Compiled by London swaminathan
Post no.1888
Date: 25 May 2015; London Time காலை 8-14
கதை -3
இறைவனின் நாமம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை விளக்க நேற்று சுவாமி ராமதாஸ், ஸ்ரீசத்ய சாய் பாபா சொன்ன இரண்டு கதைகளைக் கண்டோம். இன்று ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன இரண்டு கதைகளைக் காண்போம்
ஒரு மன்னன், ஒரு பிராமணனைக் கொன்றதால் அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினான். அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை ராம, ராம, ராம என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்து விட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார்.
அவருக்கு மகன் மீது கடும் கோபம். “அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும் ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய் விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பயாக” என்று சபித்தார். அவர்தான் குஹனாக அடுத்த ஜன்மத்தில் பிறந்தார்.
(ராமனுக்குச் சேவகம் செய்வதில் மனம் மகிழ்ந்து ராமனால் ஒரு தம்பியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் குகனென்னும் வேடன். இன்றும் கூட முக்கியமான சடங்குகளின் போது (திதி, தர்ப்பணம்) பிராமணர்கள் பழைய பாவங்களிலிருந்து விடுபட்டுத் தூய்மையடைய ராமனின் பெயரை மூன்று முறை சொல்வர். ஒரு முறையாவது தூய்மையான மனத்துடன் சொல்லட்டுமே என்பதற்காக மூன்று முறை போலும்!)
கதை 4
ஒருவன் கடலைக் கடக்க விரும்பினான். அவனிடம் படகும் இல்லை, காசும் இல்லை. உடனே விபீஷணன், “அன்பரே! கவலை வேண்டாம். இதோ இதை வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வளவு தூரம் வரை வேண்டுமானாலும் கடலில் நடந்தே போகலாம். ஆனால் சந்தேகம் வந்துவிட்டால் கடலில் மூழ்கி விடுவீர்கள். ஆகையால் முழு நம்பிக்கையுடன் நடவுங்கள்” — என்று சொல்லி ஒரு இலையை எடுத்து அதில் ராமனின் பெயரை எழுதி அந்த ஆளின் வேட்டியில் ஒரு ஓரத்தில் முடிந்து விட்டார். அந்த ஆளுக்கு இந்த இலை விவரம் தெரியாது.
நம்பிக்கையுடன் கடல் தண்ணீர் மீது காலை வைத்தார். விறு விறு என்று நடந்து சென்றார். அவருக்கே நம்ப முடியவில்லை. ஆச்சர்யம் தாங்கவில்லை. ஆர்வம் கொப்புளிக்கவே இடுப்பில் என்ன மந்திரக் குளிகையை விபீஷணன் முடிந்து விட்டிருக்கிறார் என்று பார்ப்போமே என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்தார்.
வேட்டியின் முடிச்சில் இருந்த இலையை எடுத்தார். அதில் ராம என்ற பெயரைக் கண்டார். பூ! இவ்வளவு தானா? வெறும் ராமனின் பெயர்தானா! என்றார். அவ்வளவுதான் கடலில் மூழ்கி விட்டார்!
(நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு– என்கிறார் பாரதி. அந்த நம்பிக்கை போய் சந்தேகம் உள்ளே நுழைந்தாலோ இறைவன் நம்மிடமிருந்து ஓடிப் போய் விடுவான். சம்சயாத்மா விநஸ்யதி = சந்தேகப் பேர்வழிக்கு அழிவு நிச்சயம் – என்கிறான் கண்ணன் பகவத் கீதையில்!)
அடைப்புக் குறிக்குள் இருப்பது என் கருத்து; ஏனையவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் மொழிகள்.
You must be logged in to post a comment.