விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

vive1

Compiled by London Swaminathan

Article No.1892;  Dated 27 மே 2015.

Uploaded at London time 11-55 am 

 

2015 ஜூன் காலண்டர்

விவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்!

இந்த மேற்கோள்கள் எல்லாம் “எழுமின்! விழிமின்!” என்ற விவேகானந்த கேந்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி.

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- ஆனி (ஜூன் 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– ஜூன் 1: வைகாசி விசாகம்; 19-ரம்ஜான் மாத துவக்கம், 24- ஆனி உத்தரம் நடராஜர் அபிஷேகம்

 

ஏகாதசி  : 12 & 28; அமாவாசை- 16;  பவுர்ணமி- 2.

முகூர்த்த நாட்கள்:– 4, 7, 8, 12, 26, 29

 

 vive2

ஜூன் 1 திங்கட்கிழமை

 

தன்னம்பிக்கை இலாதவன் தான் நாஸ்தீகன்.. கடோபநிஷதத்தைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும். நசிகேதன் சொல்கிறான்,” நான் பலரினும் மேம்பட்டவன்; எவருக்கும் தாழ்ந்தவனல்லன்; எங்குமே நான் கடைசி அல்ல; ஏதாவதொன்றைச் செய்ய முடியும்” – பக்கம் 81

 

ஜூன் 2 செவ்வாய்க்கிழமை

நசிகேதனின் நம்பிக்கையுடன் 12 சிறுவர்கள் கிடைத்தால்  இந்த நாட்டின் சிந்தனையையும், நாட்டங்களையும், அபிலாஷைகளையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பிவிட்டுவிட முடியும் –பக்கம் 206

 

ஜூன் 3 புதன்கிழமை

படித்த இளஞர்களை ஒன்றுதிரட்டி இணையுங்கள். புல்லைக்கூட கயிறாகத் திரித்துப் பின்னிப் இணைத்தால் அதைகொண்டு மத யானையையும் கட்டிப் போட்டுவிட முடியும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள் -–பக்கம் 207

 

ஜூன் 4 வியாழக்கிழமை

பெரிய கோப அலை மனதில் எழுந்தால் அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கோபத்தைக் கட்டுப் படுத்தலாம்.அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கடும் கோபம் நிலவும் நேரத்தில் குழந்தை உள்ளே வருகிறது. குழந்தையை அவள் அணைத்து முத்தமிடுகிறாள். அங்கே  பழைய கோப அலை செத்துப் போய் புதிய அன்பு அலை எழுகிறது. –பக்கம் 203

 

ஜூன் 5 வெள்ளிக்கிழமை

தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன. அவையின்றி வாழ்வு எப்படி இருக்கும்? போராட்டங்கள் இல்லை என்றால் வாழ்க்கையே வாழத் தகுதி அற்றதாகிவிடும். வாழ்க்கையாகிற கவிதை எங்கே இருக்கும்? –பக்கம் 194

 

vive3

ஜூன் 6 சனிக்கிழமை

சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றை எல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனதின் அறிகுறி. ஆகவே இப்படி எண்ணம் வரும்போது ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்–பக்கம் 191

 

ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை

ஓவியம் தீட்டுகிறவன், தான் என்ற அஹங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் மூழ்கி விடுவானாயின், அவனால் உன்னதமான ஓவியங்களைத் தீட்டமுடியும். யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றிவிட்ட மனிதன் தன்னலம் கருத மாட்டான். எல்லாக் காரியங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கீதை உபதேசிக்கிறது. –பக்கம் 185

 

ஜூன் 8 திங்கட்கிழமை

பண ஆசையோ, புகழ் ஆசையோ, வேறெந்த ஆசையோ இன்றி, வேறு எந்த உள் நோக்கமும் இல்லாமல், வேலை செய்கிறவன் தான் மிகச் சிறப்பாக வேலை செய்யமுடியும். அவ்வாறு ஒரு மனிதனால் வேலை செய்ய முடியும்  பொழுது அவன் ஒரு புத்தன்  ஆகி விடுவான். –பக்கம் 182

 

ஜூன் 9 செவ்வாய்க்கிழமை

நாம் எல்லாம் பிச்சைக்காரர்கள். நாம் எதைச்செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாம் எல்லாம் வியாபாரிகள்; வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம்.அந்தோ! அன்பைக் கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே! பக்கம் 181

 

ஜூன் 10 புதன்கிழமை

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும். மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்—பக்கம் 173

 

vive4

ஜூன் 11 வியாழக்கிழமை

ஒரு தலைவனிடம் ஒழுக்கம் இல்லாவிட்டால் அவனிடம் மக்களுக்குப் பக்தி ஏற்பட முடியாது. அவனிடம் மாசு மறுவற்ற தூய்மை இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும் – பக்கம் 168

 

 

ஜூன் 12 வெள்ளிக்கிழமை

மகாவீர ஹனுமானின் ஒழுக்கப் பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும். ராமச் சந்திரனின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்று பாருங்கள், வாழ்வையோ, சாவையோ பற்றி அவர் ஒரு சிறிதும் அக்கறைப் படவில்லை. புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியமான விவேகி அவர். எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் –பக்கம் 176

 

ஜூன் 13 சனிக்கிழமை

உலகத்தின் பாரங்களை எல்லாம் சுமக்க நீங்கள் ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்..ஓர் எருதின் கொம்பில் ஒரு கொசு நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தது. அதற்கு மனச் சாட்சி உறுத்தவே, மன்னிக்கவும் நான் உங்களைத் தொந்தரவு செய்து விட்டேன்; போய்விடுகிறேன் என்றது. எருதோ, தொந்தரவு எதுவுமில்லை. உங்கள் குடும்ப சகிதமாக வந்து உட்கார்ந்து விட்டுப் போங்கள். நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும் என்றது. –பக்கம் 194

 

ஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் த்லைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது – பக்கம் 166

 

ஜூன் 15 திங்கட்கிழமை

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக தனை ஒப்புக் கொள்வார்கள் – பக்கம் 164

vive5

ஜூன் 16 செவ்வாய்க்கிழமை

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களா? எங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? தாம் வாழ்வதற்காக மற்ற னைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும் – பக்கம் 136

 

ஜூன் 17 புதன்கிழமை

பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எலா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூட, நீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது. — பக்கம் 156

 

ஜூன் 18 வியாழக்கிழமை

ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து படை எடுத்து வந்தார்கள் என்றும் பூர்வீக குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கிவிட்டுப் பாரதத்தில் குடி ஏறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்படமற்ற பொய்; முட்டாள்தனமான பேச்சு ஆகும்; இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயல் ஆகும். – பக்கம் 134

 

ஜூன் 19 வெள்ளிக்கிழமை

நாம் அச்சமற்ற உயர்ந்த வீராங்கனைகளைத் தோற்றுவிப்போம். சங்க மித்திரை, மீரா, அஹல்யா, லீலா முதலியோர் விட்டுச் சென்ற உயர் பரபம்பரையைப் பின்பறக்கூடிய பெண்மணிகளை உண்டாக்குவோம். தியாகிகளை, திருத் தொண்டர்களை, வீரர்களைப் பெற்றெடுக்கும் தாய்மார்களாக அவர்களை நாம் உருவாக்குவோம் – பக்கம் 128

ஜூன் 20 சனிக்கிழமை

உபநிடதங்கள், பெரும் சக்திச் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரமளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் பெறச் செய்ய, பலம் பெறச் செய்ய, சக்தித் துடிப்பு பெறச் செய்ய முடியும் – பக்கம் 108

 

vive6

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை

நான் ஆண்களுக்கு எதைக் கூறுவேனோ அதையே பெண்களுக்கும் கூறுவேன். பாரத நாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். பாரத நாட்டின் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வையுங்கள்; வலைமை பெற்றிருங்கள்:நம்பிக்கை கொள்ளுங்கள்; வெட்கப்படாதிருங்கள்; பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறிது உண்டென்றாலும், பிறருக்குக் கொடுப்பதற்கு ஹிந்து மக்களிடம் உலகில் எந்த மக்களினத்தைக் காட்டிலும் அளவிட முடியாத விஷயங்கள் உள்ளன என்பதை நினைவிற் கொள்ளுங்கள் – பகம் 129

 

ஜூன் 22 திங்கட்கிழமை

அதர்வ வேத சம்ஹிதையிலிருந்து அற்புதமான ஒரு மந்திரம் என் நினைவுக்கு வருகிறது:-“நீங்கள் அனைவரும் ஒரே மனத்துடன் இருங்கள்; நீங்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் இருங்கள். ஏனெனில் பழங்காலத்தில் தெய்வங்கள் ஒரே மனத்துடன் இருந்ததால் ஆகுதிகளைப் பெற முடிந்தது. கடவுளர் ஒரே மனத்துடன் இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிகிறது.” – என்று கூறுகிறது. ஒருமனப்பட்டு விளங்குவதே ஒரு இயக்கத்தின் வலிமையின் ரகசியம் – பக்கம் 99

 

ஜூன் 23 செவ்வாய்க்கிழமை

நான் ஒரு ஆங்கிலேயன், எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று ஒரு ஆங்கிலச் சிறுவன் கூறுவான்.அமெரிக்கச் சிறுவனும், ஐரோப்பியச் சிறுவனும் கூட அப்படியே கூறுவார்கள். இங்கே நமது சிறுவர்கள் அப்படிச் சொல்லுவார்களா? முடியாது. அவர்களுடைய தந்தையர்கள் கூட அப்படிச் சொல்ல மாட்டார்களே! நாம் அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம் – பக்கம் 110

 

ஜூன் 24 புதன்கிழமை

பிறரிடமிருந்து நாம் பல விஷயங்களைக் கற்கத்தான் வேண்டும்; ஆம், கற்க மறுப்பவன் செத்தவன் ஆகிவிட்டான் எனக் கொள்க.”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும், அவளை நீ மனைவியாகக் கொள்ளுவாயாக. தாழ் குடிப் பிறந்த ஞானியிடமிருந் தாவது, உயர்ந்த ஞானத்தை, அவர் திருவடிகளில் சேவை செய்து பெறுவாயாக; சண்டாளனிடமிருந்தாவது, அவனுக்குத் தொண்டு செய்து முக்திக்கு மார்க்கத்தைப் பெறுவாயாக – என்று மனு (2-238) கூறியுள்ளார். பிறரிடமிருந்து நல்லன அனைத்தையும் கற்போம் –பக்கம் 89

 

ஜூன் 25 வியாழக்கிழமை

நண்பர்களே! பலமுள்ளவர்களாகுங்கள். நான் அளிக்கக்கூடிய புத்திமதி இதுதான்; நீங்கள் கீதையைப் படிப்பதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே இதைச் சொல்கிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன் – பக்கம் 96

vive7 

ஜூன் 26 வெள்ளிக்கிழமை

சமூக சீர்திருத்தவாதிகளின் ஆவேச மனோ வேகம் மின்சார அதிர்ச்சி போல ஆகி, தூங்குகிற இந்த பிரம்மாண்டமான சமூகத்தை எழுப்ப அவசியமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் நிர்மாணிப்பவர்களாக இராமல், தகர்க்கிறவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்களே அழிந்து போகும் தன்மையினராதலால் மடிந்தனர். –பக்கம் 55

 

ஜூன் 27 சனிக்கிழமை

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அவதார காலம் முதல் கீழ்த் திசையின் அடிவானத்தில் இளம் சூரியனின் கதிர்களால் அருணோதய ஒளி தோன்றியுள்ளது. காலம் செல்லச் செல்ல அது இந்த நாட்டை மத்தியான கால சூரியனின் வெளிச்சத்தால் ஒளிபெறச் செய்யும் – பக்கம் 72

ஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை

நாம் ஒருபோதும் புதிதாகப் படைப்பதில்லை; இருப்பனவற்றை இடம் மாற்றி வைக்கிறோம்; புதிதாக எதுவும் நமக்குக் கிடைக்காது. பொருள்களின் அமைப்பு நிலையைத் தான் மாற்ற முடியும், விதையானது பொறுமையாக மெதுவாக மரமாக வளர்கிறது. உண்மைக்காக நமது சக்திகளைச் செலவிட வேண்டும் புதிய உண்மைகளை உற்பத்தி செய்ய முயலக் கூடாது.  பக்கம் 63

ஜூன் 29 திங்கட்கிழமை

வாழும் அளவு நான் கற்கிறேன் – என்று சொல்வார் ஸ்ரீ இராம கிருஷ்ணர்.கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் புகுந்துவிட்டதாக அறிந்து கொள்ளுங்கள். ஆம்! மேலை நாட்டினரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன.—பக்கம் 52

 

ஜூன் 30 செவ்வாய்க்கிழமை

இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம்; நீதி நெறி ஒழுக்கத்துக்கும் ஆன்மீகத்துக்கும் புனிதமான இடம்; தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. உலகில் மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பூமி பாரதம்- பக்கம் 23 

 -சுபம்-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: