19-51
புலவர்கள் பணிவும் அடக்கமும்!!
வாய் ஆறாக வயிறு களனாக உணரும் அறுசுவைகளோ சிறிது நேரமே நிலைத்து நிற்கும். செவி ஆறாகச் சிந்தை களனாக உணரத் தக்க கவிச் சுவையோ தெவிட்டாத தெள்ளமுதம் ஆகும்.
வால்மீகி முனிவர் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தவர். பின்னர் முனிவர் ஆனவர். காட்டில் வசித்த அவர் ஒருநாள், ஒரு வேடனைக் கண்டார். ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த நேரத்தில் ஆண் பறவையை வில்லால் அடித்துக் கொன்றான் வேடன். பெண் பறவையோ சோகத்துடன் தனது கணவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே வால்மீகி, அவனைச் சபித்தார். அந்த சாபம் பாடல் வடிவில் வெடித்தது. அட! இது என்ன ஆச்சர்யம்! நான் சபித்த சாபம் “அனுஷ்டுப் சந்தஸ்” என்ற யாப்பில் ஒரு பாடலாக வந்ததே என்று வியந்தார். அதாவது, “சோகத்திலிருந்து ஸ்லோகம்” பிறந்தது.
அந்த நேரத்தில் பிரம்மதேவன் அவர் முன்னிலையில் தோன்றி சகல குண சம்பன்னனான, சத்ய பராக்ரமனான இராமபிரானின் தெய்வீகக் கதையைப் பாடச் சொன்னார். அப்படிப் பிறந்ததே ராமாயணம்.
இப்பேற்பட்ட வால்மீகியின் அற்புதமான ராமயணத்தைப் பாடவே தான் தமிழில் ராமாயணத்தை இயற்ற முயன்றதாக கவிச் சக்ரவர்த்தி கம்பன் கூறுகிறான்:
“வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே”
இதற்கு முன் தனது செயலானது, ஒரு பெரிய பாற்கடலை பூனை நக்கி, நக்கி குடிக்க முயற்சிப்பது போலத்தான் தன் முயற்சியும் என்று அவை அடக்கத்துடன் கூறுகிறார்:
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!
பூசை=பூனை, காசு இல் கொற்றம்= குற்றமற்ற வெற்றியை உடைய
கவிதை என்பது என்ன?
உள்ளத்திலிருந்து பீறிட்டெழும் உணர்ச்சியே கவிதை. இந்த உணர்ச்சி இரக்கத்தின் காரணமாகவோ, அன்பின் காரணமாகவோ , அழகை ரசிப்பதன் காரணமாகவோ, தார்மீக கோபத்தின் காரணமாகவோ எழக்கூடும்.
காளிதாசன் எழுதிய மாளவிகா அக்னி மித்ரம் என்ற நாடகத்தில் சொல்லுகிறார்:
பழையதெல்லாம் நல்லது; புதியது எல்லாம் பயனற்றது என்று ஒதுக்கி விடாதீர்கள். அறிவுள்ள விமர்சகர்கள் தக்க முறையில் ஆராய்ந்து முடிவு எடுப்பர். மூடர்களோவெனில் மற்றவர் முடிவைச் சார்ந்து நிற்பர் என்கிறார்.
ரகுவம்ச காவியத்துவக்கத்தில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படது போல சூர்ய வம்சப் பேரரசர்கள் பற்றித் தான் எழுத முயற்சிப்பதாகவும், இது ஒரு பெரிய சமுத்திரத்தை சிறிய படகின் மூலம் கடப்பதற்குச் சமம் என்றும் சொல்லுவார்.
ஆயினும் முன்னோர்கள் (வால்மீகி போன்ற ஆதி கவிகள்) ஏற்கனவே துளைத்த வைரத்தில் நூலை நுழைப்பது தனக்கு சிரமமான பணியல்ல என்றும் பணிவோடு பேசுகிறார்.
ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி
இந்தியில் ஒரு பழமொழி உண்டு:
ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹாம் பஹுஞ்சே கவி—என்று. சூரியன் (ரவி) பூக முடியாத இடத்திலும் கவி(ஞன்) புகுந்து விடுவான் என்பது இதன் பொருள். இதற்கு உதாரணமானவர்கள்: வால்மீகி, காளிதாசன், கம்பன், இளங்கோ, பாரதி முதலியவர்கள் ஆவர்.
பெரிய கலைக் களஞ்சியத்தை – ப்ருஹத் ஜாதகம் – ப்ருஹத் சம்ஹிதா முதலிய நூல்களை எழுதிய வராஹமிகிரர்,
சோதிட சாத்திரம் என்னும் பாற்கடலை, எனது புத்தி என்னும் மந்தர மலையால் கடைந்து, உலகிற்கு சந்திரன் போல ஒளியூட்டக்கூடிய சாத்திரத்தைக் கொடுக்கிறேன். முன்னோர் சொன்ன எல்லாவற்றையும் சுருக்கித் தந்துள்ளேன். அவற்றுடன் எனது நூலை ஒப்பிட்டு, தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுங்கள் என்று அடக்கமாக வாசிக்கிறார்.
கவிஞர்கள் மாபெரும் அறிவாளிகள்; அதே நேரத்தில் மிக மிகப் பணிவுடையோர்.
கவிஞர்கள் இறக்கலாம்; கவிதைகள் இறக்காது; அவை அமரத்துவம் வாய்ந்தவை!